கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.
உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.
ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)
எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.
பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.
மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:
‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!

Drums in Meghalaya, India
வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.
(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)
ஆடம்பரம் – தோன்றிய வரலாறு
வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.
துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.
போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.
ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்
வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.

Drums in Kollam, Kerala
‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.
நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!
நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!

Drum in Jaffna Temple, Sri Lanka
contact swami_48@yahoo.com



You must be logged in to post a comment.