தொகுத்து வழங்குபவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்..1305; தேதி- 23 செப்டம்பர் 2014
மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது பத்தாவது கட்டுரை.
மஹாவம்சம் என்ற பாலி மொழி நூல் இலங்கையின் வரலாற்றையும், இலங்கையில் புத்தமதம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் இயம்பும் ஒரு நல்ல நூல். கொஞ்சம் புத்தமத ஆதரவு தூக்கலாக இருந்த்போதும் நிறைய வரலாற்று ரகசியங்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன. மொத்தம் 37 அத்தியாயங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அதில்உள்ள சில பொன்மொழிகளை மட்டும் காண்போம்.
பயன்படுத்தும் துணை நூல்:–
மகாவம்சம், தமிழாக்கம் எஸ். சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 1962, விலை ரூ.25
அத்தியாயம் 36: அரச போகம்
பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்ய அரசுரிமை ஆதாரமாக இருப்பது போலவே, பல அநீதிகளுக்கும் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்து நடக்கும் பக்திமான்கள் அரச போகம் குறித்து ஆனந்தம் அடைய மாட்டார்கள். அதை விஷத்துடன் கலந்த இனிய உணவாகக் கருதியே நடப்பார்கள்.
அத்தியாயம் 35: அறிவாளிகளும் மூடர்களும்
அறிவுடையவர்கள் பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்து பயனற்ற செல்வத்தைப் பயன்படுத்தி மதிப்பிட முடியாத அளவு பயன் பெறுகிறார் கள். ஆனால் மூடர்கள் குருட்டுத்தனமாக இன்பத்தை அனுபவிப்பதற்காக பெரும் தீமைகளைப் புரிகிறார்கள்.
அத்தியாயம் 34: பெரும் பதவி
கர்வத்தையும், சோம்பேறித்தனத்தையும் வென்ற, பாசங்களிலிருந்து விடுபட்ட அறிவுடையோர், பெரும்பதவியை அடையும்போது மக்களுக்குத் தீங்கு செய்யாமல் பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்து மகிழ்ச்சி அடைவர். பக்தியுடன் பல நல்ல காரியங்களைச் செய்வர்.
அத்தியாயம் 33: பேராசை
அறிவுள்ளவர்கள் ஆட்சிக்கு வருகையில் தம்முடைய மகிழ்ச்சிக்காகவும் மற்றவர் மகிழ்ச்சிக்காகவும் பாடுபடுகிறார்கள். ஆனால் அறிவில்லாத வர்கள் தாங்கள் பெற்ற செல்வத்தை தமக்கோ பிறருக்கோ பயன்படுத்து வது இல்லை. மேலும் மேலும் பணம் சேர்க்கவேண்டும் என்ற பேராசையே இதற்குக் காரணம்.
அத்தியாயம் 32: சொர்க்கம்
நல்வாழ்வு நடத்தி பெருமைக்குரிய செயல்களைப் புரிந்தோர் தமது சொந்த வீட்டுக்குள் நுழைவதைப் போல சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். ஆகையால் அறிவுள்ளோர் பெருமைக்குரிய செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்வார்களாக !
அத்தியாயம் 30: புத்தரின் அஸ்தி
உள்ளத்தில் நம்பிக்கை உடையவன் அருள்பெற்ற ஞானி புத்தருக்கு அவர் உயீரோடு இருகும்போதே வணக்கம் செய்திருப்பான். பின்னர் மனித குல விமோசனத்துக்காக அவர் பிரித்தளித்த அவரது அஸ்திக்கும் மரியாதை செலுத்துவான்.
அத்தியாயம் 28: நம்பிக்கை
உள்ளத்தில் நம்பிக்கையுடன், உடலின் தீமையைப் பொருட்படுத்தாமல் ஒருவன் தேடிச் சேர்த்த பெருமை நூற்றுககணக்கான பலன்களைத் தரும். அவை இன்பச் சுரங்கம் போன்றவை. எனவே உள்ளத்தில் நம்பிக்கையுடன் நல்ல பணிகளைச் செய்யவேண்டும்.
அத்தியாயம் 27: ஈகையில் இன்பம்
பிறருக்குக் கொடுப்பது எவ்வளவு பெருமையானது என்பதை அறிந்தவர்கள் பொருளைச் சேர்த்துவைப்பதைப் பயனற்றது என்று கருதுவர். பிறருக்கு தாராளமாக வழங்குவர். அவர்கள் மனம் ஆசையில் இருந்து விடுபடும். மக்களின் நலனே அவர்களது நாட்டமாக இருக்கும்.
அத்தியாயம் 26: ஐந்து குற்றங்கள்
ஐந்து குற்றங்களை உடைய பொக்கிஷங்கள் விஷேச அறிவுடையவர்கள் வசப்பட்டால் அவை ஐந்து சாதகங்களாக ஆகின்றன. எனவே அறிவுடையோர் அவைகளை அடைய முயற்சிப்பாளர்களாக;
ஐந்து குற்றங்கள்: தீயினால் ஏற்படும் நஷ்டம், நீரினால் ஏற்படும் நஷ்டம், ஜீவராசிகளால் ஏற்படும் நஷ்டம், பொருட்கள் பறிமுதலாவது, கொள்ளை போவது.
ஐந்து சாதகங்கள்: மக்களிடையே புகழ், சாதுக்களிடையே பெரு மதிப்பு, பெருமை, கடமை செய்யும் உறுதி, மரணத்துக்குப் பின் சுவர்க்கத்தை அடைதல்
அத்தியாயம் 25 மரணம்
பேராசையால் கொல்லப்பட்ட எண்ணற்றவர்களை எண்ணும்போது, அதனால் விளையும் தீமைகளை நினைத்துப் பார்க்கும் போது, எல்லோருக்கும் மரணமே முடிவு என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். அபோதுதான் ஒருவன் கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற முடியும்
அத்தியாயம் 24 சமாதானம்
பல காரணங்களால் விரோதம் மூண்டாலும் பக்தியுள்ளோர் சமாதானமாகப் போய்விடுவர்.
அத்தியாயம் 23: அதிசய நிகழ்ச்சிகள்
தன்னுடைய விமோசனத்தில் அக்கறையுடைய மனிதன், சாதுக்களின் அதிசய நிகழ்ச்சிகளைக் கேட்கும்போது தீயவழியைத் திரும்பியும் பாரான். நேர் வழியில் சென்று மேலும் இன்பம் பெறுவான்
அத்தியாயம் 22: மறுபிறவி
பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதாலேயே இவ்வுலகில் மனிதர்கள் விரும்பிய பிறவியை அடைகிறார்கள். இதை எண்ணிப் பார்ப்போர் எப்போதும் பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதிலேயே உற்சாகத்துடன் மனதைச் செலுத்துவார்கள்
அத்தியாயம் 21: அற்புத சக்தி
இந்த அரசன் தவறான நம்பிக்கைகளைக் கைவிடாதபோதிலும், தீய வழியிலிருந்து விலகி நின்றதால் இத்தகைய அற்புத சக்திகளைப் பெற முடிந்தது.
அத்தியாயம் 20: தீய சக்தியின் வலிமை
சக்தியுள்ள, எதிர்க்கமுடியாத மரணத்தை அறிந்திருந்தபோதும் மனிதன் உலக வாழ்வில் அதிருப்தி கொள்வது இல்லை. இதன் காரணமாகத் தீமையைக் கண்டு வருந்துவதோ நன்மையைக் கண்டு மகிழ்வதோ இல்லை – இத்தீய சக்தியின் வலிமை அத்தகையது – அத்தகையவன் தெரிந்தே மூடனாகிறான்.
அத்தியாயம் 17: புத்தரின் அருள்
ஏற்கனவே நிர்வாணம் அடைந்துவிட்ட உலக நாதர் (புத்தர்) இவ்வாறாக மனித குலத்துக்கு எல்லையற்ற அருள் பொழிந்து கொண்டிருந்தார்.
அத்தியாயம் 12: அலுப்பு வராது
புத்தர் போலவே தேரர்களும் அங்குமிங்கும் சென்று ஆசியை அருளினார்கள். உலகம் உய்யப் பாடுபடும் பணியில் யாருக்குத்தான் அலுப்பு ஏற்படும்?
அத்தியாயம் 5: கடமை பெரிது
பிரம்ம லோகத்தையும் கைவிட்டு, துயரம் நிறைந்த இந்த மக்கள் உலகத்தில் புத்தமதக் கொள்கையின் பொருட்டு அவர் அவதரித்து கடமைகளைச் செய்தார். யார்தான் கொள்கைக்கான கடமையைக் கைவிட முடியும்?
அத்தியாயம் 4 :மாய உலகமும் நிலையாமையும்
பூரணமான உள்ளொளி அடைந்த, மூவகையாக நிலவும் அனைத்து உலகுக்கும் அருள்பாலித்து உதவியர்களுமான உலக போதகரின் புத்திரர்களுடைய மறைவை எண்ணூம்போது நாம் இந்த உலகத்தின் பொய்யான தனமையை மனதில் இருத்தி விமோசனம் அடைவதற்காக விழிப்புடன் பாடுபடுவோமாக.
அத்தியாயம் 3: உலக இன்பத்தை மறுப்பது ஏன்?
அக ஒளியினால் மன இருளைப் போக்கிய தேரர்கள் உலக இருளை வெற்றி கொள்ளும் ஒளி விளக்குகளாகத் திகழ்ந்தார்கள். அந்த ஒளி விளக்குகளும் மரணம் என்னும் பெரும்புயலில் அணைக்கப் பட்டுவிட்டன. அதனால்தான் அறிஞர்கள் உலக இன்பத்தை மறுக்கிறார்கள்.
அத்தியாயம் 2:
நிலையாமை பற்றி சிந்தித்துப் பார்ப்பவர்கள் துயரத்திலிருந்து விடுபடுவார்கள்.
மஹாவம்சத்தில் உள்ள 37 அத்தியாயங்களில் பெரும்பாலான அத்தியாயங்களின் முடிவுப் பாடல் பொன்மொழியாக அமையும். அவைகளில் முக்கியமானவற்றைக் கொடுத்தேன்.

—சுபம்—
contact swami_48@yahoo.com





You must be logged in to post a comment.