

Post No. 8209
Date uploaded in London – – –20 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
18.காவேரி தீர ஸ்தலங்கள்!
கங்கையில் புனிதமாய காவிரி நதி தீரத்தில் இரு கரைகளிலும் அமைந்துள்ள ஸ்தலங்கள் எவ்வளவு தெரியுமா?
777 தலங்கள்!
இது தவிர காவேரி பாயும் பகுதிகளில் உள்ளே சென்று பார்த்தால் இருக்கும் தலங்கள் எத்தனையோ! எண்ணி மாளாது!
இந்த 777 தலங்களில் தேவார பாடல் பெற்ற தலங்கள் 276 என்பதைப் பார்த்தோம். பட்டியலும் கொடுக்கப்பட்டு விட்டது.
காவிரி உற்பத்தியாவதிலிருந்து கடலில் சங்கமம் ஆகும் வரை காவிரியின்
வடகரையில் உள்ள தலங்கள் 400.
தென்கரையில் உள்ள தலங்கள் 377.

வடகரையில் உள்ள 400 தலங்களில் கூர்க் பகுதியில் 41 தலங்களும், மைசூர் பகுதியில் 67 தலங்களும், கோவை, சேலம் பகுதிகளில் 115 தலங்களும், திருச்சி பகுதியில் 73 தலங்களும், தஞ்சாவூர் பகுதியில் 104 தலங்களும் உள்ளன.
தென்கரையில் உள்ள 377 தலங்களில் கூர்க் பகுதியில் 7 தலங்களும், மைசூர் பகுதியில் 90 தலங்களும், கோவை, சேலம் பகுதிகளில் 117 தலங்களும், திருச்சி பகுதியில் 76 தலங்களும், தஞ்சாவூர் பகுதியில் 87 தலங்களும் உள்ளன.
அட்டவணைப் படுத்தினால் அது இப்படி அமையும் :
———————————————————————-
காவிரி கூர்க் மைசூர் கோவை&சேலம் திருச்சி தஞ்சாவூர் மொத்தம்
வடகரை 41 67 115 73 104 400
தென்கரை 7 90 117 76 87 377
மொத்தம் 48 157 232 149 191 777
இந்த தலங்களின் சிறப்புகளும் கோவில் அமைப்பு, தீர்த்தம், இங்கு வழிபட்ட ரிஷிகள், அவதரித்த மகான்கள் பற்றிய விவரங்களும் அற்புதமான தொகுப்பாக அமையும்.
இப்படிப்பட்ட அரிய விவரங்களை காஞ்சி காமகோடி பீடம் மஹா பெரியவாள் என்று போற்றப்படும் பரமாசார்யாள் ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி அவர்களின் அருள் ஆணைக்கிணங்க பல்வேறு பக்தர்களால் சரியான விவரங்கள் தொகுக்கப்பட்டன.
இந்த விவரங்கள் அனைத்தும் 1956ஆம் ஆண்டு வாக்கில் பரம பக்தரான திரு E.V.கோபாலையர் வசம் ஒப்புவிக்கப்பட்டது.
அவர் தேவைப்பட்ட விவரங்களைச் சேர்த்து சரிபார்த்து ஒரு அரிய நூலை உருவாக்கினார்.
ஸ்ரீ காவேரி ரஹஸ்யம் என்று பெயரிடப்பட்ட நூல் 1961 ஜனவரியில் ஆசார்யாளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 1962இல் புத்தகம் வெளியானது.

நூலில் தெய்வக் காவேரி பற்றிய அரிய ரஹஸ்ய செய்திகளும், பொன்னி நதியைப் போற்றும் புராணப் பகுதிகளும், காவேரியின் உற்பத்திச் சுருக்கம், காவேரி பற்றிய ஸ்தோத்திரங்கள், காவேரியைப் போற்றும் இலக்கியங்கள், காவேரி வளர்த்த மகான்கள், தெய்வப் புலவர்கள், காவேரியின் செல்வங்கள், பிரதக்ஷிண விதியில் க்ஷேத்ரங்களின் விவரணம், காவேரி உபநதி, கிளை நதிகளில் அமைந்துள்ள சில முக்கிய க்ஷேத்திரங்களின் விவரணம், காவேரி ஸ்நான, பூஜா விதிகள், காவேரி நதி பிரதக்ஷிண விதியில் க்ஷேத்ரங்களின் அட்டவணை ஆகியவை அடங்கியுள்ளன.
காவேரி பற்றிய ஒரு சிறிய என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியம் இந்த நூல் என்று உறுதியாகக் கூற முடியும். 276 பக்கங்கள் கொண்ட நூலின் அந்தக் கால விலை ரூ 4/.
காவேரி பாயும் பகுதிகளின் மேப் – வரைபடம், சில முக்கிய கோவில்களின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நூலை உருவாக்க பெரிதும் குறிப்புக்ள் கொடுத்து உதவியவர் சம்ஸ்கிருத பேராசிரியர் டாக்டர் வி. ராகவன் என்று குறிப்பிட்டால் நூலின் தரம் பற்றி உணர முடியும். சரஸ்வதி மஹால் நூல் நிலைய அதிகாரிகளும் தேவைப்பட்ட விவரங்களை வழங்கியுள்ளனர்.
காவேரி தீர மகான்களில் பகவந் நாம போதேந்திர சுவாமிகள், ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரர்கள், ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள், மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள், ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீ ச்யாமா சாஸ்திரிகள், ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர், கம்பர், காளமேகப் புலவர், ஒட்டக்கூத்தர், ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமிகள், பட்டினத்தார், ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர், ஸ்ரீதர ஐய்யாவாள், ஸ்ரீ ராஜு சாஸ்திரிகள், திவான் சேஷய்யா சாஸ்திரிகள் ஆகிய மகான்கள் மற்றும் புலவர்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
தலங்களைப் பற்றிய விவரங்கள் துல்லியமாகவும், சுருக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதைப் படித்தவர்களுக்கே பெரும் புண்ணியம் சேரும் என்றால் காவேரி தலங்களை தரிசித்தும் காவேரி நதியில் நீராடியும் ஆனந்தம் அடையும் பக்தர்கள் அடையும் புண்ணியத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
tags — காவேரி, ஸ்தலங்கள் 777, பாரத ஸ்தலங்கள் – 4


–subham–