Written by S NAGARAJAN
Date : 4 September 2015
Post No. 2122
Time uploaded in London : 5-54 am
ச.நாகராஜன்
“மனம் என்பது சக்தி வாய்ந்த ஒரு கருவி. வியாதிக்கு எதிரான இந்தப் போராட்டமானது அணு அணுவாக உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஆக இரண்டினாலும் ஆனது – டேவ் லினிகர்
மனோசக்தியின் வலிமைக்கு உதாரணமாக ப்ளேசிபோ எபெக்ட் (Placebo effect) பற்றிக் கூறும் போதே அதற்கு எதிர்ப் பக்கமான நோசிபோ எபெக்ட் (Nocebo effect) பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகிறது.
18ஆம் நூற்றாண்டில் உருவான ப்ளேசிபோ என்ற சொல்லுக்கு “நான் இன்பம் தருவேன்” (I will please) என்று அர்த்தம். இதற்கு எதிர்மாறாக நெகடிவ் மனோநிலை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பது நோசிபோ விளைவு என்று கூறப்படுகிறது. நோசிபோ என்ற லத்தீன் வார்த்தைக்கு அர்த்தம் ‘நான் தீங்கு விளைவிப்பேன்’ (I will harm) என்பதாகும். கான்ஸர் நோயால் பாதிக்கப்பட்டோர் கீமோதெராபிக்கு முன்னர் வாந்தி எடுப்பதையும் ஒரு சாதாரண செடியைத் தொட்டவுடன் விஷச் செடியைத் தொட்ட பாதிப்பு வந்தது போல் சிலர் அலறுவதும் இதற்கு உதாரணங்கள்.
இதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம். உதாரணமாக, அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கேஸ் உலகெங்கும் பிரபலமாகப் பேசப்படுகிறது. இந்தச் சம்பவம் நியூ ஸயின்டிஸ்ட் இதழில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.
அலபாமாவைச் சேர்ந்த வான்ஸ் என்பவர் கல்லறை ஒன்றுக்குச் சென்று மந்திரவாதி ஒருவரைப் பார்த்தார். மந்திரவாதி, வான்ஸிடம் ‘நீ சீக்கிரமே சாகப் போகிறாய்’ என்று கூறி விட்டார். இதை நம்பி விட்ட வான்ஸுக்கு உடல்நலம் சில வாரங்களிலேயே படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. இறக்கும் நிலைக்கு வந்து விட்ட வான்ஸை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் உடல்ரீதியாக அவருக்கு எந்த நோயும் இல்லை என்று உறுதியாகக் கூறினர். வான்ஸின் மனைவி டாக்டர்களிடம் வான்ஸ் கல்லறைக்குச் சென்று மந்திரவாதியைச் சந்தித்ததையும் அவன் வான்ஸை சீக்கிரமே இறக்கப் போகிறாய் என்று கூறியதையும் சொன்னார்.
டாக்டர்களின் ஒருவரான டாக்டர் டோஹெர்டிக்கு ஒரு யோசனை உதித்தது. மறுநாள் வான்ஸ் தம்பதிகளை அழைத்த டாக்டர் டோஹெர்டி, தான் முதல் நாளன்று கஷ்டப்பட்டுத் தேடி மந்திரவாதியைச் சந்தித்ததாகவும் என்ன செய்தாய் என்று அவனை மிரட்டியதாகவும், கடைசியில் அவன் பயந்து போய் நடந்ததைக் கூறி விட்டான் என்றும் கூறினார். மந்திரவாதி ஒரு பல்லியை வான்ஸின் உடலுக்குள் செலுத்தி விட்டதாகவும், உடலின் உள்ளே இருக்கும் பல்லி படிப்படியாக வான்ஸின் உடலை அரிப்பதாகவும் டாக்டர் டோஹெர்டி கூறினார். அதற்கு மாற்று மருந்தைத் தான் தயாரித்திருப்பதாகவும் அந்த இஞ்ஜெக்ஷனை இப்போது போடப் போவதாகவும் கூறினார். வான்ஸுக்கு இஞ்ஜெக்ஷன் போடப்பட்டது. என்ன ஆச்சரியம், கஷ்டப்பட்டு பச்சையான பல்லி ஒன்றை வான்ஸின் உடலிலிருந்து எடுத்த அவர் அதை வான்ஸ் தம்பதியினரிடம் காண்பித்து இனி மந்திரவாதியின் பல்லி ஒன்றும் செய்ய முடியாது என்று சந்தோஷத்துடன் உரக்கக் கூவினார்.
வான்ஸ் அமைதியாக அன்று இரவு உறங்கினார். மறு நாள் காலையில் எழுந்த வான்ஸுக்கு ஒரே பசி. உடலில் வியாதியே இல்லை. சில நாட்களிலேயே பழையபடி ஆனார் வான்ஸ். டாக்டர் சொன்னது முழுப் பொய். பல்லியும் பொய், மாற்று மருந்தான இஞ்ஜெக்ஷனும் பொய், உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறிய பச்சைப் பல்லியும் பொய். பெரிய டிராமாவை நன்கு ‘செட்–அப்’ செய்து போட்டிருந்தார் டாக்டர்.
இந்த சம்பவத்தை வேறு நான்கு பேரும் உறுதி செய்த பின்னர் இது அந்த பிரபல விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டது. வூடு என்னும் மந்திரவாத வித்தை இப்படித் தான் மனதளவில் ஒருவரை வாட்டி வதைத்துக் கொல்கிறது. இந்த விளைவைத் தான் நோசிபோ எபெக்ட் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ப்ளேசிபோ விளைவு சர்ஜரியைத் தவிர்க்கிறது. பருக்கள் மற்றும் தோல் மீது வரும் கட்டிகளைப் போக்க்குகிறது. காயங்களைக் குணப்படுத்துகிறது. இதற்கு மாறான நோசிபோ எபெக்ட் எதிரமறையான மனோசக்தியைத் தூண்டி விட்டு வாந்தி, காதில் இரைச்சல், பயம், நரம்புத் தளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு போன்றவற்றைத் தருகிறது.
இன்னொரு ஆய்வில் இறக்கப் போகிறோம் என்று நினைத்தவர்களையும், வியாதியினால் இறக்க மாட்டோம், மீண்டு வீட்டுக்கு போவோம் என்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இறக்கப் போகிறோம் என்று நம்பியவர்கள் இறந்தே போயினர்.
இதய நோய் வந்து விட்டது என்று நம்பும் பெண்களுக்கு சாதாரண இதய நோய் உள்ளவர்களை விட நான்கு மடங்கு அதிகம் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. சீரான இரத்த அழுத்தம் மற்றும் நல்ல உடல்நிலையைக் கொண்டிருந்தாலும் இறப்பதன் காரணம் எதிர்மறை மனோசக்தியாக தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற அவர்களது (அவ)நம்பிக்கையே இதற்குக் காரணம்!
சாஸ் என்ற பெண் மருத்துவரின் சகோதரர் ஸ்டீவ். நுரையீரலில் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்த அவரது டாக்டர் தற்போது பயமில்லை என்றும் இன்னும் ஐந்து வருடங்கள் அவர் உயிர் வாழ்வார் என்றும் ஆறுதலாகக் கூறினார். ஸ்டீவ் டாக்டரை நம்பினார். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் மாவி என்ற கடற்கரையில் நினைவின்றிக் கிடந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் நான்கு நிமிடங்கள் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லாமல் இருந்ததால் இறந்து போனார். அவரது நம்பிக்கையே அவரை ஐந்து வருடங்கள் உயிர் வாழ வைத்தது. அதுவே ஐந்து வருடங்கள் முடிந்தவுடன் அவரை “வழி அனுப்பி” வைத்தது.
இப்படி “நாள் குறித்து” ஆறுதல் சொல்லும் டாக்டர்கள் நோயாளிக்கு நல்லது செய்வதில்லை. பொதுவாக அவர்கள் தீங்கையே விளைவிக்கிறார்கள்.
இன்ஸ்டிடியூட் ஆஃப் நோயடிக் ஸயின்ஸஸ் (The Institiute of Noetic Sciences) ஆராய்ந்து பதிவு செய்த 3500க்கும் மேற்பட்ட கேஸ்கள் கூறுவது ஒரே ஒரு உண்மையைத் தான்! தீர்க்க முடியாத வியாதி என்று ஒரு வியாதி உலகத்திலேயே இல்லை. ஆனால் நமக்கு இந்த வியாதி குணமாகாது என்று மனிதன் நம்பும் நம்பிக்கையே அவனது வியாதியைக் குணமாக்காது செய்து விடுகின்றது.
டாக்டர் லிஸா ரான்கின் என்பவர் மைண்ட் ஓவர் மெடிசின்: ஸயிண்டிஃபிக் ப்ரூஃப் தட் யூ கேன் ஹீல் யுவர்செல்ஃப் (Mind Over Medicine: Scientific Proof That You Can Heal Yourself – Dr Lissa Rankin) என்ற தனது நூலில் மனத்தின் ஆதிக்கம் உடலில் அதிகம் உண்டு; அது தீராத வியாதிகளையும் தீர்த்து வைக்கும். நம்புங்கள், குணப்படுவீர்கள் என்கிறார்.
ஆக ப்ளேசிபோ எபெக்ட் மற்றும் நோசிபோ எபெக்ட் பற்றி அறிந்து கொண்டோர் தெரிந்து கொள்ளும் ஒரு அறிவியல் உண்மை – மனோசக்தி மூலம் ஒருவர் சீரான உடல்நலத்தைப் பெற்று ஆக்கபூர்வமாக முன்னேறலாம் என்பதையே!
நன்றி : பாக்யா 4-9-2015 பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை
(Written by my brother for “Bhagya”, a Tamil Magazine:London swaminathan;pictures are used from various sites;thanks)



You must be logged in to post a comment.