புத்தாண்டு தினத்தன்று ஏழு கோவிலுக்குச் செல்லும் பிரிட்டிஷ் எம்.பி. (Post No.3115)

பிரிட்டிஷ் அமைச்சர் ப்ரீதி படேல்(Just outside the hall)

 

Written  by London Swaminathan

 

Date: 3  November 2016

 

Time uploaded in London: 6-30 AM

 

Post No.3315

 

 

Pictures are taken by London swaminathan.

 

 

பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ராபர்ட்சனும் பிளாக்மேனும்

 

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அக்டோபர் 26 புதன்கிழமையன்று பிரிட்டிஷ் ஹிந்து மன்றம் (Hindu Forum of Britain) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது. அதன் சிறப்பு அம்சங்களை மட்டும் சுருக்கி வரைகிறேன்.

 

பாப் பிளாக்மேன் (Bob Black man)  என்ற எம். பி பேசுகையில் ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஏழு கோவில்களுக்குச் சென்று வருவதாகவும் அடுத்த முறை எட்டு அல்லது ஒன்பது கோவில் போக திட்டமிட்டிருப்பதாகவும் கூறியவுடன் பலத்த கரஒலி எழுந்தது. காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு வாக்கில் புனித யாத்திரையை முடிக்கிறார் இந்த கிறிஸ்தவ இந்து!

 

அவரை அடுத்து ஸ்காட்லந்தில் மிகப் பெரிய கட்சியின் எம்.பி ஆங்கஸ் ராபர்ட்சன் பேசினார். “நான் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இங்கிலாந்தை விட ஸ்காட்லாந்தில் இந்தக் குளிர் காலத்தில் இருட்டு அதிகம். நீங்கள் இந்துக்கள்; தீபாவளி மூலம் பிரகாசத்தைக் கொண்டு வருகிறீர்கள். ஸ்காட்லாந்திலோ அதிகம் இந்துக்கள் இல்லை. நீங்கள் பெருமளவில் வந்து எங்கள் பிராந்தியத்தில் வெளிச்சம் உண்டாக்குங்கள் என்றார். உடனே கர ஒலி மண்டபத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்றது.

குஜராத்தி இனிப்புகள் (கூட்ட அறையில்)

 

காஷ்மீர் தினமும் இதே நாளன்று கொண்டாடப் பட்டதால் அதற்காக வந்திருந்த காஷ்மீர் மஹாராஜாவின் பேரன் தீபாவளித் திருநாளிலும் கலந்து கொண்டார். அவரது தாத்தா பெரிய தேசபக்தர் என்பதால் இந்தியாவுடன் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்தார். அவருக்கும் மாலை போட்டு கவுரவித்தோம் ( நான் ஹிந்து போரத்தின் தேசிய கமிட்டி உறுப்பினர்)

 

புதிதாக பிரபுக்கள் சபைக்கு நியமிக்கப்பட்ட ஹிதேஷ் காதியா பேசுகையில் முதல் தடவையாக மஹாரணிக்கு முன்னிலையில் ரிக் வேதத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்ததாகவும் உலகின் மிகப் பழைய நூல் என்பதோடு ரிக் வேதத்தில் எல்லோருக்கும் பொருந்தும் அருமையான பாடல்கள் உள்ளன என்றும் சொன்னவுடன் அனைவரும் கைதட்டி அதை ஆமோதித்தனர்.

 

பிரதம மந்திரி தெரெசா மே, இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரியாவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதை பிளாக் மேன் வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.

 

மேலும் பல எம்.பி.க்களும் பிரபுக்களும் நல்லுரை ஆற்றினர். இராமன் அயோத்தி திரும்பிய நல்ல நாள் இது. இருளிலிருந்து வெளிச்சத்துக்கும் அறியாமையிலுலிருந்து ஞானத்துக்கும் செல்லும் நாள் இந்த தீபத் திருநாள் என்று குறிப்பிட்டனர்.

 

பிரிட்டிஷ் அமைச்சர் பிரீதி படேல் பேசுகையில் பிரிட்டிஷ் இந்துவாக இருப்பதிலும் அனைவருக்கும் சேவை செய்வதிலும் பெருமைப்படுவதாகக் கூறினார்.

பார்லிமெண்டின் மேல் மாடியில் தேம்ஸ் நதியை நோக்கிய ஹாலில் இக்கூட்டம் 300 பேருடன் நடந்தது. இன்னிசை நிகழ்ச்சியும் வயிற்றுக்குச் சிறிது உணவும் வழங்கப்பட்டது.

மன்றத்தின் தலைவி திருமதி திருப்தி படேலும் (President HFB), செயலர் செல்வி பன்னா வகாரியாவும் (Secretary General)  செம்மையான ஏற்பாடுகளைச் செய்து சிறப்பெய்தினர்.

சாயி பள்ளி மாணவிகள்

 

–சுபம்–