
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 November 2018
GMT Time uploaded in London –7-39 am
Post No. 5699
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சார்ல்ஸ் லாம்ப் (CHARLES LAMB) என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர், கவிஞர். அவர் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். திடீரென்று கூட்டத்தில் ‘உஸ்’ என்ற சப்தம். பலமாகக் கேட்டது. திடீரென்று ஒரே நிசப்தம். எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
லாம்ப் கொஞ்சமும் அசரவில்லை. உலகத்தில் மூன்று ஜந்துக்கள்தான் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒலி உண்டாக்கும்
1.குள்ள வாத்து
2.பாம்பு
3.முட்டாள் பயல்
யாரடாவன்? இந்த மூன்றில் இங்கே எது இருக்கிறது? துணிச்சல் இருந்தால் உன் மூஞ்சியைக் காட்டு.
(அவர் இப்படிச் சொன்னபின் பேரமைதி; கூட்டம் இனிதே நடந்தது.)
xxxxx

scientist Scheele
தவறான ஆளுக்கு விருது! அடித்தது குருட்டு யோகம்!
மூலகங்கள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய அஸ்திவாரக் கற்கள். 118 மூலகங்கள் திட, திரவ, வாயு ரூபங்களில் இருக்கும். அவற்றில் ஒன்று மக்னீஷியம் (MAGNESIUM). அதைக் கண்டு பிடித்தவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஷீல் (SCHEELE) என்பவர் ஆவார்.
ஒருமுறை, பிரெஞ்சு விஞ்ஞானிகள் பாரீஸ் நகருக்கு வந்த சுவீடன் மன்னர் மூன்றாவது குஸ்டாவைச் (GUSTAV III) சந்தித்தனர்.
மன்னரே! நீவீர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலி; உமது நாடு மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் என்பவரை உடைத்தாய் இருக்கிறதே! அஹோ, பாக்யவான்! என்று சிலாகித்துப் பேசினர்.
மன்னருக்கு ஒரே வெட்கம்: ஏனெனில் அவர் விஞ்ஞான முன்னேற்றம் பற்றி அறியாத ஞான சூன்யம்! இருந்தபோதிலும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு ‘நன்றி நன்றி’ என்று புகன்றார்.
அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன், சுவீடனுக்கு செய்தி பறந்தது.
“ஷீல் அவர்களுக்கு பிரபு (COUNT) என்ற பட்டம் கொடுத்து கௌரவியுங்கள்”.
சுவீடன் பிரதமர் அந்தச் செய்தியைப் பார்த்து,
அட ராஜாவின் கட்டளை; உடனே நிறை வேற்ற வேண்டும்.உடனே ஷீல் என்பவரின் விலாசத்தைக் கண்டுபிடித்து முழு விவரமும் அறிக; இங்கே கொணர்க– என்று காரியதரிசிக்குக் கட்டளையிட்டார்.
அவர் உடனே அட்ரஸ் புஸ்தகத்தைப் பார்த்து ஒரு ஷீல் என்பவரைக் கண்டு பிடித்தார்.
மண்டு, மக்கு, முட்டாள் காரியதரிசி கண்டுபிடித்தது இதுதான்ந்— ஷீல் என்பவர் நமது பீரங்கிப் படையில் லெப்டினன்ட் அந்தஸ்தில் இருக்கிறார். நல்ல திறமையான படைவீரன். அது மட்டுமா பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கில்லாடி என்று.
உடனே அந்த ஊர் பேர் தெரியாத ஆசாமிக்கு பிரபு பட்டம் கொடுத்து ஆசனத்தில் அமர்த்தினர்.
மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் அவர்களோ, முன்னைப் போலவே சோதனைச் சாலையில் ரசாயனக் குடுவைகளுடனும் சோதனைக் குழாய்களுடனும் மன்றாடிக் கொண்டிருந்தார்.
XXX

டேய் குரங்கு! என்ன முழிக்கிறாய்?
ஒரு பிரபல விலங்கியல் நிபுணர், ஒரு குரங்கைப் பிடித்து அதற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுத்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை; குரங்கு, குரங்காகவே இருந்தது. அவருக்கு ஒரு ‘ஐடியா ‘ (IDEA) தோன்றியது. ஒரு பந்தையும் மட்டையையும் குரங்கின் கையில் கொடுத்து ஒரு அறைக்குள் பூட்டி வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் பேரார்வத்துடன் குரங்கு என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்று கிளம்பினார். சத்தம் இல்லாமல் சாவித் துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்தார். துவாரத்தின் மறு புறத்திலிருந்து ‘இரண்டு விழிகள்’ அதே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன!
(மனிதனுக்குக் குரங்கு புத்தி; குரங்குக்கு மனித புத்தி என்று சொல்லலாமே)
Tags- கூட்டத்துல பாம்பு,ஷீல், மக்னீஷியம், குரங்கு பந்து
–சுபம்–