
Written by London Swaminathan
Date: 11 September 2016
Time uploaded in London: 21-00
Post No.3144
Pictures are taken from various sources; thanks.
வள்ளுவர் ஒரு கடைந்தெடுத்த இந்து என்பதற்கு அவர் பாடிய 10 கடவுள் வாழ்த்துப் பாடல்களே சான்று பகரும்.
முதல் பத்து குறள்களில், ஏழு குறள்களில் பாதாரவிந்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். மலர் அடி, தாள் என்று இறைவனின் பாத கமலங்களைப் பாடுகிறார். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது; இந்துமதத்தில் மட்டுமே உண்டு. யாருடைய பாதாரவிந்தம் (பாத+ அரவிந்தம்= மலர்+அடி) என்று பிற்காலத்தில் எவருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாதே என்பதற்காக முதல் வரியிலேயே “கடவுள் வாழ்த்து” என்று தலைப்பும் கொடுத்து விடுகிறார். கடவுள் வாழ்த்து என்பது தொல்காப்பிய சொற்கள்! கடவுள் பற்றியோ கடவுளின் பாதாரவிந்தம் பற்றியோ புத்த, சமண மதங்கள் பேசுவதில்லை. இரண்டு மதங்களும் கடவுள் பற்றி கதைப்பதில்லை.
மேலும் பத்தாவது குறளில் வரும் “பிறவிப் பெருங்கடல்” என்பது “சம்சார சாகரம்” என்பதன் மொழி பெயர்ப்பு. இது கிருஷ்ண பரமாத்மாவின் சொற்கள் (கீதை 12-7)
அதுமட்டுமல்ல கண்ணன் முதல் ஆதி சங்கரர் வரை எல்லா சமஸ்கிருத நூல்களிலும் ‘பிறவிப் பெருங்கடல்’ காணப்படுகிறது.
ஆதிசங்கரர் நூற்றுக் கணக்கான இடங்களில் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) பற்றிப் பாடுகிறார். அவர் பாடிய விவேக சூடாமணியில் மட்டும் 9, 35, 37, 44, 136 எண் பாடல்களில் இந்தச் சொற்களைக் காணலாம்.
கடவுள் பற்றி வள்ளுவர் சொன்ன எல்லா சொற்றொடர்களையும் தேவார, திருவாசக திவ்வியப் பிரபந்தங்களில் காணலாம். கம்பனும் இச்சொற்களை எடுத்தாள்கிறான்.
இரண்டே பாடல்களை மட்டும் பார்ப்போம்–
பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
—நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

பிறவிப் பெருங்கடலைப் பார்ப்பதற்கு முன் வேறு இரண்டு விஷயங்களையும் கவனியுங்கள். தமிழுக்கு எத்தனை பெயர்கள்? என்ற எனது கட்டுரையில் ஞானத்தமிழ் என்பதற்கு மூன்று பாடல்களைக் காட்டியிருந்தேன் அதில் ஒன்றுதான் நம்பியின் பாடல். ஆக, ஞானத் தமிழ் என்ற அடைமொழி சுவைத்துப் பருகவேண்டியது. அதைவிட அருமையான உவமை ஒன்றையும் கவனித்தல் வேண்டும். பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு ஞான சம்பந்ததர் பாடிய பாடல்கள் கப்பல் போல உதவும் என்கிறார். கடலைக் கடக்க கப்பல் தேவை; பிறவிக்கடலைக் கடக்க சம்பந்தர் தேவாரம் தேவை. அருமையான உவமை. அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது வள்ளுவர் பயன்படுத்தும் பிறவிப் பெருங்கடலை நம்பியும் பயன் படுத்துவதாகும்.
கடவுள் வாழ்த்தின் மூன்றாவது குறளில் மலர்மிசை ஏகினான் என்ற அடைமொழியை கடவுளுக்குச் சூட்டுகிறான் வள்ளுவன். தாமரை மலர் மீது வீற்றிருப்பவன் பிரம்மா. கடவுள் என்பதால் புத்தரையோ மஹாவீரரையோ அவன் குறிக்க முடியாது. மற்ற மதத்தினருக்கு உருவ வழிபாடு ஒவ்வாது; ஆகையால் அவர்கள் இ ந்தப் பத்துக் குறட்பாக்களையும் ஒதுக்கி விடுவர்.
மலர்மிசை ஏகினான் யார் என்று கம்பனும் புகல்வான்:-
கிஷ்கிந்தா காண்ட நட்புக் கோட் படலப் பாடல் ஒன்றில் அருங்கமலத்து அண்ணல் என்று பிரம்மாவை அழைக்கிறான் கம்பன்.
மராமரப் படலத்தில் வரும் பாடலைப் பாருங்கள்:-
கலைகொண்டு ஓங்கிய மதியமும் கதிரவந்தானும்
தலைகண்டு ஓடுதற்கு அருந்தவம் தொடங்குறும் சாரல்
மலைகண்டோம் என்பது அல்லது மலர்மிசை அயற்கும்
இலைகண்டோம் எனத் தெரிப்ப அருந்தரத்தன ஏழும்.
பொருள்
ஏழு மராமரங்களின் பெருமையை கம்பன் சொல்கிறான்:
அவற்றின் உயரம் சூரியனும் சந்திரனும் அவற்றின் உச்சியைத் தாண்டிச் செல்ல தவம் செய்ய வேண்டும்; தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவும் அவற்றின் நுனியின் உள்ள இலையைப் பார்த்தேன் என்று சொல்லமுடியாத அளவுக்கு உயரமானவை.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய சொற்கள் மலர்மிசை அயன் = தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மா! வள்ளுவன் சொன்ன மலர்மிசை ஏகினான் பிரம்மா என்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ?
–Subam–
You must be logged in to post a comment.