கம்பனும் அப்பரும் செப்பியது ஒன்றே! (Post No.4369)

Written by London Swaminathan

 

Date: 5 NOVEMBER 2017

 

Time uploaded in London- 15-24

 

 

Post No. 4369

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இரணியனை வதம் செய்தவுடன் எதிரே நின்ற நரசிங்கப் பெருமான் சொன்னார்: உன் அப்பனையே கூரிய நகங்களால் கொன்ற பின்னரும் நிலைகுலையாமல் நின்றாய்; என் மீது கொண்ட பக்தி சிறிதும் குறைவில்லை; உன் பக்தியைக் கண்டு மெச்சுகிறேன் உனக்கு என்ன வேண்டும்? கேள்!

 

உடனே பிரஹலாதன், “என் அப்பா இருந்த அரியாசனத்தில் என்னையும் உடகார்த்தி வை என்று பதவியையோ, பெரும்புகழையோ, செல்வத்தையோ கேட்கவில்லை. நான் எலும்பற்ற உடல் கொண்ட புழுப் போன்ற உடல் எடுத்தாலும் உன்னை மறவாது இருக்க வரம் அருள்’ என்கிறான்.

 

என்ன ஆச்சர்யம்! இதுவே அப்பர் வாக்கில் கம்பனுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உள்ளது!

 

 

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை

பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல்

என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்

–இரணியன் வதைப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:-

 

உனது அருளால் நான் பெற்ற நன்மைகள் எல்லையற்றவை. இனியும் நான் பெறும் நன்மை யாதுளது? அப்படி இன்னும் நான் பெறக்கூடியது ஏதாவது ஒன்று உண்டென்றால், எலும்பு இல்லாத புழுவின் உடலை நான் பெற்றாலும் உன்னிடம் அன்பு செலுத்தும் பெறும் பேற்றை எனக்கு அருள வேண்டும் — என்று பிரஹலாதன் வேண்டுகிறான்.

இதை அப்பரின் தேவாரப் பாடலுடன் ஒப்பிடுவோம்:

 

 

புழுவாய்ப் பிறக்கினும்  புண்ணியா  வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி  யிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச்

செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே—

நாலாம் திருமுறை

 

பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார்.

 

–Subham–