5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487)

Written by S NAGARAJAN

 

Date: 27  December 2016

 

Time uploaded in London:-  5-31 AM

 

Post No.3487

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை

 5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு!

 

 

ச.நாகராஜன்

 

“எகிப்தில் உள்ள பிரமிடுகளைத் தவிர அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாலும் செதுக்கப்பட்ட கற்களாலும் சிற்பங்களாலும் முப்பரிமாண சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன” – எகிப்திய அகழ்வாராய்ச்சித் தகவல்

 

  உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று எகிப்திய நாகரிகம் என்றும் எகிப்தில் உள்ள பிரமிடுகள் அபூர்வ சக்தி வாய்ந்தவை என்பதையும் பறைசாற்றி பல நூறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

 

பெரும் நிபுணர்களும் ஆய்வாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் பிரமிடின் சக்தியைப் புகழ்ந்து அதிசயிக்கின்றனர். நெபோலியன் உள்ளிட்ட மாவீரர்கள் பிரமிடின் அமானுஷ்ய சக்தியை நேரில் சென்று அனுபவித்து வியந்திருக்கின்றனர்.

 

 

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எகிப்தில் 118 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து எகிப்தில் அகழ்வாராய்ச்சிப் பணி நடந்து கொண்டே இருக்கிறது.

 

இதன் தொடர்ச்சியாக, இப்போது எகிப்திய வரலாற்றில் புதிய ஒரு சுவையான செய்தி சேர்ந்துள்ளது.

 

5000 வருடங்களுக்கு முந்தைய எகிபதிய நகரம் ஒன்றின் சிதிலமடைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை உலகத்தின் அறிவியல் பத்திரிகைகள் நவம்பர் 2016 இறுதி வாரத்தில் அறிவித்துள்ளன!

 

 

பண்டைக்காலத்தில் இருந்த ஒருங்கிணைந்த பிரம்மாண்டமான எகிப்தில் அபிடாஸ் (Abydos) என்ற பகுதியில் உள்ள இந்த நகரம் பாரோக்களின் ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று மஹம்மதி அஃபிபி என்ற எகிப்திய அரசின் தலைமை அகழ்வாராய்ச்சியாளர் தெரிவித்திருக்கிறார். இவரது அறிக்கை அராபிய மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

இந்த நகரின் கட்டிடங்கள்  களிமண்ணாலான செங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன.

 

கட்டிடங்களின் அருகே ஒரு கல்லறையும் இருக்கிறது. இங்கு ஒரு மனிதனின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

இந்தக் கல்லறையில் பாரோக்கள் புதைக்கப்படவில்லை என்றும் அபிடாஸை ஆண்ட முந்தைய கால  மன்னர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அபிடாஸை ஆண்ட ஆஹா என்ற மன்னர் ஒரு பிரம்மாண்டமான வளாகத்தைக் கட்டியுள்ளார். இங்கு அவர் வேலையாட்களுக்கான தனி கல்லறை ஒன்றையும் அமைத்துள்ளார்.

 

 

அத்துடன் அந்தக் காலத்தில் பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் களியாட்ட நிகழ்ச்சிகளில் களிப்பூட்டி உற்சாகப்படுத்த குள்ளர்கள் பங்கேற்பர். அவர்களுக்கும் தனி இருப்பிடங்களை ஆஹா அமைத்துத் தந்துள்ளார்.

சிங்கங்களுக்கும் நாய் உள்ளிட்ட இதர மிருகங்களுக்கும் தனி இருப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

 

ஆஹா மன்னரின் கல்லறை கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்லறையில் காணப்படும் ஏராளமான மிருகங்களின் உடல்கள் அவர் இறந்த பிறகு அவருடன் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இதில் முக்கியமான அம்சம் இந்த நகரின் பழமை குறித்தது தான். சில நிபுணர்கள் இந்த நகரம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் என்று கூறுகின்றனர்.

 

    ஆனால் அராபிய மொழியில் இருந்த அறிக்கையை மொழிபெயர்ப்பு செய்யும் போது தவறுதலாக இது 7000 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று  கருதும் சில நிபுணர்கள் எகிப்திய அரசு ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அத்துடன் இந்த நகரம் எவ்வளவு பெரியது, அதன் பரப்பளவு என்ன போன்ற தகவலை எல்லாம் கூட எகிப்திய அரசு வெளியிடவில்லை என்றும் உலக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறி அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவிற்குக் கடுமையான பணத்தட்டுப்பாடு இருப்பதால் அது ஊடகங்களுக்கு சரியான முறையில் அறிக்கையைத் தர முடியவில்லை என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.

 

உலகின் மிகப் பழமையான நகரம் அபிடாஸ் தானா என்பதை ஆராய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். அப்படி இந்த நகரம் மிக மிகப் பழமையானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் அது உலக சரித்திரத்தில் ஒரு முக்கியமான திருப்பம் தரும் செய்தியாக அமையும்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

ஃபாஸில்ஸ் (FOSSILS) எனப்படும் படிமப்பாறைகள், பழைய கால மிருகங்களின் உடல்களே என விஞ்ஞான உலகம் 18ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது.

 

இந்தத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இதை ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜோஹன் பெரிஞ்சர் (Johann Beringer).  அவர் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில்   (University of Wurzburg) பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

 

ஃபாஸில்ஸ் அனைத்துமே கடவுளால் படைக்கப்பட்டு தெய்வீக காரணங்களுக்காக பூவுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் திடமாக நம்பினார்.

 

அவருடைய படிமப்பாறை பைத்தியத்தைப் பற்றி நன்கு உணர்ந்த அவரது மாணவர்கள் ஆங்காங்கு தாங்களே உருவாக்கிய ஃபாஸில்ஸை புதைத்து வைக்க ஆரம்பித்தனர்.இதில் வேடிக்கை என்னவென்றால் சிரிய, பாபிலோனிய, ஹிப்ரூ எழுத்துக்களுடனெல்லாம் இவை கிடைக்க ஆரம்பித்தன.

 

பெரிஞ்சருக்கோ ஒரே உற்சாகம்.

 

அனைத்து ஃபாஸில்ஸையும் அட்டவணைப்படுத்தி ஒரு பெரிய புத்தகத்தை 1726ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார்.

ஒரு நாள் அவர் பெயர் கொண்ட ஒரு ஃபாஸில்ஸே கிடைத்தது.

 

அப்போது தான் அவருக்கு சந்தேகம் வந்தது.

அவர் எழுதிய புத்தகத்தைப் பலரும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கவே அனைத்துப் புத்தகங்களையும் தானே திருப்பிப் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகத்தின் பிரதி அரிதாகிப் போய் விடவே இதை அரிய பொருள்கள் சேகரிப்போர் தேடிக் கண்டுபிடித்து அதிக விலைக்கு வாங்கினர்.

 

மனம் நொந்து போன பெரிஞ்சர் தன்னை கேலி செய்பவர்கள் மீது பெரிய வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

அவர் இறந்த பிறகு அவரது உறவினர் ஒருவர் அந்தப் புத்தகத்தை மீண்டும் அச்சடித்து வெளியிட்டு பெரிய லாபத்தை ஈட்டினர்.

1963ஆம் ஆண்டு பெரிஞ்சரைப் பற்றி ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர் மெல்வின் ஈ. ஜான் என்பவர் உண்மையில் அவரது மாணவர்கள் இந்த தகாத வேலையில் ஈடுபடவில்லை என்றும் பெரிஞ்சரின் புகழைப் பொறுக்க மாட்டாத அவர்கள் சகாக்களே இந்த வேலையில் பலரை ஈடுபடுத்தியதாகவும் கண்டு பிடித்துள்ளார்.

 

ஆனாலும் என்ன, இறக்கும் வரையில் அவர் கேலிக்குத் தான் ஆளாக வேண்டியிருந்தது.

*******

 

 

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803)

search in egypt1

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2803

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

 

எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின் நேரடி அனுபவம்

எழுதியவர்- ச.நாகராஜன்

 

 
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன்   ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.
ஸ்பிங்ஸ்
பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். “நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்”

 

அந்த உயர் அதிகாரி “அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் “இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

 

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி “நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?”

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

search in egypt2

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

 

 

To be continued…………………………………..