
Written by London Swaminathan
Date: 6 October 2016
Time uploaded in London:5-45 AM
Post No.3222
Pictures are taken from various sources; thanks.
Contact swami_48@yahoo.com
கோண்ட் இன மக்களை திராவிடப் பழங்குடி என்றும் அவர்களுடைய “கோண்டி” மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் அவர்களை ஆதரிக்கும் திராவிடங்களும் மார்கஸீயங்களும் கதைக்கும்.
நேற்று, முதல் பகுதியில் அவர்களுடைய விநோத வழக்கங்களைப் பட்டியலிட்டேன். சில வழக்கங்கள் பிராமணர்கள் வழக்கங்களை ஒத்திருக்கும். மற்ற பல காட்டுமிராண்டித் தனமான வழக்கங்களாக இருக்கும்.
கோண்ட் இன மக்களுக்கு மாய மந்திரங்களில் நம்பிக்கை உண்டு. விசாகப் பட்டிணம் பகுதியில் கோண்ட் இன மக்களிடையே நடந்த ஒரு படுகொலை சென்னை போலீஸ் ரிகார்டுகளில் இருக்கிறது.
மூன்று சகோதரர் உள்ள குடும்பத்தில் இளைய சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவரது சடலத்தை எரித்தபோது சடலத்தின் மேல்பகுதி எரியவில்லை. இது எதிரிகள் செய்த பில்லி சூனிய வேலை என்று 2 சகோதரர்கள் கருதினர். யார் மீது சந்தேகம் எழுந்ததோ அந்த கோண்ட் இன ஆளைக் கொன்று அவரது சடலத்தை வெட்டி மேல்பகுதியை, இளைய சகோதரர் சடலத்தின் மேல்பகுதி எரிய மறுத்த இடத்தில் வீசினர்.
இந்தக் குற்றத்துக்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலிஸ் குறிப்பேடுகளில் இருப்பதாக ஆர்தர் மைல்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளது.
ஒரு கிராமத்தில் காலரா நோய் பரவிவிட்டால் அவர்கள் பன்றிக் கொழுப்பை மேலே தடவிக்கொண்டு வளைய வருவர். காலரா நோய் ஒழியும் வரை இது நீடிக்கும். பன்றிக் கொழுப்பானது காலராவை உண்டாக்கும் தேவதையை விரட்டிவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
அந்த தேவதை கிராமத்துக்குள் நுழையாமல் இருக்க வழிகளில் பள்ளங்களைத் தோண்டி அதில் முட்களை நிரப்பி நாற்றம் வீசும் எண்ணையையும் ஊற்றி வைப்பர்.
கோண்ட் இன மக்கள் ஒரு நட்புறவு பிரமாணம் (உறுதி மொழி) எடுப்பர். புரி நகர ஜகந்நாதர் ஆலயத்து அட்சதை (புனித அரிசி) மீது சத்தியம் செய்வர். இந்துக்களின் ஏழு புனிதத் நகரங்களில் ஒன்றான புரி (ஒரிஸ்ஸா) ஆலயத்துக்குச் செல்லுவோர் இந்த அட்சதையை வாங்கி யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விநியோகிப்பர். அந்த புனித அட்சதை ஒருவர் கையில் இருக்கும்போது அவர்கள் பொய் சொல்லக்கூடாது. கிராமங்களில் உள்ள ஏழைக் குடியானவர்களுக்கும் நகர மாந்தர்களுக்கும் இடையே இப்படி நட்புறவு ஒப்பந்தம் செய்வதுண்டு. இப்படி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் திருவிழாக் காலங்களில் அவர்கள் பரிசுகளை ஒருவருக்கொருவர் கொடுப்பர். ஒருவர் வீட்டு விழாவுக்கு மற்றொருவரை அழைப்பர்.
நட்புறவு சத்தியப் பிரமாணம் செய்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவர். இதற்கு “சொங்காதோ” என்று பெயர் (சங்காத்தம்) பழங்குடி மக்களிடையே பல தலைமுறையினருக்கு இடையேகூட இப்படிப்பட்ட நட்புறவு நீடிக்கும்.
மற்றொரு பழங்குடி இனம் சிறுத்தைப் புலியின் தோல் மீது நின்றோ அல்லது மயில் இறகைக் கையில் வைத்துக்கொண்டோ சத்தியப் பிரமாணம் செய்வர்.

வாக்குறுதியின் பெயரில் இப்படிப்பட்ட நட்புறவு, பல தலை முறைகளுக்கு நீடிப்பது சத்தியத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. எவ்வளவுதான் வன்முறை, மூட நம்பிக்கை இருந்தாலும் சங்க இலக்கியம் குறிப்பிடும் “வாய்மொழிக் கோசர்” (Truthful Kosas of Sangam Tamil Literature) போல கோண்ட் இன மக்களும் ‘சத்திய கோண்ட்’ இனத்தினரே.
கோண்ட் இனம் உருவானது பற்றி ஒரு நரபலிக் கதையும் இருக்கிறது. பூமியில் முதலில் இரண்டே பெண்கள்தான் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பூமிக்கடியிலிருந்து புதல்வர் இருவர் கிடைத்தனர். ஒரு பெண்மணி செடிகொடிகளை வெட்டும் போது கை விரலில் கத்தி படவே ரத்தம் வழிந்தோடி தரையில் விழுந்தது. அந்த இடம் காய்ந்து அதிலிருந்து மரம் செடி கொடிகள் உருவாயின. அதைச் சமைத்தபோது சுவையாக இருந்தது. அவளுடைய மகன் காரணம் கேட்டான். உடனே அவள் தன் மகனை அழைத்து என்னைத் தாயென்று எண்ணித் தயங்காதே. என் முதுகை வெட்டிப் புதை என்றாள். அவனும் அப்படியே செய்தான். உலகில் ஜீவ ராசிகள் உண்டாயின. அதிருந்து அவர்கள் ஆண்டுக்கு ஒரு சிறுவனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தனர். போரா பெண்ணு என்ற கடவுளுக்கு இப்படி நரபலி கொடுக்கப்படும்.
இப்போது நரபலிக்குப் பதிலாக எருமை பலி தரப்படுகிறது. ஆனால் கோண்ட் இன பூசாரி சொல்லும் உச்சாடனம் நரபலி உச்சாடனமே: “ஆண் அடிமையே வா, பெண் அடிமையே வா; நீ என்ன சொல்லுகிறாய்? ஹட்டியினால் நீ சிறைப் பிடிக்கப்பட்டய். டொம்பாவினாவால் நீ சிறைப் பிடிக்கப்பட்டாய். நீ எனது குழந்தையாகவே இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? ஒரு பானைச் சோற்றுக்கு நீ விற்கப்பட்டுவிட்டாய்”.
தமிழ்க் கடவுள்களா?
கோண்ட் இன நரபலியில் தொடர்புடைய இரண்டு கடவுளரும் தமிழ்ப் பெயர்கள் உடைய கடவுளர். போரா பெண்ணு, தரைப் பெண்ணு; இந்தச் சடங்கிற்கு மறியா (மறித்தல்=இறத்தல்) என்று பெயர். மரியா என்பது “ம்ருத்” என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. தீவிரமாக ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூலமான வேர்ச் சொல் கிடைக்கும். பெண் என்பதும் அந்த மூலச் சொல்லில் இருந்தே வந்தது என்பது புரியும். தரை என்பது “தரணி” என்ற சம்ச்கிருத சொல்லில் இருந்து வந்தது. மற்ற மொழிகளில் இது டெர்ரா TERRA என மருவி வரும்.
சிந்து சமவெளியிலும் நரபலி காட்சி இருக்கிறது. சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே என்று வாதிடுவோர் இந்த நரபலிக் காட்சியை கோண்ட் இன திராவிடக் குடிகளுடன் ஒப்பிடுவர். உலகில் நரபலி இல்லாத நாகரீகமே கிடையாது. வேதத்திலும் “புருஷ மேத யக்ஞம்” இருக்கிறது. ஆனால் இது நடந்ததற்கான சான்று வேதத்தில் கிடையாது. கம்பத்தில் நரபலிக்காகக் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனையும் புரட்சிக் கவிஞன் விஸ்வாமித்திரன் விடுதலை செய்ததாகவே இருக்கிறது. ஆதி சங்கரரை நரபலி கொடுக்க காபாலிகர் முயன்றபோது அவரது சீடர்களில் ஒருவரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காபாலிகனை துவம்சம் செய்ததாகவே இருக்கிறது.
-subham–
You must be logged in to post a comment.