பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு! (Post8975.

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8975

Date uploaded in London – – 28 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 1

ச.நாகராஜன்

உலகம் வியக்கும் அற்புத ஆற்றல் பெற்றவர் ஸ்வாமி விவேகானந்தர்.தன் வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு கணமும் தன் அபூர்வமான ஆற்றலை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். வேண்டுமென்று வெளிப்படுத்தவில்லை. அந்த ஆற்றல் தானாக அவரிடமிருந்து பொங்கிக் கிளம்பி அவரைச் சந்தித்தோர் அனைவரையும் வியக்க வைத்தது; புளகாங்கிதம் அடைய வைத்தது.

ஒவ்வொரு ஊரிலும் இதே கதை தான்; ஒவ்வொருவரிடமும் இதே கதை தான்! அவரைச் சந்திப்பவர் அறிஞரானாலும் சரி, சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி அவரது ஆற்றலில் ஒரு துளியை அனுபவித்து வியப்பது வழக்கம்.

பாரதமெங்கும் பாத யாத்திரையாக அவர் சென்று கொண்டிருந்த சமயம் 1892 அக்டோபர் மாதம் அவர் கோலாப்பூரிலிருந்து கிளம்பி பெல்காம் சென்றார்.

அங்கே பல அறிஞர்களைச் சந்தித்தார். அவர்கள் அவரைப் பார்த்து வியந்தனர்.

ஹரிபாத மித்ரர் என்ற ஒருவர் துறவிகளிடம் அதிக மதிப்பு இல்லாதவர்.ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றார் ஸ்வாமிஜி.

துறவிகள் என்றாலேயே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று நினைத்திருந்த ஹரி பாதர் தன்னிடம் ஏதாவது யாசிக்கத் தான் அவர் வந்திருப்பார் என்று எண்ணினார். ஒருவேளை தனது நண்பரான ஜி.எஸ். பாட்டே (G.S.Bhate) ஒரு மராட்டியர் என்பதால் அவரது வீட்டில் அவருக்கு தங்க விருப்பம் இல்லாமல் தன்னைக் காண வந்திருக்கிறாரோ என்றும் அவர் எண்ணினார்.

ஆனால் ஸ்வாமிஜி தன் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் அவர் அசந்து போனார்.

அவரது ஆங்கிலப் பேச்சும் அறிவும் அவரை பிரமிக்க வைத்தது. அவரைத் தம்முடன் தங்குமாறு அவர் வெகுவாக வேண்டினார். ஆனால் ஸ்வாமிஜி அதற்குச் சம்மதிக்கவில்லை.

“நான் ஒரு மராட்டியரின் வீட்டில் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஒரு வங்காளியைக் கண்டவுடன் நான் இங்கு வந்து விட்டேன் என்றால் அவர் மனம் மிகவும் வருத்தப்படும். அந்தக் குடும்பத்தினர் என்னை அன்புடன் கவனித்து வருகின்றனர்” என்று பதிலிறுத்தார்.

மறுநால் பாட்டே வீட்டிற்குச் சென்ற ஹரிபாதர் அங்கு ஏராளமானோர் ஸ்வாமிஜியுடன் பேசக் குழுமி இருப்பதைக் கண்டார்.மறுபடியும் தன் வீட்டிற்கு அழைத்தார். இப்போது ஸ்வாமிஜி, ‘பாட்டே சம்மதித்தால் தான் தன்னால் வர முடியும்’ என்றார். உடனே ஹரிபாதர் பாட்டேயைக் கெஞ்ச ஆரம்பித்தார்.

ஒரு வழியாக பாட்டே சம்மதிக்க ஸ்வாமிஜி ஹரிபாதர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவரது பேச்சைக் கேட்ட ஹரிபாதர் அவருக்கு சகல கலைகளும் அத்துபடி என்பதை அறிந்து வியந்தார். வெறும் மத நூல்களும் தத்துவ நூல்களும் மட்டும் தெரிந்தவர் இல்லை அவர், இலக்கியங்களிலும் கரை கண்டவர் என்பதை ஸ்வாமிஜியின் பேச்சுக்கள் வெளிப்படுத்தின.

 ஒரு நாள் பேச்சின் போது ஸ்வாமிஜி  சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘தி பிக்விக் பேப்பர்ஸ்’ (The Pickwick Papers) என்ற நகைச்சுவை நாவலிலிருந்து சில பகுதிகளை அப்படியே வார்த்தை மாறாமல் கூறினார்.

இதைக் கேட்ட ஹரிபாதருக்கு ஆச்சரியம் தாளவில்லை. எப்படி இப்படி அப்படியே உள்ளது உள்ளபடி மேற்கோள் காட்டிப் பேச முடிகிறது என்று எண்ணிய அவர் ஸ்வாமிஜியிடம் கேட்க அவர் பதில் கூறினார் இப்படி:

‘சிறு வயதில் ஒரு முறையும், ஆறு மாதத்திற்கு முன்னர் ஒரு முறையும் ஆக இரு முறை தான் அந்த நாவலை நான் படித்திருக்கிறேன். உடலில் செயல்படும் சக்திகளைக் கட்டுப்படுத்துவதால் தான் மன ஆற்றல் வளர்கிறது. எனவே உடலில் வெளிப்படுகின்ற பௌதிக சக்திகளைக் கட்டுப்படுத்தி சேமித்து அவற்றை மன ஆற்றலாக, ஆன்மீக ஆற்றலாக மாற்ற வேண்டும். எதையும் சிந்திக்காமல் அர்த்தமற்ற இன்ப விஷய நாட்டத்தில் ஈடுபட்டு உடலின் சக்திகளை விரயமாக்குவது அபாயகரமானது. இது மனதின் கிரகிக்கும் ஆற்றலை (Retentive Faculty) இழக்கச் செய்கிறது. இன்னும் ஒன்று: நீ செய்வதை, அது எதுவாக இருந்தாலும், அதை முழு மனதுடன் செய்ய வேண்டும். ஒரு முறை  சாது ஒருவர் தாமிரத்தால் ஆன சமையல் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். துலக்கத் துலக்க அவைகள் தங்கப் பாத்திரங்கள் போல மின்னின. பூஜையையோ அல்லது தியானத்தையோ ஒருவர் எவ்வளவு ஈடுப்பாட்டுடன் செய்வார்களோ அந்த அளவுக்கு அவர் முழு மனதையும் செலுத்தி அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.”

ஸ்வாமிஜியிடமிருந்து இந்த கர்ம யோக ரகசியத்தை ஹரி பாதர் கற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல பெல்காமில் ஸ்வாமிஜியுடன் விவாதத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டு திகைத்தனர்.

அவர்களில் ஒருவர் மெத்தப் படித்த ஒரு எக்ஸிகியூடிவ் எஞ்ஜினியர்.

அவரைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

– தொடரும்

TAGS – பெல்காம் , விவேகானந்தர்