
Date: 22 JANUARY 2018
Time uploaded in London- 8-04 am
Written by S NAGARAJAN
Post No. 4647
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
தமிழ் இன்பம்
தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!
ச.நாகராஜன்

கொங்கு மண்டலத்தின் பெருமையை நூறு பாடல்களில் கூறும் கொங்கு மண்டலச் சதகம் தேர் ஓடுவதற்காகத் தன் தலை மகனைப் பறி கொடுத்த வேணாடனைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறது.
சரித்திரம் இது தான்:-
தென்கரை நாடு தாராபுரத்தை அடுத்த கொற்றனூரில் வீ ற்றிருக்கிறார் இறைவன் அப்பிரமேயர். அவர் எழுந்தருளியுள்ள தேர் ஒரு சமயம் நிலை விட்டுப் பெயரவில்லை.
அந்தக் காலத்தில் தேர் ஓட்டத் திருவிழா நடை பெறும் போது தேர் நிலைக்கு வந்து சேர்ந்த பின்னர் தான் பெரியோர் உண்ணுவது வழக்கம்.
இங்கோ தேரே நகரவில்லை. ஆகவே ஊர் மக்கள் அனைவரும் வருந்தினர். என்ன செய்வது என்று தெரியாத நிலை!
பல ஆட்களைக் கூட வைத்து தேரை இழுத்துப் பார்த்தனர்.
ஒவ்வொரு முறையும் தேர் வடம் அறுந்ததே தவிர தேர் நகர்ந்தபாடில்லை.
அப்போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருத்தி ஆவேசமுற்றுப் பேசலானாள்.
“மயங்க வேண்டா. இது ஒரு பூதத்தின் செய்கை. ஒரு மகனாக இருக்கும் தலைப் பிள்ளையை வெட்டிப் பலி கொடுத்தால் தேர் நிலை பெயரும். கவலை தீரும்” என்று கூறினாள் அவள்.
அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த பெரிய குலத்தானான வேணாடன் இதனைக் கேட்டான்.
“ஏராளமானோர் நலனுக்காக ஒரு பிள்ளையை பலி இடுதல் ஒரு பெரிய காரியமா, என்ன” என்று கூறித் தன் தலைமகனான ஒரே பிள்ளையைத் தேர்க்காலில் பலி கொடுத்தான்.
உடனே தேர் நகர்ந்தது. பின்னர் நிலை வந்து சேர்ந்தது.
அனைவரும் அமுதுண்டனர்.
இதனைக் கேள்விப் பட்ட விஜயநகர மன்னன் (விஜயநகர ராயர்) இந்த அரிய செயலை மெச்சி அவருக்குப் பல மேன்மகளை அளித்தான்.
இப்படி ஒரு அரிய வீ ரன் வாழ்ந்த மண்டலம் கொங்கு மண்டலம் என்று புகழ்கிறா கொங்கு மண்டல சதகத்தை இயற்றிய விஜயமங்கலம் கார்மேகக் கவிஞர்.
பாடலைப் பார்ப்போம்:
கொற்றையிற் வீற்றரு ளப்பர மேயர் கொடிஞ்சி செலப்
பெற்ற தன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற
உற்றன ராயர் பொற் சிம்மா தனத்தி லுவந்து வைத்த
மற்றெறி நீள்புய வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே
(பாடல் எண் : 94)
இந்த மாவீரனைப் பாராட்டி உள்ள இன்னொரு வெண்பா இது:
நாத னிரதம் நடவாது செய்கொடிய
பூத மகலப் புதல்வனைவி – நோதமுற
வெட்டிப் புகழ்படைத்தான் வேணுடையான் கோற்றையான்
எட்டுத் திசைமகிழ வே
இப்படிப்பட்ட தியாகங்களை நினைக்கவே பிரமிப்பாயிருக்கிறது!