

written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 6 AUGUST 2019
British Summer Time uploaded in London –9-04 AM
Post No. 6736
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 5-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஐந்தாம் உரை இங்கு தரப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருள்களின் நச்சுத் தன்மை!
ச.நாகராஜன்
அங்கிங்கெனாதபடி எங்கும் இன்றைய வாழ்க்கையில் நம்முடன் கலந்து விட்ட பிளாஸ்டிக் பொருள்களின் நச்சுத்தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக ஆகி விட்டது.
தண்ணீரை ஏந்தி வரும் கேன்கள், உணவை பாக்கிங் செய்து வரும் சிறு பெட்டி, தானியங்களை பாக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பைகள், பழங்களை உள்ளடக்கி வரும் கூடை அல்லது பைகள், பிஸ்கட், சாக்லெட் ஆகியவற்றின் மேல் உறையாகப் பயன்படுத்தப்படும் அழகிய உறைகள் இவை அனைத்துமே பிளாஸ்டிக்கினால் ஆனவையே. இவை அனைத்தும் நச்சைக் கொண்டிருக்கின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நமது உடலில் 3 விழுக்காடு பிளாஸ்டிக் கலந்திருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.
வண்ண பாட்டில்களில் இருக்கும் வண்ணங்கள் அடிடிவ்ஸ் (Additives) எனப்படும் கூட்டுப்பொருளைச் சேர்ப்பதால் உருவாக்கப்படுகிறது. இந்த கூட்டுப்பொருள்கள் அனைத்துமே நச்சுக் கலந்தவையே.
பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள நச்சுப்பொருள்கள் ஹார்மோன்களைத் தடை செய்கின்றன. தைராய்ட் ஹார்மோன் உடலின் மிக முக்கியமான ஹார்மோன் ஆகும். பிளாஸ்டிக்கின் நச்சு இதை வெகுவாக பாதிக்கிறது ; இதனால் தைராய்டின் சமச்சீர்தன்மை இழக்கப்படுகிறது.
BPA போன்ற கூட்டுப்பொருள்கள் சேர்க்கப்படாத பிளாஸ்டிக் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் அப்படிப்பட்ட பிளாஸ்டிக்கும் அபாயகரமானவையே என்பதில் சந்தேகமே இல்லை.
கர்ப்பிணிப் பெண்கள் நிச்சயமாக பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை அறவே நீக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பிளாஸ்டிக்கினால் ஆன விளையாட்டு பொம்மைகளை வாங்குவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப் போகிறோமே என்று எண்ணி விலை மலிவான பிளாஸ்டிக் தட்டுகள், பாட்டில்காள், பைகள் ஆகியவற்றை வாங்குவதன் மூலம் ஆரோக்கிய சீர்கேட்டுக்கு நமக்கு நாமே வழி வகுக்கிறோம்.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு நுண்ணறிவு குறையும்; சமூக உறவில் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் குழந்தைகளுக்குக் குறையும். எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படும்.
இப்படிப்பட்ட அபாயங்களை மனதில் எண்ணி அனைவரும் நச்சை வெளிப்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவோம்.
நம் உடலையும் காப்போம்; நமது பூமியையும் காப்போம்!
***

