
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7744
Date uploaded in London – 26 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இது ஒரு கிராமப்புற கதை

இது ஒரு தமிழ்நாட்டு கிராமப்புற கதை. ஒருவன் நல்ல வேட்டை நாய் வளர்த்து வந்தான். அதைக் கொண்டுபோவோருக்கு வேட்டையில் கட்டாயம் வெற்றி கிட்டும். மானையும் பிடிக்கலாம். காட்டுப் பன்றியையும் வேட்டை ஆடலாம். அவ்வளவு திறமையானது. அந்த நாயை அவன் வேட்டைக்குப் பயன்படுத்தாத நாட்களில் வாடகைக்கு விடுவது வழக்கம்.
ஒருமுறை வேறு ஒரு நண்பர் அந்த நாயை வாடகைக்கு எடுத்தார்.
வாடகைப்பணம் 500 ரூபாயும் திரும்பப்பெறும் டெபாசிட் (Security Deposit) 500 ரூபாயும் கொடுத்துவிட்டு நாயை அழைத்துச் சென்றார். அன்று அவருக்கு நல்ல வேட்டை. நாய்க்கு விருந்து படைத்தார். அதற்கும் மெத்த மகிழ்ச்சி . இரவு எல்லோரும் தூங்கப் போனார்கள். மறுநாள் காலையில் எழுந்தவுடன் நாயக் கொண் டுபோய் ஒப்படைப்போம் என்று எண்ணி நண்பனும் தூங்கிவிட்டான்.
நள்ளிரவில் ஓட்டைப் பிரித்து உள்ளே வந்தான் ஒரு திருடன். அவனுக்கு அந்த வீட்டுப் பெண்மணிகள் கோவில் குளங்களுக்குப் போகையில் நகை நட்டுக்களுடன் போவது தெரியும் . ஆகையால் எல்லா தங்க வைர நகைகளையும் திருவதற்காக வந்தான்.
அந்த வீட்டுக்காரன் வேட்டை நாயை வாடகைக்கு எடுத்து வைத்திருப்பது அவனுக்கு தெரியாது. உள்ளே திருடன் வந்தவுடன், அவன் மீது வேட்டை நாய் பாய்ந்து காட்டு மிருகங்களைக் கடித்துக் குதறுவது போலக் கடித்துக் கொன்றுவிட்டது பின்னர் நன்றியுடன் வீட்டுக் காரனையும் குரைத்து எழுப்பியது.
அவனுக்கும் நடந்தது எல்லாம் புரிந்தது. திருடன் நகைகளுடன் தப்பிக்க இருந்தபோது இது நடந்தது என்பதை அலங்கோலக் காட்சிகள் உரைத்தன. காலையில் பொழுதும் விடிந்தது.
நண்பனுக்கு இதை உடனே தெரிவிக்க ஆசை. அது டெலிபோன், மின்சார விளக்கு இல்லாத காலம். ஆகவே உடனே ஒரு அட்டையில் இரவு நடந்ததை எழுதிவிட்டு, “எனக்கு நீ டெபாசிட் பணத்தைக்கூட திருப்பித் தர வேண்டாம் ; உன்னுடைய நாய் எனக்கு பெரிய உபகாரம் செய்துவிட்டது மிக்க நன்றி”- என்று எழுதி அட்டையை நாய் கழுத்தில் தொங்கவிட்டு “போ போ, உன் எஜமானனிடம் போ” என்று சொன்னான். நாயும் மகிழ்ச்சியுடன் வீடு நோக்கி ஓடியது .
வேட்டை நாய் வாயில் ரத்தக் கரையுடன் பாய்ந்து வருவதைக் கண்ட எஜமானன் அடக் கடவுளே ! நள்ளிரவில் என் நண்பனைக் குதறிக் கொன்றுவிட்டு , காலையில் ஒடி வந்துவிட்டது என்று எண்ணி ஆத்திரத்தில் கிடைத்த இரும்பு உலக்கையை அதன் தலையில் ஒரு போடு போட்டான். அதுவும் பரிதாபமாகச் செத்தது .பின்னர் அதன் கழுத்தில் இருந்த அட்டையின் வாசகத்தைப் படித்தபோது நாயின் வீர தீரச் செயல்கள் தெரிய வந்தன. தலையில் அடித்துக் கொண் டு அழுதான்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .
பதறிய காரியம் சிதறும் என்பது தமிழ்ப் பழமொழி.
xxx

கீரியைக் கொன்ற அவசரக் கொடுக்கு
இதே போல பஞ்ச தந்திரக் கதைகளிலும் ஒரு கீரிக் கதை உண்டு . எல்லோருக்கும் தெரிந்ததே . ஒரு பெண் தினமும் கிணற்றடிக்கு சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அவள் வளர்த்து வந்த கீரிதான் அந்த நேரத்தில் வீ ட்டைக் காக்கும் . ஒரு நாள் காலையில் குடத்தில் தண்ணீர் கொண்டுவரப் போனாள் . அந்த நேரத்தில் வீட்டுக்குள் வந்த ஒரு பாம்பு, அவளுடைய கைக்குழந்தைக்கு அருகில் வந்தது. குழந்தையைப் பாம்பு கடித்துவிடுமே என்று பயந்து , அந்தப் பம்ம்புடன் சண்டை போட்டு அதனைக் கொன்றது கீரி .
வாயில் ரத்தம் சொட்ட எஜமானியை வரவேற்க வாசலில் நின்றது. தண்ணீர்க் குடத்துடன் வந்த நங்கை பதறிப் போனாள் ; ஐயய்யோ ; என் குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பித்துப் போக வாசலுக்கு வந்தாயா என்று தண்ணீர் குடத்தை அதனுடைய தலையில் போட்டாள் ; கீரியும் சுருண்டு விழுந்து, மாண்டது. வீட்டுக்குள் போனவுடன் விஷயம் விளங்கியது. கோவென்று கதறி அழுதாள் .
எந்த ஒரு செயலையும், குறிப்பாக கோபத்தில் செய்ய நினைக்கும் செயலை, இரு முறை சிந்தித்து செய்ய வேண்டும். இரு முறை என்றால் , இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கக்கூடும் என்று தீர ஆராய வேண்டும்.
கோபத்தில் ஒன்றைச் செய்துவிட்டு அதை மாற்ற முடியாது. உடைந்த பானையை ஒட்டவைத்தாலும் உடைந்து போன விரிசல் எப்போதும் தெரிந்து கொண்டே இருக்கும் .

tamilandvedas.com › 2015/11/25 › சம்ஸ்க…
25 Nov 2015 – வைஸ்யனாகிய கோவலனுக்கும் சம்ஸ்கிருதம் தெரியும்.(கீரிப் பிள்ளை கொன்றது குழந்தையை அல்ல; குழந்தை அருகே வந்த …

tags – கீரி , பாம்பு, குழந்தை, வேட்டை நாய், ஆத்திரம் , புத்தி மட்டு
—subham —