
Written by S NAGARAJAN
Date: 4 JULY 2018
Time uploaded in London – 5-23 AM (British Summer Time)
Post No. 5178
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
புத்த தரிசனம்
புத்தரும் அற்புதங்களும்!
ச.நாகராஜன்

புத்தர் அற்புதங்களுக்கு என்றுமே மதிப்பு கொடுத்ததில்லை. ஆனால் மக்களோவெனில் அற்புதங்களைக் கண்டு வியந்தனர்.
அதைச் செய்பவர்களைப் போற்றி வணங்கினர்.
புத்தர் பெறுதற்கரிய பெரும் ஞானத்தை அடைந்தவர். விபாசனம் (உள்ளொளி) கண்டவர். நிர்வாணத்தை அடைந்தவர். அவருக்கு அற்புதங்கள் ஒரு பொருட்டல்ல.
மந்திரவாதியாக இருந்து மாயாஜாலங்களை மக்களுக்கு முன்னே நிகழ்த்துவதை அவர் அறவே வெறுத்தார். அற்புதங்கள் உள்ளொளியைக் காண உதவாது என்பதை அவர் அறிந்தார்.
பிந்தோல பாரத்வாஜர் என்பவர் செய்த அற்புதங்களை அவர் விரும்பவில்லை. அது தவறு என்று சொன்னார்.
ஒரு நாள் நாலந்தா நகருக்கு அருகில் இருந்த மாந்தோப்பான பாவாரிகாவில் அவர் தங்கியிருந்தார். கேவத்தா என்ற பெயருடைய ஒரு இல்லறத்தான் புத்தரை அங்கு வந்து தரிசித்தார்.
அவரது பக்கத்தில் நின்று அவரை வணங்கியவாறே கேவத்தா கூறினார் :”ஐயனே! நாலந்தா இப்போது பெரிய நகரமாக வளர்ந்து விட்டது. வளம் வாய்ந்ததாக இருக்கிறது. அங்குள்ள மக்கள் தங்களை மிகவும் மதித்துப் போற்றுகின்றனர். ஆகவே, இப்போது உங்களின் சீடர்களில் யாரேனும் ஒருவர் நாலந்தா நகரில் மக்கள் பார்க்கும் படி அற்புதங்களைச் செய்தால் அவர்கள் இன்னும் அதிகமாக உங்களை வியந்து போற்றி வணங்குவர். உங்கள் சீடர்களில் ஒருவரை அப்படிச் செய்யும் படி தாங்கள் சொல்வீர்களா?”
புத்தர் கேவத்தாவைப் பார்த்துக் கூறினார் :”கேவத்தா! எனது சீடர்கள் யாரையும் மனித ஆற்றலை மிஞ்சிய அபூர்வ சக்திகளைக் காட்டி சாமான்ய மக்களின் நன்மைக்காக அற்புதங்கள் செய்யப் பணித்ததில்லை. பணிக்கமாட்டேன்.”
கேவத்தா பணிவுடன் மூன்று முறை தனது வேண்டுகோளை திருப்பித் திருப்பிச் சொன்னார்.புத்தர் மூன்று முறையும் அவரது வேண்டுகோளை நிராகரித்தார்.
புத்தரின் வாழ்வில் இன்னொரு சுவையான நிகழ்ச்சியும் நடந்தது.

நதிக்கரையோரம் ஒரு சமயம் புத்தர் தன் சீடர்களுடன் தங்கி இருந்தார். படகோட்டி அக்கரையிலிருந்து இக்கரைக்கு பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தான்.
அப்போது ஜடாமுனியுடன் இருந்த ஒரு துறவி புத்தருக்கு முன்னால் வந்தார். அவரைச் சற்று ஏளனமாகப் பார்த்தார்.
பின்னர் அனைவரும் பார்க்கும்படி ஆற்று நீரின் மேல் தனது பாதங்களை வைத்து நடக்க ஆரம்பித்தார். அனைவரும் பிரமிப்புடன் பார்த்தவாறு இருக்க அவர் அக்கரை சென்று சேர்ந்தார்.
இதைப் பார்த்த சீடர்களில் ஒருவர்,” ஐயனே! அதோ அந்த துறவி போல நீங்களும் இப்படிச் செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
புத்தர், “அட! என்ன நீ சொல்கிறாய்? இது மதிப்பே இல்லாத ஒரு விஷயம். பொறு! இப்போதே உனக்கு இதன் மதிப்பு எவ்வளவு என்று காண்பிக்கிறேன்” என்றார்.
அந்தச் சமயம் இக்கரைக்கு வந்து பயணிகளை இறக்கி விட்ட படகோட்டியை அவர் அழைத்தார்.
அவரை நோக்கி புத்தர்,” அக்கரைக்குப் பயணியை ஏற்றிச் சென்றாயே! அவர் உனக்கு எவ்வளவு கொடுத்தார்?” என்று வினவினார்.
“அவர் அரை மஸாகா (அரை பைசா)கொடுத்தார்” என்றார் படகோட்டி.
புத்தர் தன் சீடரை நோக்கினார்:”பார்த்தாயா! அந்த துறவி ஆற்றைக் கடந்தாரே அது அரை பைசா மதிப்பைத் தான் கொண்டது. ஆனால் இந்த யோக சித்தியை அடைய அவர் நெடுங்காலம் தன் உடலை வருத்தி இருக்க வேண்டும். மக்களின் நலனுக்காகச் செலவழிக்க வேண்டிய எனது நேரத்தைப் பயன்படுத்தி அரை பைசாவில் செய்து முடிக்கக் கூடிய இந்தக் காரியத்தை நான் ஏன் செய்ய வேண்டும்?”

பொதுவாக மக்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களின் உண்மையான மதிப்பை எப்போதுமே அறிவதில்லை.
மலினமான பரபரப்பான அற்புதங்கள் போன்றவற்றிற்கு பெரிய மதிப்புத் தருகின்றனர். அற்புதங்களைச் செய்பவர்களை அதீத மனிதராகக் கருதுகின்றனர்.
ஆனால் புத்தரோ தனது ஞானத்தாலும் உள்ளொலியாலும் உயரிய நிர்வாணத் தன்மையாலும் மக்களுக்கு உண்மையைப் போதித்தார். அற்புதங்கள் ஆற்றுவதை அவர் விரும்பவில்லை.
பெரிய உளவியல் நிபுணர் போல மக்களின் நாடித் துடிப்பை அறிந்து அவர்களை எப்போது மக்கள் சேவையில் பணியாற்றத் தயாராக இருக்குமாறு செய்தார்.
புத்த தரிசனம் ஒன்றே அவர்களை நல்வழிப் படுத்தியது!
***