அரியநாயகிபுரம் ஐயரின் வடதுருவப் பயணம்-Part 1

TromsoMap

Arrow Mark shows the location of Tromso, noorthern most town of Norway.

( We have already published about this trip as abridged by AK Chettiyar. I am giving the portions that we have not covered so far since I have got the full book with me: swami)

மகாமேரு யாத்திரை
கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 919 தேதி 20 மார்ச் 2014

திருநெல்வேலி ஜில்லா தாம்பிரபர்ணீதீரம், அரியநாயகிபுரம் ஆர். அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய ‘மகா மேரு யாத்திரை’ என்ற 1936 ஆம் ஆண்டுப் புத்தகம் பொள்ளாச்சியில் சாலை ஓரத்தில் பழைய புத்தகம் விற்பவரிடம் கிடைத்தது. எட்டு வருஷமாகப் படிக்காமல் பாலிதீன் பையில் போட்டு பாதுகாத்து வைத்த புத்தகத்தை இப்போதுதான் வாசித்தேன். இதோ சில சுவையான செய்திகளை மட்டும் தருகிறேன்.

அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதியது பின்வருமாறு:
1.நான் மகாமேரு யாத்திரை சென்று வந்தவுடன், யாத்திரையைக் குறித்து ஒரு சிறு புஸ்தகம் ‘மிட்நைட் ஸன் இந் தி லாண்டு ஆப் அவர் போர் பாதர்ஸ்’ என்ற பெயருடன் இங்கிலீஷில் பிரசுரம் செய்தேன். நீலகிரியில் ஸ்ரீ ராமகிருஷ்ணாச்சிரமத்தில் ஸ்வாமி சித்பவானந்தரவர்களைச் சந்தித்தேன். அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ் மாதப் பத்திரிகையில் எழுதினேன். பத்திரிகையைப் படித்தவர்கள் இன்னும் விவரமாக எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கேட்டனர்.

2.யாத்திரை செய்யமுடியாவிட்டாலும் யாத்திரா ஸ்தலங்களைப் படித்த அறிவுக்கும் ஒரு புண்ணியம் உண்டு என்று நம் சாஸ்திரங்கள் சொல்லுகிற படியினால் திராவிட தேசத்தில் வசிக்கிற நம் ஆரியர்கள் இந்தச் சிறு தமிழ் புஸ்தகத்தைப் படித்து மகாமேரு யாத்திரைப் பலனை அடையவேண்டுமென்பது என் விருப்பமாகும்—ஜய மஹாதேவ, —— ஆர்.ஏ.சாஸ்திரி, 9-12-1935

3.வேதத்தில் கூறியபடி பூமிமுழுதும் ஆரியர்களுடையது. பிறகு மனு முதலான ஸ்மிருதிகளின்படி தொடர்ச்சி பூமியாயுள்ள ஆசியாக் கண்டம் முழுவதும் ஆரியர் வாசஸ்தானமாக இருந்தது, இப்பொழுது நாம் வசிக்கும் பரத கண்டம் மாத்திரம் ஆரிய வாசஸ்தானமாக குறிக்கப்பட்டிருக்கிறது. எனினும் வட இந்தியாவில் இருக்கும் ஆரியர் தென் இந்தியாவில் வஸிப்பவரை த்ரவிடர்களென்றும் ஆரியர் ரத்தக் கலப்புள்ளவர்களென்றும் பழிப்பதுண்டு. இவைகள் எல்லாம் காலக்கிரமத்தில் வந்த அசூயை ஆகும். மேதாதிதி முதலான சில பெரியோர்களின் சட்டப்படி எந்த இடத்தில் ஆரியர் தங்கள் ஆசாரத்துடன் வஸிக்கிறார்களோ அந்த இடத்திற்கு ஆரியாவர்த்தம் என்றும். எந்தப் பூமியில் மிலேச்சாச்சாரமிருக்கிறதோ அந்த இடத்திற்கு மிலேச்சதேசமென்றும் பூமிக்குத் தனியே தோஷமில்லை யென்றும் அதில் வாஸம் செய்யும் நல்லவர், கெட்டவர்களால் பூமிக்குச் சுத்தம் அசுத்தம் ஏற்படுகிறதென்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.

4.முதிர்ந்த வயதில் வெகுகால சாத்தியமான ஒரு பெரிய யாத்திரையைச் செய்யவேண்டும். அதற்குப் பூ பிரஸ்தாரம்( பூமியைச் சுற்றுதல்: என்று பெயர். பூ பிரஸ்தாரம் என்றால் நம் பரதக்கண்ட மட்டுமன்று; பூமியையே சுற்றுதல் ஆகும். ரூ 3000ம் நான்கு மாத அவகாசமும் கிடைப்பின் பூப்பிரதக்ஷிணம் செய்யலாம். கூட ரூ 3000 இருந்தால் ஆகாயப் பிரதக்ஷிணமும் சிரமமின்றி செய்யமுடியும்.

sun midnight

Mid Night Sun

5.பூமி கோழிமுட்டை மாதிரி உருண்டையாக இருக்கிறதென்பது எல்லாருக்கும் தெரியுமே. வடக்குக் கடைசிக்கு மகாமேரு என்று பெயர். அந்த இடத்திற்கு காந்த முள் இழுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்களே. அவ்விடத்திற்குப் போகமுடியாது. ஆகாய விமானத்தையாவது கப்பலையாவது காந்த சக்தி சமீபத்தில் வரவிடுவதில்லை. அப்படிப்பட்ட இடம் சுமார் 150 மைல் சுற்றளவுள்ளது. இதிலிருந்து சுமார் 400 மைல் தெற்கேயுள்ள இடங்களுக்கு ஆர்டிக் இடங்கள் என்று பெயர். அதாவது 66 டிகிரி முதல் 80 டிகிரி வரை. இவ்விடத்திற்கு நம் பெரியோர் உத்தரகுரு வென்று பெயர் வைத்திருந்தார்கள்.

6.இவ்விடத்தில் மே 14உ முதல் ஆகஸ்டு 30உ வரை சூரியன் உதயாஸ்தமனமில்லாமல் எப்பொழுதும் விளங்குகிறான். அப்படியே தக்ஷிணாயனத்தில் ( நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ) சூரியனே காணப்படுவதில்லை

7. அந்தந்த ஸ்தானத்திற்குத் தகுந்தபடி நம் பூர்வீகர் மூன்று இரவு யாகம் முதல் நூறு இரவு சேர்ந்திருந்த காலம் வரை யாகஞ் செய்ததாக வேதங்களிற் சொல்லப்பட்டிருக்கிறது. சதராத்ரிக் கிரது செய்த இடத்தை நாம் இப்பொழுது ‘ட்றாம்சோ’ என்கிற இடமாகிய 72ஆவது டிக்ரியில் பார்க்கலாம். அவ்விடத்தில் சரியாக நூறு தினங்கள் ஒரே இரவாகச் சூரியனே இல்லாமல் இருக்கிறது. இதற்கு நேரே வடக்கில் மகாமேரு இருக்கிறது. அந்த இடத்திற்கு துருவஸ்தானமென்று பெயர்.
8.இந்த பூமியானது சமமாக ஆகாயத்தில் மிதக்கவில்லை. வட பக்கம் போகப் போகச் சிறிது உயர்ந்திருக்கிறது. ஆகையால் வடதிசைக்கு உத்தரம் என்று பெயர் வந்தது.( ‘உத்’ என்றால் ‘மேல்’ என்று பொருள்). தக்ஷிணம் கொஞ்சம் பள்ளமாகக் காணப்படுவதால் தென் மேருவை நரகம் என்றும், யமபட்டண மென்றும், பூமிக்குச் சிலகோடி மைலுக்குக் கீழே இருக்கிறதென்றும் சில புராணங்களிற் கூறப்பட்டிருக்கிறது. அப்படியே உத்தர மேருவை, தேவர்கள் வஸதிஸ்தானமென்றும் சூரியர் முதலானவர் புண்ணிய பூமியென்று பிரதஷிணம் செய்கிறார்களென்றும், ஸம்ஸாரத்தைத் தாண்ட இது காரணமாக இருப்பதினால் இந்த இடத்திற்கு உத்தரம் (தாண்டவைப்பது) என்றும் சொல்லப்படுகிறது.

9. இந்த ‘ட்றாம்சோ’ என்ற இடத்தில் மே மாதம் 14ஆம் தேதி இரவு 11-45க்கு மேற்குத் திசையில் சூரியன் உதித்து, நவம்பர் மாதத்தில் கிழக்கே அஸ்தமனமாகிறான். ஆகையால், முன் வேதத்தில் குறிப்பிட்ட வாக்கியமானது உண்மையாமன்றோ? வட தேசங்களில், ‘பாதி இரவு சூரியன்’ என்று சூரியனைச் சொல்வது வழக்கம். மே 14 ஆம் தேதி இரவு நான் அந்தப் பாதி இரவு சூரியன் உதிப்பதைப் பார்க்கலானேன். சுமார் 11 மணிக்கு நான் மேற்கே பார்த்துக் கொண்டிருக்கையில், மேல் கடலிலிருந்து ஒளிப் பிழம்பொன்று தோன்றுவது தெரிந்தது; உடனே கொஞ்சம் மேலே வந்து வடக்கே அது ஓடிவிட்டது.

10. அங்கு சூரியன் நம் தேசத்திற் போல ஆகாயத்தில் குறுக்கே போவதில்லை. ஆகாயத்தின் ஓரமாகவே செல்லுவான். ஆகையால் சாஸ்திரங்களில்’ ‘குயவன் பானை செய்கிற சக்கரம் போலச் சூரியன் சுற்றுகிறான்’ என்று வருணிக்கப்பட்டுள்ளது (குலால சக்கிர பிரமவத்: திலகர் எழுதிய ஆர்டிக் புஸ்தகம்). அப்படிச் சுற்றுவதனால் சூரியன் நிறம் சுவர்ணமயமாகவே யிருக்கும். நல்லவெண்மை நிறம் அன்று. ஆகையால் எப்பொழுதும் ‘மகாமேரு சூரியன்’ பொன் வர்ணமென்று வேதங்களில் புகழப்படுகிறான் (ஹிரண்மயன்). மேருப் பிரதேசத்தில் சூரியனுக்கு தாமிரம், அருணம், பப்ரு, சுமங்களம் என்ற நாலு வர்ணங்களுண்டென்று வர்ணிக்கப்படுகிறது (ருத்திராத்தியாயம்). ஏழுவர்ணம் சொல்லிய வேத வாக்கியங்களை, நம் தேசங்களில் சூரியனைக் கண்டு வர்ணித்ததாகக் கொள்ளவேண்டும். சூரியன் தங்க வர்ணம்; ஹிரண்மய மீசை; பொன் மயிர்; கால் முதல் தலைவரை ஸ்வர்ண தேஜஸ் என்று சொல்லிய வாக்கியங்கள் எல்லாம் மேருப் ப்ரதேச சூரியனைக் குறித்தவைகளாகும். இதை உத்தேசித்துத் தான் மகாமேரு ஸ்வர்ணபர்வதமென்று புராணங்களில் அலங்கரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதாரம்: மகாமேரு யாத்திரை (நடுநிசி சூரியன் நம் முன்னோர் வசித்த பூமியில்), ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரியினால் யாத்திரை செய்து எழுதப்பட்டது, ஜனவரி 1936.

tromso_1571126i

Northern Lights known as Aurora Borealis

என் குறிப்புகள் : 1935 ஆம் ஆண்டில் ஒரு திருநெல்வேலி பிராமணர் இப்படி நார்வே நாடு வரை போனது அதிசயம்தான். ஆசார அனுஷ்டானங்களையோ, நியம நிஷ்டைகளையோ விடாது போனது பற்றி அவர் கூறுவதை இரண்டாவது பகுதியில் தருகிறேன். இதைவிட அதிசயம், வேத கால ரிஷிகளுக்கு வட துருவம் பற்றி எப்படித் தெரிந்தது என்பதுதான். லோகமான்ய பால கங்காதர திலகரும் 1925 ஆம் ஆண்டிலேயே இது பற்றி எழுதி இருக்கிறார்.

இன்று நாள்ளிரவுச் சூரியனைப் பார்ப்பது சர்வ சாதாரணம். ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நார்வே ஸ்வீடன் நாடுகளில் குவிகின்றனர். உண்மையான வட துருவத்துக்கும் இந்தியர்கள் சென்று வந்துவிட்டனர். அனந்த கிருஷ்ண சாஸ்திரிகள் போனது நார்வேயின் வடகோடிப் பகுதிதான். அவரது சாதனை அங்கு சென்றுவிட்டு 1936ஆம் ஆண்டிலேயே தமிழில் புத்தகம் எழுதியது ஆகும்!!
தொடரும்………….

contact swami_48@yahoo.com

Pictures are taken from different sites;thanks.

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 1

Picture shows Sun is visible 24 hours a day.

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 1

ச.நாகராஜன்

கோவில்களைக் கட்டுவதற்கும் கட்டிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கும் தமிழ் வளர்ச்சிப் பணிக்கும் தங்கள் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த அற்புதமான குலம் செட்டியார் குலம். இவர்களின் பணிகளைப் போற்றுவார் இன்று இலர். தமிழகத்தின் இன்றைய பல துரதிர்ஷ்டங்களில் இதுவும் ஒன்று!

உலகம் சுற்றும் தமிழன் என்று புகழப்பட்ட திரு ஏ.கே.செட்டியார் (தோற்றம்: 3 நவம்பர் 1911 மறைவு 10 செப்டம்பர் 1983)சிறந்த தேசபக்தர். நேதாஜியை படம் எடுத்தவர். குமரி மலர் என்ற அற்புதமான பத்திரிக்கை மூலம் தமிழ்ப் பணி ஆற்றியவர்.

வெள்ளை வெளேரென்று தும்பைப் பூ போல சட்டையும் வேஷ்டியையும் அணிந்து வருவார். தும்பைப் பூ போன்ற ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளின் மேல் தேனை ஊற்றிக் கொண்டு சாப்பிடுவார். மென்மையான குரல். எப்போதும் புன்முறுவல் தான்! அழகிய வெள்ளைப் பற்கள் தெரிய அவர் பேசுவதைக் கேட்பதும் ஓர் இனிய அனுபவம். குமரி மலர் சந்தாவைத் தானே நேரில் பெற வருவார்.

அவரது குமரி மலர் பத்திரிக்கை ஒரு பெரும் பொக்கிஷம். பார்த்துப் பார்த்துப் பழைய கட்டுரைகளை வெளியிடுவார்.

அவரது குமரிமலர் பத்திரிக்கையில் வெளி வந்த ஒரு அற்புதமான கட்டுரையைப் பார்ப்போம்!

கட்டுரையின் தலைப்பு : மகா மேரு யாத்திரை (1934)

எழுதியவர் :   ஆர். அனந்த கிருஷ்ண சாஸ்திரி

நார்வே தேசத்தில் ட்றோணியம் என்ற கடற்கரை நகரிலிருந்துதான் மகாமேரு பிரதேசத்திற்குப் புறப்பட வேண்டும். மகாமேரு பிரதேசத்திற்கு ஆர்க்டிக் பிரதேசம் என்று பெயர் வழங்குகிறது. இவ்விடத்திலிருந்து மகாமேரு சுமார் ஆயிரம் மைல் தூரத்திலிருக்கிறது.

 

ட்றோணியத்திலிருந்து யாத்திரை செய்த கப்பல் தபால் கொண்டு போவது; ஆகையால் ஒவ்வோரிடத்திலும் தபாலைக் கொடுத்து வாங்கச் சுமார் அரை மணி நேரம் வரை நிற்கும். அப்பொழுது நான் கீழே இறங்கி அந்தக் கிராமங்களைச் சுற்றிக் கொண்டு வருவேன். தலையில் தலைப்பாகையும் கழுத்தில் சால்வையும் அணிந்து கொண்டுள்ள மஞ்சள் நிற மனிதனை அத்தேசத்தார் பார்த்திராததினால் என்னைப் பார்த்து வியப்புற்றனர்.சிலர் கப்பல் அதிகாரியிடத்தில் போய் என் வரலாற்றை வினவியதுமுண்டு.

 

கப்பல் ஏறின முதல் நாளில் கப்பல் அதிகாரியைச் சந்தித்து மறுநாள் காலையில் தண்ணீரில் ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லப் போனேன்.தண்ணீரில் வைகறையில் ஸ்நானம் செய்தலென்பதை அவர் கேட்டிராதவர்.ஆதலால் அஞ்சி உடலுக்குத் தீமை வந்தால் தாம் பொறுப்பேற்க நேருமாகையால் நான் எவ்வளவு தூரம் பிரார்த்தித்தும் சாவியைக் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். அவருடைய மனைவியிடத்தில் சென்று சிறிது நேரம் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்த பிறகே இந்தியாவில் குளிர்காலத்தில் கூடப் பலர் கங்கை முதலான நதிகளில் வைகறையில் நாலு மணிக்கு ஸ்நானம் செய்யும் வழக்கத்தையும் இந்துக்களின் ஆசாரத்தையும் சொல்லி உறுதிப் படுத்தினேன். அவ்வம்மை தயையால் தண்ணீர் அறைச் சாவியை வாங்கி மறுநாள் வைகறையில் ஸ்நானம் செய்தேன். பிறகு ஜபம் பூஜை முதலிய எல்லாம் முடிந்து வெளியில் வந்தவுடன் எனக்கு ஸ்நானத்தினால் கெடுதல் உண்டா என்று பார்க்கப் பலர் வந்தார்கள்.

பால், பழம், பச்சைக் காய்கறியாகிய உணவைப் பார்த்து நான் ஒரு ஸித்த புருஷன் என்றும் கீழ் நாட்டில் அவதரித்திருப்பதாகவும் சொல்லலாயினர்.

என்னைப் போல் இந்தியாவில் கோடிக்கணக்கான  பேர் உண்டு என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை.இதை வழக்கத்தினால் சம்பாதிக்கலாம்; இஃது ஒன்றினாலேயே மோக்ஷம் கிடைத்து விடாது என்று நான் அவர்களுக்குக் கூறுவேன். என்ன சொன்னாலும் அவர்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை.

பிறகு மெள்ள மெள்ள 66-வது கோடு (லாடிடியூட்) தாண்டினேன். கணித சாஸ்திர வித்வானாகிய பாஸ்கராசாரியார் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் எழுதிய ‘சித்தாந்த சிரோமணி” என்னும் நூலில்

66-வது கோடு தாண்டி வடக்கே போகப் போகப் பகல் நேரம் மிகுதியாகவும், மேருவில் ஆறு மாதம் ஒரே பகலாகவும் இருக்கும் என்று கூறியது ஞாபகத்துக்கு வந்தது; பகல் அதிகரிக்கலாயிற்று.

ட்றோம்ஸோ என்கிற இடத்தில் 68-வது கோட்டில் மே மாதம் 14-ந் தேதி இரவு 11-45 மணிக்கு மேற்கு நோக்கி நின்று சூரியன் வரவை எதிர்பார்த்தேன். ஈசுவர கிருபையினால் அன்று வானில் மேகம் பரவுவதும் பனி விழுவதும் இன்றி இருந்தது. மேலைக் கடலிலிருந்து ஒரு ஒளிப்பிழம்பு தோன்றி உடனே வடக்கே ஓடிவிட்டது. இதைத் தான் ‘பாதி ராத்திரி உதய ஸுர்ய’ னென்றும் மேற்கில் உதித்து கிழக்கில் அஸ்தமனமாகிறதென்றும் வேதம் கூறுகிறது.இந்த ட்றோம்ஸோவில் பாதி ராத்திரியில் உதித்த ஸூர்யன் உடனே  அஸ்தமனமாகாமல் சரியாக நூற்றொரு நாட்கள் வானில் குயவன் சக்கரத்தை யொப்ப தணிந்து சுழற்றிக் கொண்டு ஆகஸ்டு மாதம் கடைசியில் கிழக்கே அஸ்தமனமடைகிறான். அப்படியே தக்ஷிணாயனத்தில் 101 நாட்கள் சூரியன் ஒளியின்றி ஒரே இரவாக இருக்கும். இந்த இடத்தில் தான் முன்னையோர் “சதராத்திரக்கிரது” நடத்தியதாக ச்ரௌத சூத்திரங்கள் கூறுகின்றன. 101 நாட்கள் ஒரே இரவாயிருக்கிற வேறோரிடம் இதற்கு நேரே கீழ்ப் பூமியிலாகும்.  அந்தப் பூமி அமெரிக்காவின் வட பாகத்தில் ஆர்க்டிக் பிரதேசத்தில் அலாஸ்கா என்கிற இடமாகும். ஆரியர் அந்தப் பிரதேசத்தில் பண்டைய நாளில்  வசித்து வந்ததாகச் சரித்திரங்களினால் விளங்கவில்லை; ஆகையால் இந்தப் பிரதேசத்திலேயே ஓர் இரவு முதல் நூறு இரவு வரையில் நம் பெரியோர் யாகம் நடத்தியிருக்க வேண்டும்; இதை மனதிற் கொண்டு ருக் வேதத்தைப் படித்தால் அதில் வர்ணித்திருக்கிற சூரிய வர்ணங்கள் ஆறு மாதம் சூரியனும் ஆறு மாதம் சூரியனில்லாத காலமும், பலவித உதய காலமும் மூன்று முதல் ஐந்து வரையிலுள்ள ருதுக்களும் கணித சாஸ்திர முறைப்படி நன்கு விளங்கும்.

 

ஆர்க்டிக் பிரதேசத்தில் சூரியன் எப்பொழுதும் மறைவின்றி யிருப்பதால், பூமியில் உள்ள நிலங்களில் தானியங்கள் மும்முறை விதைத்து அறுவடை செய்யப்படுகிறது.ஆகையால் உணவுப் பண்டங்களுக்கு குறைவேயில்லை. தக்ஷிணாயனத்தில் ஒரே பனி மழை; அப்பொழுது பயிர்த் தொழில்கள் நடப்பதில்லை.கைத்தொழில் வேலைகள் நடக்கும். ஒரே இராத்திரி காலங்களில் சூரிய ஒளியே இல்லாததால் சந்திரனுடைய நிலவாலும் விடியற்கால (அருணோதய) பிரகாசத்தினாலும் மகா மேருவிலிருந்து ஒரே ஒளிப் பிழம்பு தெற்கே பார்த்து வீசும் பிரகாசத்தினாலும்  (ஆறோ போரியாலிஸ்) இருட்டே தெரிவதில்லை. நம் தேசத்தில் சூரியனை மறைத்து இருளுடன்  மழை பெய்யும் காலத்துப் பகல் போல இருக்கும். ஆனால் அடிக்கடி ஒளி மாறும்.

-அடுத்த இதழில் கட்டுரையின் இறுதிப் பகுதி தொடரும்