வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1 (Post No.5259)

Written by S NAGARAJAN

 

Date: 26 JULY 2018

 

Time uploaded in London –   8-19 am (British Summer Time)

 

Post No. 5259

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 27-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தொன்றாம்) கட்டுரை

வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1

ச.நாகராஜன்

 

எப்போதும் பரபரப்பாக இருப்பது, ஐ ஆம் ஆல்வேஸ் பிஸி ( I always busy) என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது – இப்படிப்பட்ட நபர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இவர்களில் பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களை நீங்கள் பார்க்க முடியாது.

இவர்கள் சும்மா இருப்பதன் சுகத்தை அறிந்தவர்கள் இல்லை; குறிக்கோளுடன் சும்மா இருப்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வெற்றிக்கலை என்பது உண்மையே.

 

 

இதை விளக்கும் முதலைக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

 

வெள்ளமெனப் புரண்டோடும் பெரிய நதியின் கரையில் ஒரு வயதான முதலை சும்மா இருந்தது. குட்டி முதலை அதைப் பார்த்தது. அதனிடம் சென்று துள்ளிக் குதித்தவாறே கேட்டது:

“நீங்கள் தான் அபாரமான வேட்டைக்காரர் என்று அனைவரும் சொல்லக் கேட்கிறேன். நதியின் அடி வரை சென்று ஜாலங்கள் செய்வீர்களாமே. உங்கள் வித்தைகளை எனக்குச் சற்றுச் சொல்லித் தாருங்களேன்.”

 

 

நெடுநேரம் தூங்கி விழித்த பெரிய முதலை தன் கண்களில் ஒன்றின் மூலம் ஓரக் கண்ணால் குட்டியைப் பார்த்தது; எதுவும் பேசவில்லை. பின்னர் நீரின் மேல் இருந்தவாறே மீண்டும் தூங்க ஆரம்பித்தது.

குட்டி முதலைக்கோ ஏமாற்றம். நதியில் வேகமாக நீந்தியது. ஒரு குட்டி மீனைக் கவ்விப் பிடித்தது. ‘ஹஹ’ என்று சிரித்த அது, “அதற்குக் காட்டுகிறேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டது.

 

சற்று நேரம் கழித்து குட்டி முதலை பெரிய முதலையிடம் வந்தது. அதுவோ அரைத் தூக்கத்தில் இருந்தது.

“பார்த்தீர்களா, என் சாமர்த்தியத்தை. இரண்டு கொழு கொழு மீன்களை நான் பிடித்து விட்டேன். நீங்கள் எதைப் பிடித்தீர்கள்.

ஒன்றுமில்லை! நீங்கள் ஒன்றும் செய்வதில்லை! மற்றவர்கள் சொல்வது போல நீங்கள் ஒன்றும் தீவிர வேட்டைக்காரன் இல்லை.”

 

 

பெரிய முதலை குட்டியைப் பார்த்தது. ஒன்றும் சொல்லவில்லை.

கண்களை மூடியது. நீரில் மிதந்தவாறே சும்மா இருந்தது.

குட்டி முதலைக்கு தன்னை அலட்சியம் செய்யும் பெரிய முதலையின் மீது கோபம் கோபமாக வந்தது. நேராக நதியை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டுச் சென்றது.

 

இந்த தடவை அதற்கு நல்ல வேட்டை தான். ஒரு பெரிய கொக்கு சிக்கியது. அதைத் தன் தாடையில் பிடித்துக் கவ்வியவாறே பெரிய முதலை அருகே வந்தது.

 

“இப்போது சொல்லுங்கள். யார் சிறந்த வேட்டையாடுபவர் என்று!”

குட்டி முதலையின் எகத்தாளத்தை பெரிய முதலை கண்டு கொள்ளவே இல்லை,

 

 

குட்டி முதலை சற்று திரும்பியது. பெரிய முதலை இன்னும் நதியின் ஓரத்திலேயே நீரில் மிதந்து கொண்டிருந்தது.

திடீரென்று அப்போது அது நிகழ்ந்தது.

 

 

ஒரு வகை மானினத்தைச் சேர்ந்த கொழுகொழுவென்று இருந்த மான்களில் பெரிய மான் ஒன்று நதிக்கரையில் நீர் அருந்த வந்தது. முதலையின் தலை அருகே அது நீருக்காகக் குனிந்தது.

ஒரு மின்னல்வெட்டு நேரத்தில் பெரிய முதலை பறந்தது. நீரிலிருந்து ஆகாயத்தில் எழும்பி மானின் குரல்வளையைப் பிடித்தது. நீரில் இழுத்துக் கொண்டது!

 

 

க்ஷண நேரத்தில் நடந்த இந்தக் காட்சியைப் பார்த்த குட்டி முதலை நடுநடுங்கிப் போனது. தனது வாயில் இருந்த ஐந்து பவுண்டு கொக்கு எங்கே? “பெரியவரின்” வாயில் பிடிபட்டிருக்கும் ஐநூறு பவுண்டு மான் எங்கே?

 

அதற்கு பேச வரவில்லை. நாக்குழறியவாறே பெரிய முதலையை பயபக்தியுடன் பார்த்துக் கேட்டது:” வந்து .. வந்து..தயவு செய்து சொல்லுங்களேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?”

வாயில் இருந்த பிடியை விடாமல் பெரிய முதலை இப்போது தான பேசியது. அது சொன்னது: “நான் ஒன்றும் செய்யவில்லை!”

 

கதையைப் புரிந்து கொண்டவர்கள் வெற்றிக்கான உத்தியைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

 

 

பரபரப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. எது பொருள் பொதிந்ததோ, எதைச் செய்தால் வெற்றி கிட்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

அதற்காகச் சும்மா இருப்பது ஒரு சிறந்த உத்தி!

வெற்றியை அடைவதற்காக எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்றால் அது தவறு. அப்படிப்பட பிஸினெஸ் (busyness) தேவையில்லை.

 

அதற்குப் பதில் சும்மா இருந்து கொழுகொழு மானைப் பிடிப்பதே மேலானது. ஆனால் இந்த சமூகமோ எதையாவது செய்து பிஸியாக இருப்பவனைத் தான் வியப்புடன் பார்க்கிறது. அடடா, என்ன சுறுசுறுப்பு என்று புகழ்கிறது.

 

 

கி.மு. 435இல் ஹோமர் வாழ்ந்தார். அவர் லோட்டஸ்-ஈட்டர்ஸ் – தாமரைகளை உண்போர் – பற்றி ஒடிஸியில் எழுதினார். அந்த இனம் சற்று விசித்திரமான இனம். நாள்முழுவதும் மெதுவாக தாமரைப் பழங்களைத் தின்னும் மக்கள் கூட்டத்தைக் கொண்ட இனம் அது. அந்த மக்கள் திருப்தியுடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். ஹோமர் அந்த இனத்தை உன்னிப்பாக ஆராய்ந்து அவர்கள், தாமரைகளைத் தின்றதால் அது போலவே – திருப்தியுடனும், எப்போதும் நன்கு ஓய்வுடனும், சற்று சோம்பல் உடையவர்களாகவும் இருந்தனர் என்கிறார்.

 

 

தனது படைவீரர்களும் அவர்களைப் பார்த்து தாமரைகளைத் தின்ன ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்த ஒடிஸிஸ் தனது கப்பலை உடனடியாகத் திருப்பிப் பயணிக்குமாறு ஆணையிட்டான். இதை ஹோமர் வர்ணிக்கிறார்!

வேகமான யுகத்தில் சற்று நிதானியுங்கள். குறிக்கோளை மனதில் வைத்து நிறைய நேரம் சிந்தியுங்கள். சமயம் வரும் போது மின்னல் வெட்டு நேரத்தில் – ஆக் ஷன் நேரத்தில் – செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுங்கள்.

 

 

இன்று மிகப் பெரிய வெற்றி பெற்றவர்கள் இப்படிப்பட்ட “சும்மா இருக்கும்” டெக்னிக்கைத் தான் – உத்தியைத் தான் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

உதாரணமாக – ? சிலரை அடுத்துப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபிரிட்ஜ் ஸ்விகி (Fritz Zwicky 1898-1947) ஒரு வானவியல் விஞ்ஞானி. அவர் கலிபோர்னியாவிற்கு வந்து அங்கேயே படித்துப் பின்னர் பேராசிரியராகவும் ஆனார்.

அவரது பழக்க வழக்கங்கள் சற்று விசித்திரமாக இருக்கும்.

மவுண்ட் பாலோமர் ஆப்ஸர்வேடரியில் மிகப் பெரிய 200 அங்குல ஹேல் டெலஸ்கோப் நிறுவப்பட்டிருந்தது.

அந்த டெலஸ்கோப் மூலம் பூமிக்கு அருகில் வரும் அதிவேக விண்வெளிப் பொருள்களைக் கண்காணிப்பது வழக்கம். டெலஸ்கோப் வேகமாகச் சுழல வேண்டும். அதே சமயம் பொருள்களைச் சரியாகக் கண்காணிக்க வேண்டும். இது சவாலான ஒரு விஷயம்.

அந்த டெலஸ்கோப் எப்படி வேகமாகச் செல்லும் பொருள்களைத் துல்லியமாகக் கண்காணிக்கும் என்பதை நிர்ணயிக்க  ஃபிரிட்ஜ் ஸ்விகி எண்ணினார். இதற்காக ஒரு விசித்திரமான வழியை அவர் கையாண்டார்.

தனது உதவியாளரான பென் ட்ராக்ஸ்லரை அவர் ஒருநாள் இரவு அழைத்தார். இருவரும் சேர்ந்து பல துப்பாக்கிக் குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டனர். ஸ்விகி டெலஸ்கோப் வழியே அந்த குண்டுகளை செல்லும் பாதையைக் கண்காணித்தார். சோதனை வெற்றி பெற்றதா என்பது யாருக்கும் தெரியாவிட்டாலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விஞ்ஞானி என்று அவர் பிரபலமாகி விட்டார்.

உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடை போடுவதை ‘ஷீட்டிங் தி ஸ்டார்ஸ் (shooting the stars) என்று சொல்வது வழக்கம்.

 அவர் நிஜமாகவே நட்சத்திரங்களை நோக்கிச் சுட்டு விட்டார் என்று அனைவரும் பேசிக் கொண்டனர்.

ஆனால் இப்படிப்பட்ட விசித்திரமான சிந்தனையே  சூபர்நோவா பற்றிய ஆய்வில் அவர் பெற்ற வெற்றிக்குக் காரணமானது. முதலில் சாதாரணமாக எண்ணப்பட்டாலும் பின்னால் அவரது ஆராய்ச்சித் திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது!

***