தெய்வீக மணி புஷ்பராகம்! (Post No.7323)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 10 DECEMBER 2019

 Time in London – 8-57 AM

Post No. 7323

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

 

 

மாலைமலர் நாளிதழில் 9-12-2019 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை!

தெய்வீக மணி புஷ்பராகம்!

ச.நாகராஜன்

வெற்றி வேல் மணி

‘தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தி இடு… சண்முகன் கை வேலே’ என்று முருகனின் கையில் இருக்கும் வெற்றி வேலில் தேடியும் கிடைப்பதற்கு அரிதான ஒன்பது இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருப்பதை வேல் விருத்தம் போற்றிப் புகழ்கிறது.

நவ ரத்தினங்களில் ஒன்றான புஷ்பராகம் நமது இதிஹாஸங்களிலும் அக்னி புராணம், கருட புராணம் ஆகிய நூல்களிலும் பெரிது சிறப்பாகப் பேtசப்படும் ரத்தினம்.

கருடபுராணத்தில் 68ஆம் அத்தியாயம் முதல் 80ஆம் அத்தியாயம் வரை ஒன்பது நவரத்தினங்கள் பற்றிய விளக்கமும் அவற்றைச் சோதனை செய்து தேர்வு செய்யும் முறையும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. 74ஆம் அத்தியாயம் புஷ்பராகத்தைப் பற்றிப் புகழ்ந்து விளக்குகிறது.

தெய்வாம்சம் பொருந்திய இந்தக் கல் தேவர்களுக்கு மிகவும் பிடித்தது.

அமராவதி உள்ளிட்ட தேவ லோகமே அற்புதமாக புஷ்பராகத்தால் அமைக்கப்பட்டது தான் என நமது புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீ தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைப் பற்றி விவரிக்கையில் மணித்வீபத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது (12ஆம் ஸ்கந்தம், 10,11 அத்தியாயங்கள்) நவரத்தின பிரகாரங்களை வர்ணிக்கிறது.

“புஷ்பராக மயமான பிரகாரம், பூமியும் வனங்களும், உபவனங்களும், சோலைகளில் உள்ள ரத்ன விருட்சங்களும், மதில்களும் புஷ்பராக மயமாகவே பிரகாசித்தும், பட்சிகள், ஜலங்கள், மண்டபங்கள், தூண்கள், குளங்கள், குளத்தில் மலரும் தாமரைகள் முதலியனவும் ரத்ன மயமாகவே இருப்பதால் ரத்னசாலை என்று பெயர் பெற்றும் விளங்குகிறது” என்று இவ்வாறு புஷ்பராக பிரகாரத்தை அது வர்ணிக்கிறது!

அனைத்து நாகரிங்களும் போற்றும் ரத்தினம்

புஷ்பராகத்தை ஆங்கிலத்தில் டோபாஸ் (Topaz) எனக் கூறுவர். தபஸ் என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து டோபாஸ் என்ற வார்த்தை உருவானதாக மொழியியல் அறிஞர் கூறுவர். தபஸ் என்பதற்கு ஒளி பொருந்திய அக்னி என்று ஒரு பொருள் உண்டு. அதை இந்தக் கல் குறிக்கிறது.

இன்னும் சிலர் டோபாஜியோஸ் (Topazios) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை உருவானதாகக் கருதுகின்றனர்.

மஞ்சள் நிற இரத்தினம் பற்றிப் பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகிறது. இதை புஷ்பராகம் என்று சிலரும், அதன் இன்னொரு வகை என்று சிலரும் கருதுகின்றனர்.

ஆக, மிகப் பழங்காலத்தில் இருந்தே புஷ்பராகம் பல நாகரிகத்தினராலும் அரிதாக மதிக்கப்பட்டு வருவது தெரியவருகிறது.

குருவுக்குரியது புஷ்பராகம்

ஜோதிட சாஸ்திரத்தில் கனக புஷ்பராகம் என்று குறிப்பிடப்படும் இந்தக் கல் குரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இயக்க சக்தியைக் குறிக்கும் கிரகம் – குரு கிரகம்.

தனுர் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு உகந்த கல் இதுவே. குரு பகவான் தரும் நல்ல பலன்களை அதிகப் படுத்தவும் இந்தக் கல் பரிந்துரைக்கப்படுகிறது. குரு பகவானின் தீய பார்வையைப் போக்க வல்லது புஷ்பராகம்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதை அணிந்தால் அதன் தாக்கம் குறையும். எண் கணிதக் கலையில் குரு கிரகமானது 3 என்ற எண்ணுடன் தொடர்பு படுத்தப்படும். இந்தக் கல்லை 3 எண்காரர்கள் (பிறந்த தேதி 3 அல்லது கூட்டு எண் 3 இருந்தால்) இதை அணியலாம்; அனைத்துப் பலன்களையும் பெறலாம்.

திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். வயிற்று நோய்கள் போகும் என்பது ஜோதிட சாஸ்திரம் பரிந்துரைக்கும் பலன்களாகும்.

புக்ராஜ் என வட இந்தியாவில் இது கூறப்படுகிறது.

ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்

ரஸ ஜல நிதி என்னும் நூல் தரும் சுவையான தகவல்கள் இவை:-

புஷ்பராகம் இரு வகையான சுரங்கங்களிலிருந்து கிடைக்கப் பெறும் ஒரு அபூர்வமான ரத்தினம். மாணிக்கம் மற்றும் மரகதம் கிடைக்கும் சுரங்கங்களில் இது காணப்படும்.

ரத்தினக்கற்களில் தேர்ச்சி பெற்ற சந்திர சேனர் என்ற  ராஜா இதன் நிறத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது மஞ்சள் நிறமாக இருக்கும், ஒளி ஊடுருவ வல்லது, வைரம் போலப் பிரகாசிப்பது என்று குறிப்பிடுகிறார்.

இது புத்திர பாக்கியம் இல்லை என்று ஏங்குவோருக்கு மகனைத் தரும். இதை அணிபவர் பெரும் செல்வந்தர் ஆவார்.

இதர ரத்தினக்கற்களிலிருந்து புஷ்பராகத்தை எப்படி இனம் பிரித்து அறிவது?

மஞ்சள் வண்ணத்துடன் பிரகாசமாக இருப்பது புஷ்பராகம் ஆகும்.

மஞ்சள் வண்ணத்துடன் சிறிது சிவப்பு கலந்திருந்தால் அதன் பெயர் கௌராந்தகம் எனப்படும்.

மஞ்சள்-சிவப்புடன் ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருப்பின் அதன் பெயர் கஷவம் எனப்படும்.

நீல வண்ணத்துடன் சிறிது வெண்மை கலந்திருந்து அது மிருதுவாக இருப்பின் அதன் பெயர் சோமலகம் எனப்படும்.

(மிகவும் சிவப்பாக இருப்பது மாணிக்கம். மிகவும் நீலமாக இருப்பது நீலம்.)

புஷ்பராகத்தில் வேறு வண்ணங்களும் உண்டு. அவையாவன 1) வெண்மை 2) மஞ்சள் 3) வெளுத்த வெண்மை 4) கறுப்பு

நல்ல புஷ்பராகத்தின் குணங்கள் :

கனமாக இருக்கும். ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். அதன் மேல் எண்ணெய் பூசப்பட்டது போல இருக்கும். அருமையான வடிவத்துடன் இருக்கும். கர்னிகர மலர் போல இருக்கும்.

விலக்கத்தக்க புஷ்பராகம் :-

மேல் பரப்பில் கரும் புள்ளிகள் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, வெண்மையாக இருப்பது, ஒளி இழந்து இருப்பது, இயல்பான தனது வண்ணத்துடன் இன்னொரு வண்ணம் கலந்திருக்காமல் இருப்பது, புள்ளிகள் இருப்பது – இப்படி உள்ள புஷ்பராகம் விலக்கத்தக்கது.

வழுவழுப்பாக இல்லாமல் இருப்பது, பழுப்பு அல்லது பழுப்புடன் கூடிய சிவப்பு, வெளுத்த வெண்மை, வெறும் மஞ்சள் வண்ணம் மட்டும், வெறும் கறுப்பு வண்ணம் மட்டும் இருக்கும் கற்களும் விலக்கத் தக்கதே.

புஷ்பராகம் அணிவதால் ஏற்படும் பலன்கள்

விஷத்தை அகற்றும். வயிற்றுக் குமட்டலை நீக்கும். அதிகமான வாயுத்தொல்லையைப் போக்கும். ஜீரணசக்தி குறைந்திருந்தால் அதை அதிகப்படுத்தும். வீக்கத்தை வற்ற வைக்கும். குஷ்டரோகத்தை நீக்கும். ரத்தக் கசிவைப் போக்கும்.

இவையெல்லாம் பழம்பெரும் நூலான ரஸஜல நிதி தரும் தகவல்கள்.

டோபாஸ் ஐலேண்ட்

புஷ்பராகம் பண்டைய காலத்தில் அனைத்து நாகரிகத்தினராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. இதை டோபாஸ் என்று அழைத்தனர். ஜஸிரட் ஜபூகட் (Jazirat Zabugat) என்ற தீவிலிருந்து இது கிடைப்பதாகப் பழம் பெரும் கிரேக்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தீவு எங்கிருக்கிறது என்பதை ஆராயப் புகுந்த இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் இன்றைய டோபாஸ் ஐலேண்டே (Topaz Island) ஜஸிரட் ஜபூகட் என்று முடிவுக்கு வந்துள்ளனர். செங்கடலில் உள்ள இந்தத் தீவு இப்போது ஜபர்காட் (Zabargad)  என அழைக்கப்படுகிறது.

இடது கையில் இதை அணிவது தீய கண்திருஷ்டியைப் போக்கும் என்றும் பிரச்சினைகள் வரும் போது அதை எதிர்கொள்ள வலிமையைத் தரும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன. கோலோன் கதீட்ரலில் உள்ள மாபெரும் மன்னர்களான காஸ்பர்,மெல்சியார்,பல்தஜார் ஆகியோர் புஷ்பராகம் அணிந்தவர்களே. ஏராளமான சிலுவைகளில் புஷ்பராகம் பதிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளுடன் பச்சை வண்ணம் கலந்த புஷ்பராக வகைகள் குடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் பொறாமை எண்ணங்கள் மனதில் தோன்றாமல் தடுக்கும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன.

இதை நெக்லஸாக அணிவது துக்கத்தைப் போக்கி நுண்ணறிவைத் தீர்க்கமாக்கும் என்றும் நம்பப்பட்டது. விஸ்வாசம், நட்பு, நம்பிக்கை ஆகிய அனைத்திற்குமான ஒரே ரத்தினம் புஷ்பராகம் தான்.

புஷ்பராக சிகிச்சை

தீ விபத்து மற்றும் இதர விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் காக்கும் கல் புஷ்பராகம். பிரபல யோகியான பிஞ்ஜெனைச் சேர்ந்த செயிண்ட் ஹில்டிகார்ட் (St Hildegard of Bingen) 1255ஆம் ஆண்டு கண் சம்பந்தமான வியாதிகளைத் தீர்க்க ஒரு அரிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினார்.புஷ்பராகத்தைச்  ஒரு ஒயின் உள்ள பாட்டிலில் செங்குத்தாக மூன்று நாள் வைத்திருந்து, பின்னர் அதை எடுத்துக் கண்களின் மீது லேசாகத் தேய்க்க வேண்டும். பின்னர் அதைக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். மங்கலான கண்பார்வை மறைந்து கண் பார்வை தீர்க்கமாகி கூர்மையான பார்வை உருவாகும். பைத்தியம் போகவும் புஷ்பராக சிகிச்சைப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

வானவில்லில் இருக்கும் அனைத்து வண்ணங்களிலும் புஷ்பராகம் கிடைப்பது அதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. சிவப்பு வண்ணத்துடன் கூடிய புஷ்பராகம் இம்பீரியல் டோபாஸ் என அழைக்கப்படுகிறது. கிடைக்கின்ற புஷ்பராகக் கற்களில், இது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே கிடைக்கிறது.

அறிவியல் தகவல்கள்

மோவின் அலகின் படி இதன் கடினத்தன்மை 8 ஆகும்.

அறிவியல் ரீதியாக இதைச் சொல்லப் போனால் இது அலுமினியம் மற்றும் புளோரின் ஆகியவற்றின் சிலிகேட் தாதுவால் ஆனது. இதன் இரசாயன சமன்பாடு Al2SiO4(F,OH)2 .

இதன் ஒப்படர்த்தி : 3.49 – 3.57

புஷ்பராகம் கிடைக்கும் இடங்கள்

இன்றைய நவீன யுகத்தில் பிரேஜிலில் கிடைக்கும் புஷ்பராகம் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது. அமெரிக்கா (ஊடாஹ் என்னுமிடம்), ரஷியா, ஆப்கனிஸ்தான், இலங்கை, நார்வே, இத்தாலி,ஜிம்பாப்வே, ஜெர்மனி,நைஜீரியா போன்ற பல நாடுகளிலும் புஷ்பராகத்தின் வெவ்வேறு வகைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதிகளில் இது கிடைக்கிறது.

புஷ்பராகத்தின் அரிய கற்கள்

19ஆம் நூற்றாண்டில் ரஷியாவில் ஜார் அரசாண்ட காலத்தில், இளஞ்சிவப்பில் புஷ்பராகம் கிடைக்கவே அரிதான இந்த ரத்தினக் கல்லை ஜார் மன்னரும் அவர் குடும்பத்தினரும் மட்டுமே அணிய வேண்டும் என்றும் அவர் கொடுத்தால் மட்டுமே இதரர் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

1680 கேரட்டில் கிடைத்த புஷ்பராகம் போர்த்துக்கீசிய மன்னரின் மகுடத்தில் பதிக்கப்பட்டது. இது வைரம் என முதலில் நினைக்கப்பட்டு பின்னால் புஷ்பராகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அமெரிக்கன் கோல்டன் டோபாஸ் 22892 கேரட் அதாவது 4.5785 கிலோ எடை உள்ளது. இது 172 வெட்டுக்களைக் கொண்டது. பல  வர்ணஜாலங்களைக் காட்டுகிறது. 11.8 கிலோ மஞ்சள் வண்ணக் கல்லிலிருந்து இது வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. பிரேஜிலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல் 1988ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைவரும் கண்டு களிப்பதற்காக வாஷிங்டன் மியூஸியத்தில் வைக்கப்பட்டது.

இன்னொரு அரிய 31000 கேரட் உள்ள கல் எல்-டோராடோ டோபாஸ் என அழைக்கப்படுகிறது. இதன் எடை 6.2 கிலோ ஆகும். இதுவும் பிரேஜிலில் வெட்டி எடுக்கப்பட்ட கல் ஆகும். 37 கிலோ கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த அரிய கல் இப்போது பிரிட்டிஷ் அரச வம்சத்தினரிம் உள்ளது.

தெய்வீக மணி புஷ்பராகம்

கோயிற் புராணம் என்ற நூல் ஞாயிறு முதல் சனி வரை ஒவ்வொரு கிழமையன்றும் ஒவ்வொரு ரத்தினம் இறைவனுக்கு அர்ப்பிக்கப்படுவதைச் சிறப்பித்து “நண்ணித் தினகரன் முதலோர் கிழமை கொணல்மார் நவமணி அணி மேவ” என்று கூறுகிறது. இதன் படி வியாழக்கிழமை புஷ்பராகம் அர்ப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது.

தெய்வீக மணியான புஷ்பராகம் தேவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, என்றால் பல நலன்களைத் தரும் அது மனிதர்களுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன?!

***