

WRITTEN by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 24 JULY 2019
British Summer Time uploaded in London – 15-39
Post No. 6673
Pictures are taken from various sources including Facebook, google,
Wikipedia. This is a non- commercial blog. ((posted by
swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ச.நாகராஜன்
அபூர்வ தற்காப்புக் கலை வீரர் – ப்ரூஸ் லீ
உலகம் இதுவரை கண்டிராத அதிசய தற்காப்புக் கலை வீரர் ப்ரூஸ் லீ. சான்பிரான்ஸிஸ்கோவில் சைனாடவுன் பகுதியில் ஹாங்காங்கைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு 1940, நவம்பர் 27ஆம் தேதி பிறந்த ப்ரூஸ் லீ 32 ஆண்டுகளே வாழ்ந்து பல அதிசய சாதனைகளை நிகழ்த்தி 1973, ஜூலை 20ஆம் தேதி மறைந்தார்.
மின்னல் வேக சண்டை நிபுணர் மட்டுமல்ல, அவர் ஒரு நடிகர், டைரக்டர், சண்டைகளைக் கற்பிக்கும் பள்ளியை நிறுவியவர், ஒரு தத்துவ வித்தகர்.
இளம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்த அவருக்கு சீனத் தற்காப்பு சண்டை உத்திகள் அனைத்தும் அத்துபடி. ‘எண்டர் தி ட்ராகன்’ உள்ளிட்ட அவரது திரைப்படங்களை உலகிலுள்ள மக்கள் இன்றளவும் பார்த்து வருகின்றனர். நொடியில் நூற்றில் ஒரு பங்கில் அவரது கைகள், கால்கள், உடல் அங்கங்கள் அசையும், மிகக் கூர்மையான கண் பார்வை அவர் நினைத்ததைச் செய்து முடிக்கும்! ஒரு விரலை வைத்துக் கொண்டு அதன் மீது உடலை அவர் தூக்குவார்! கையில் சீன உணவு சாப்பிடும் இரு கழிகளை வைத்துக் கொண்டு பறந்து செல்லும் அரிசி மணியைப் பிடிப்பார். அவரது திறன்கள் சொல்லுக்கு அப்பாற்பட்டவை. மனிதன் என்ன நினைக்கிறானோ அதைச் செய்ய முடியும் என்பது அவரது நம்பிக்கை. அவருக்கு உலகெங்கும் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. இரண்டரை மீட்டர் உயரமுள்ள வெங்கலச் சிலை அவர் நினைவாக 2005ஆம் ஆண்டு ஹாங்காங்கில் திறந்து வைக்கப்பட்டது. உலகம் போற்றும் அதிசய வீரரான இவரைப் போல இன்னொருவரை உலகம் காணுமா என்ற வியப்பு அனைவருக்கும் உண்டு!

எக்ஸ் ரே கண் கொண்ட நடாஷா டெம்கினா
1987ஆம் ஆண்டு பிறந்த ரஷிய பெண்மணியான நடாஷா டெம்கினாவிற்கு (Natasha Demkina) ஒரு அபூர்வப் பார்வை உண்டு; ஆம், அவரது கண்கள் எக்ஸ் ரே கண்கள். மற்றவர்களின் உடலின் உள்ளே இருப்பதை அவரால் சுலபமாகப் பார்க்க முடியும். அவரது பத்தாம் வயதிலிருந்தே இந்த அபூர்வ பார்வையை அவர் பயன்படுத்த ஆரம்பித்தார். டாக்டர்களால் என்ன வியாதி என்று நிர்ணயிக்க முடியாத சமயத்தில் அவசர உதவியாக அவர் அழைக்கப்பட்டு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவுவார். 2004இல் டிஸ்கவரி சேனலில் அவர் பல காட்சிகளில் தோன்றினார்; ஜப்பானிய தொலைக்காட்சியும் அவரை வரவேற்றது. உலகில் அடுத்தவரின் உள் உறுப்புகளைப் பார்க்கும் ஒரே பெண்மணி இன்று இவர் தான்!
தூங்காத மனிதர் தாய் காக்
வியட்நாமைச் சேர்ந்த அதிசய மனிதர் தாய் காக் (Thai Ngoc).
1942ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் நாற்பத்தாறு ஆண்டுகள் தூங்கவே இல்லை. ஆனால் செயல் திறனில் இவரிடம் எந்தக் குறைபாடும் இல்லை. 50 கிலோ சாக்குகளை ஐந்து கிலோமீட்டர் தூக்கிச் செல்வாராம். இளமையிலிருந்தே தூங்குவதில்லை என்று கூறும் இவர் “நீரில்லாத செடி போல என் வாழ்வு இருக்கிறது” என்கிறார்.
ஒரே ஒரு நாள் தூக்கம் இல்லாவிட்டால் நாம் படும் பாடு என்ன என்பது நமக்கே நன்கு தெரியும். ஆக, தூங்காத இந்த மனிதர் உலகின் வியப்பூட்டும் மனிதர் வரிசையில் சேர்கிறார்.
கராத்தே வீரர் மாஸ் ஒயாமா

உலகம் அறிந்த கராத்தே வீரர் மாஸ் ஒயாமா. (Mas Oyama).
1923 ஜூலை 27ஆம் தேதி கொரியாவில் ஜிம்ஜி என்ற இடத்தில் பிறந்தார். 1994 ஏப்ரல் 26ஆம் தேதி மறைந்தார்.
குமைட் என்று சொல்லப்படும் ஒரு சண்டையில் 300 பேரை மூன்று நாட்கள் சண்டையிட்டுத் தோற்கடித்தார். இப்படி ஒரு அரிய சாதனையை நிகழ்த்தக் காரணம் மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை முறை தான் என்றார் அவர். ‘வாட் இஸ் கராத்தே’ என்று 1963இல் இவர் எழுதிய புத்தகம் உலகில் மிக அதிக விற்பனையான கராத்தே புத்தகம் என்ற புகழைப் பெற்றது.கராத்தேயில் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்து அதை அனைவருக்கும் இவர் கற்பித்து வந்தார்.
சிங்கங்களின் தோழர் கெவின் ரிச்சர்ட்ஸன்

சிங்கத்தின் அருகில் சென்று அதை முத்தமிடும் மனித சிங்கம் கெவின் ரிச்சர்ட்ஸன்! (Kevin Richardson) சிங்கத்தின் வாயில் தன் கையை சாதாரணமாக விடுவார். ஏன், சிங்கங்களுடனேயே படுத்துத் தூங்குவார். சிங்கங்களைப் பழக்கும் சர்க்கஸ் வீரர்கள் உலகில் பலர் உண்டு. ஆனால் அவர் போல சிங்கங்களுடன் சகஜமாக யாராலும் இருக்க முடிவதில்லை; இருந்ததில்லை! தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில் 1974 அக்டோபர் 8ஆம் தேதி பிறந்த கெவின், ஜூவாலஜி, மரைன் பயாலஜி படிப்பில் தேறினார். 1600 ஏக்கர் பரப்பளவுள்ள மிருகக்காட்சி சாலையில் பணி புரிய ஆரம்பித்தார். அங்கிருந்த சிங்கங்கள், சிறுத்தைகள் அவருடன் தோழமை கொண்டன. சில சமயம அவரை அவை பிராண்டும், கடிக்கும்; என்றாலும் அவர் அவைகளைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. நன்கு பழக ஆரம்பித்தார். உலகின் ஒரே ‘சிங்க மனிதர்’ (Lion Whisperer) என்ற பெயரையும் பெற்றார். இவர் எழுதிய புத்தகங்கள் வியக்க வைப்பவை; உலகில் அதிக பிரதிகள் விற்பனையானவை. காணொளிக் காட்சிகளாக ஏராளமான காட்சிகள் இவரைப் பற்றி உள்ளன. பார்ப்பவர்களை வியப்படையச் செய்யும் காட்சிகள் இவை!
அடுத்து இன்னும் சில அதிசய வல்லுநர்களைப் பார்ப்போம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி இல்யா இவானோவ் பைத்தியக்காரத்தனமான சோதனை ஒன்றை மேற்கொண்டார்.
1924ஆம் ஆண்டு போல்ஷ்விக் அரசாங்கம் ரஷியாவில் ஆட்சி நடத்தியபோது அவருக்கு நாட்டை விட்டு வெளியேறி உயர் ரக மனிதர்களை உருவாக்கும் முயற்சியைச் செய்ய அனுமதியை வழங்கியது. 1926ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பாரிஸுக்கு வந்தார். அங்கு நோவா என்ற பெயருடைய ஒரு சிம்ப் குரங்கின் உடலில் ஒரு பெண்ணின் கருப்பையை ஒட்ட வைத்தார். அந்தக் குரங்கிடம் மனித விந்து செலுத்துவதன் மூலம் சூப்பர் மனிதனை உருவாக்க முயன்றார். அதே ஆண்டு நவம்பரில் ஆப்பிரிக்கா சென்ற அவர் அங்கேயும் இது போல குரங்குகளின் மீது விஷப்பரிட்சையைச் செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஒரு குரங்கும் கூடக் கருத்தரிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் தன் உத்தியை மாற்றிக் கொண்டார். இப்போது ஒர் பெண்மணியின் கருப்பையில் குரங்கின் விந்தைச் செலுத்திப் பார்க்க எண்ணினார். இதற்காகத் தாமாக முன் வரும் சோவியத் பெண்மணிகளை அவர் தேடினார். ஐந்து பெண்மணிகள் இந்தச் சோதனையை மேற்கொள்ள முன் வந்தனர். ஆனால் இந்தச் சோதனை நடப்பதற்கு முன்பாகவே ஸ்டாலின் ரஷியாவை ஆள்வதற்கு வரவே, ஒரு ஸ்டாலின் ஆதரவாளர் அவரை கழக்கஸ்தானுக்கு நாடு கடத்தி விட்டார். அங்கு சென்ற அவர் இரு வருடங்களுக்குள்ளாக உயிரிழந்தார்.
ஒரு அபாயகரமான பரிசோதனை நடைபெறாமலேயே நின்றது!
***
