
Written by London swaminathan
Date: 3 APRIL 2017
Time uploaded in London:- 20-56
Post No. 3785
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com

பேயை விரட்ட ஒவ்வொரு பண்பாட்டிலும் பலவகை மாய மருந்துகள், மந்திர, தந்திரங்கள் உள்ளன.
ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி, சிரியா முதலிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தை ஆட்சி செய்த ஹிட்டைட்ஸ் HITTITES மக்கள் எலியைக் கொண்டே பேய்களையும் செய்வினகளையும் விரட்டும் மந்திரங்களைப் பிரயோகித்தனர். இது பற்றிய விவரத்தைச் சொல்லுவதற்கு முன்னதாக ஹிட்டைட்ஸ் என்பவர்கள் யார் என்று காண்போம்.
இவர்கள் சம்ஸ்கிருத்துடன் தொடர்புள்ள ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசினர். ஆகையால் ஒரு காலத்தில், இந்தியாவிலிருந்து துருக்கி-சிரியாவுக்குக் குடியேறி இருக்கலாம். இவர்களுடைய ஆட்சி 450 ஆண்டுகளுக்குச் சிறப்பாக நடந்தது.
உலகில் முதல் முதலில் சர்வதேச (INTERNATIONAL TREATY) உடன்படிக்கையை, எழுத்து மூலம் செய்தவர்கள் தாங்களே என்று இவர்கள் பெருமை பேசுவர். ஹிட்டைட்ஸ் ஆண்ட பகுதியின் தலை நகர் ஹட்டுசா (Hattusa) . இதன் தற்போதைய பெயர் (Bogazkoy) பொகாஸ்கோய். இது துருக்கியில் உள்ளது. இங்கு 1920-களில் நூற்றுக் கணக்கான களிமண் பலகைக் கல்வெட்டுகள் கிடைத்தன. அதில் இந்த உடன்படிக்கை பொறிக்கப்பட்டுள்ளது.
(பொகாஸ்கோயில்தான் கி.மு.1380 ஆம் ஆண்டு சம்ஸ்க்ருதச் சொற்களுடைய கியுனிபார்ம் லிபி கல்வெட்டும் கிடைத்தது. இதில் ரிக் வேத தெய்வங்கள், வேத மந்திரத்திலுள்ள அதே வரிசைக் கிரமத்தில் உள்ளதால், அப்போதே ரிக்வேதம் துருக்கி வரை சென்றதற்கான சான்றுகள் கிடைத்தன. இதன் பிறகு குதிரைப் பயிற்சிப் புத்தகம் சம்ஸ்கிருத எண்களுடன் கிடைத்தது).
ஹிட்டைட்ஸ் சர்வதேச உடன்படிக்கை சத்சீலி என்ற மன்னனுக்கும் எகிப்திய மன்னன் இரண்டாம் ராமசெஸ்ஸுக்கும் இடையே கையெழுத்தானது. ஒருவர் படைவீரர்களை ஒருவர் துன்புறுத்தக் கூடாது; மனைவி மக்களைப் பழிவாங்கக் கூடாது; அவரவர் போர்க்கைதிகளை மரியாதையுடன் பரிமாறிக்கொள்வோம் என்று அந்த உடன்படிக்கை கூறுகிறது. தற்காலத்தில் உள்ள எல்லா உடன்படிக்கை களுக்கும் இது மூல உடன்படிக்கையாகச் செயல்படுகிறது.
( நான் முன்னர் எழுதிய கட்டுரையில் நச்சினார்க்கினியர் சொல்லும் ஒரு அதிசய விஷயத்தை குறிப்பிட்டிருந்தேன். பாண்டிய மன்னனுக்கும் ராவணனுக்கும் இடையேயுள்ள சமதான உடன்படிக்கை பற்றி நச்சி. அதில் கூறியிருக்கிறார். மஹாபாரத, ராமாயண இதிஹாச நூல்களிலும் உடன்படிக்கை பற்றி வருகிறது ராமனுக்கும்- சுக்ரீவனுக்கும் இடையே அக்னி சாட்சியாக ஏற்பட்ட உடன்படிக்கையில் உனது நண்பன் எனது நண்பன்; உனது எதிரி எனது எதிரி என்று ராமன் சொல்கிறான். இப்போதுள்ள நாட்டோ (NATO) ராணுவ ஒப்பந்தங்களுக்கெல்லாம் மூல உடனபாடு நம்முடையது. ஆனால் பெரிய வித்தியாசம்; இன்று கல்வெட்டு வடிவில் நமக்குச் சான்றுகள் இல்லை; ஹிட்டைட்ஸ்களிடம் இருக்கிறது!)

இன்னொரு சுவையான விஷயமும் களிமண் கல்வெட்டில் உளது; ஒரு மன்னன் தன் மகன் பற்றிப் புகார் செய்யும் கல்வெட்டு அது. அவன் நடத்தை சரியில்லாதவன் என்று சொல்லி, மகனுக்குப் பட்டம் கட்டாமல் வேறு ஒருவனுக்கு அரசன் பட்டம் கட்டிவிட்டு அவனுக்கு மக்களிடம் இரக்கத்துடன், கருணையுடன் நடந்துகொள் என்று உத்தரவிடும் கல்வெட்டு அது.
(இதுவும் இந்துக்களிடம் இருந்து சென்ற கோட்பாடே. வேனன் என்ற புராண கால அரசனை மக்களே தூக்கி எறிந்தனர். விஜயபாஹு என்ற கலிங்க மன்னனை, அவனது தந்தையே நாடு கடத்வே அவன் இலங் கையில் புதிய வம்சத்தை நிறுவினான். மனுநீதிச் சோழனோ தவறிழைத்த மகனையே தேர் சக்கரத்தில் நசுக்கினான்.)
அரசனைத் தேர்ந்தெடுக்கும் சபையைக் கலந்தாலோசியுக்கள் என்று இன்னும் ஒரு கல்வெட்டு சொல்லும்; இதுவும் இந்தியாவில் சென்ற கருத்தே; வேதகாலத்தில் சபா, சமிதி இருந்ததை வேதமே சொல்கிறது அதற்கடுத்த காலத்தில் எண்பேராயம், ஐம்பெருங்குழு இருந்ததை சங்கத் தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் செப்புகின்றன
உலகிலுள்ள எல்லா கலாசாரங்களைப் போல ஹிட்டைட்ஸ் மக்களிடமும், பேய், பிசாசு, செய்வினை, தீட்டு, அபசாரம், கடவுளின் கோபம், இறந்தோரின் கோபம், நோயைக் கொடுக்கும் தீய சக்திகள் என்றெல்லாம் பல நம்பிக்கைகள் இருந்தன. அதை நீக்குவதற்கு ஆண்களில் குறி சொல்லுவோரும், மூத்த பெண் சோதிடரும்/ குறி சொல்வோரும் இருந்தனர். செய்வினை, தீவினை, முன்வினைகளை ஏதாவது ஒரு பொம்மை, உருவம், அல்லது பிராணிகளின் மீது ஏற்றி அதை விரட்டிவிடுவது அல்லது புதைப்பது வழக்கமாக இருந்தது. இந்தச் சடங்கு , பாதிக்கப்பட்ட ஆளின் வீட்டில் நடக்கும்.
இந்த மந்திர தந்திரங்களில் கைகள் மூலம் பலவிதமான சைகைகள், சமிக்ஞைகளையும் பயன்படுத்துவர்

எலியை விரட்டு!
பதிக்கப்பட்ட ஒருவரின் வலது காலிலும் கையிலும் கயிற்றைக் கொண்டு ஒரு தகரத்தைக் கட்டிவிடுவர். பின்னர் மந்திரங்கள் சொல்லிவிட்டு, அந்தத் தகரத்தை ஒரு எலியின் மீது கட்டிவிட்டு கீழ்கண்ட மந்திரத்தை பேய் விரட்டும் மந்திரவாதி சொல்லுவார்:
“நான் இந்த ஆளிடம் இருந்த தீய சக்தியை எடுத்து எலியின் மீது சுற்றிவிட்டேன்; இந்த எலியானது காடு, மலை, கிராமம், பள்ளத்தாக்கு என்று ஓடட்டும். ஏ! ஜார்னிஜா, ஏ தார்படஸ்ஸா எடுத்துக்கொள்” — என்று இவ்வாறு இரண்டு துஷ்ட தேவதைகளின் பெயர்களைச் சொல்லி எலியை விரட்டிவிடுவர்.
பேயும் அதனுடன் போய்விடும் என்று நம்புவோமாக!.
–சுபம்–
You must be logged in to post a comment.