நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2 (Post No.5248)

Written by S NAGARAJAN

 

Date: 23 JULY 2018

 

Time uploaded in London –   7-26  AM (British Summer Time)

 

Post No. 5248

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 20-7-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபதாம்) கட்டுரை

செயற்கை அறிவுடன் கூடிய நவீ ன சாதனங்கள் மனித குல எதிரிகளா? – 2

ச.நாகராஜன்

 

செயற்கை அறிவால் என்ன பயன் என்று கேட்போருக்கு ஒரு சுவையான செய்தி உண்டு!

 

நடிலஸ் (Nautilus) என்ற செயற்கை அறிவூட்டப்பட்ட சூப்பர் கணினி தான் ஒஸாமா பின் லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. உண்மை. அதற்குள் பத்து கோடி செய்திகளும் கட்டுரைகளும் பதிவு செய்யப்பட்டன. அது ஆராய ஆரம்பித்து ஒஸாமா பின் லேடன் ஒளிந்திருக்கும் இடத்தை 125 மைல் தூரத்திற்குள்ளாக இருப்பதாக அறிவித்தது.

 

 

லேரி பிர்ன்பாம் (Larry Birnbaum)என்ற பேராசிரியர் ஒரு கட்டுரையை கணினியில் செலுத்தினார். அது படித்தது. பின்னர் ஏராளமான செய்திகளை அதனுள் செலுத்த அது தானே ஒரு கட்டுரையை எழுதியது. கதைகளையும் அது எழுத ஆரம்பித்தது. ஆக எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இனி பலத்த போட்டி உண்டு.

இன்னொரு அச்சுறுத்தும் செய்தி! ரொபாட்டுகள் தன்னைத் தானே ரிப்பேர் செய்து புதுப்பித்துக் கொள்ளும். ஆம், உண்மை. ஆறு கால்கள் கொண்ட ஒரு ரொபாட்டின் இரு கால்கள் பழுதடைந்தன. அது பார்த்தது, தன்னைத் தானே ஆராய ஆரம்பித்தது. 13000 இயக்கங்களை அலசி ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து தனது இரு கால்களை இயங்க வைக்கும் முறையைக் கண்டுபிடித்து “ஆரோக்கியமானது. எதிர்காலத்தில் அப்படியானால் சாவே இல்லாத சிரஞ்சீவி கம்ப்யூட்டர்கள் உருவாகிவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறதல்லவா?

 

இனி இன்னும் ஒரு செய்தி இருக்கிறது, அதை ஏன் விட்டு வைக்க வேண்டும். ரொபாட்டுகளுடன் மனிதன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியும் என்கிறார் ரொபாட் இயல் நிபுணர்  ஒருவர்.

 

ஆக இவற்றை உயரத் தூக்கி வைக்கவும் முடியாது, ஒதுக்கி வைக்கவும் முடியாது என்பதே இன்றைய நிலை!

 

 

நடிலஸ் (Nautilus)

 

சிந்திக்கும் இயந்திரங்களைப் பற்றி என்ன சிந்திப்பது என்ற கேள்வியை எழுப்பும் வில்லியம் பவுண்ட்ஸ்டோன் கணினி நிபுணரான எட்ஜெர் டிஸ்க்ஸ்ட்ரா கூறியிருப்பதை மேற்கோளாகக் காட்டுகிறார்:

 

 

“இயந்திரங்கள் சிந்திக்குமா என்ற கேள்வி, சப்மரீன்கள் நீந்துமா என்று கேள்வி கேட்பதைப் போல ஆகும். ஒரு திமிங்கிலமும் ஒரு சப்மரீனும் நீரில் வேகமாக முன்னேறும். ஆனால் அவை இரண்டும் அடிப்படையிலேயே வேறு விதமாக அதைச் செய்கின்றன. சிந்திப்பதும் கணினிசெய்வதும் ஒரே முடிவைத் தந்தாலும் அவை அதைச் செய்யும் முறை அடிப்படையிலேயே வித்தியாசமானது.

 

இன்னொரு பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஃப்ரீமேன் டைஸன் இந்தக் கேள்வியே அர்த்தமற்றது என்கிறார். “சிந்திக்கும் இயந்திரங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை அல்லது அவை சமீப காலத்தில் உருவாகக்கூடும் என்பதையும் நான் நம்பவில்லை. அடிக்கடி நான் எண்ணுவது தவறாகப் போகிறது. நான் தவறு என்றால், இந்தக் கேள்வியைப் பற்றிய சிந்தனைகள் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதவை. நான் சரி என்றால் இந்தக் கேள்வியே அர்த்தமில்லாது போகிறது.

1965ஆம் ஆண்டிலேயே கணித மேதையான இர்விங் குட், “ அல்ட்ரா இண்டெலிஜென்ட் மெஷின் மனிதன் வடிவமைப்பதை விட இன்னும் அருமையாக நவீன இயந்திரங்களை வடிவமைக்கும். அப்போது மனிதனின் அறிவை அது மிஞ்சி விடும். ஆக அந்த மெஷினே மனிதனின் கடைசி கண்டுபிடிப்பாக அமையும் என்கிறார்.

 

 

மனிதனின் கையை மீறி இயந்திரங்கள் தாங்களே சிந்திக்க ஆரம்பித்து விட்டால்..?

எப்போது செயற்கை அறிவுள்ள இயந்திரங்கள் மனித அறிவை மிஞ்சும். அப்போது நல்லது நடக்குமா, கெட்டது நடக்குமா?

செயற்கை அறிவு பற்றி ஆராயும் விஞ்ஞானியான மாக்ஸ் டெக்மார்க் இதை பல வகையாகப் பிரிக்கிறார்.

செயற்கை அறிவு மனித அறிவை இன்னும் சில ஆண்டுகளில் மீறி விடும் என்று நம்புவோர் – இப்படிப்பட்டவர் யாரும் இப்போது இல்லை.

 

 

செயற்கை அறிவு  இன்னும் 50 முதல் 100 ஆண்டுகளில் மனித அறிவை மிஞ்சி விடும். அது மனித குலத்திற்கே ஒரு வரபிரசாதமாக அமையும். இப்படி எண்ணுவோர் பலர்.

இதற்கு எதிர்மாறாக எண்ணுவோர் செயற்கை அறிவு இயந்திரங்கள் மோசமானவை என்கின்றனர்.

 

 

“இன்னும் நூறு ஆண்டுகளில் செயற்கை அறிவு வந்து விடும். அவை நல்லதையே செய்ய வேண்டும் என்பதற்கான வேலையை ஆரம்பிப்போம் என்கின்றனர் இன்னும் சிலர்.

கணினிகளிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில் தான் வரும்.ஆனால்  மனித மூளையோ வெவ்வேறு விதமாகச் சிந்திக்கும்.கணினி துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளில் செயல்படும். மனித மூளையோ வாய்ப்புக்கேற்றபடி செயல்படும். கணினிகள் குறிப்பிட்ட சூத்திரங்கள் வழியேயும் புரோகிராம் செய்யப்பட்ட வழிமுறையிலும் செயல்படும். ஆனால் மனித மூளையோ மனத்தின் வழியே உள்ளர்த்தத்தைக் கண்டு விதவிதமாக செயல்படும். கணினிகள் கோட் என்ற பாஷை வழியே செயல்படும் போது மனித மூளையோ நியூரான்கள் வழியேயும் ரத்த ஓட்டம், மற்றும் ஹார்மோன்கள் வழியேயும் அபூர்வ வழியில் சிந்திக்கும்.

 

 

ஒரு ஆச்சரியகரமான விஷயம், செயற்கை அறிவு எப்படி செயல்படும் என்பதை நுணுக்கமாக விவரிக்கும் விஞ்ஞானிகள் மனித மூளை எப்படி செயல்படுகிறது என்பதை லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்னும் கண்டுபிடிக்கவில்லை!

மொத்தத்தில் பல அறிஞர்களின் கருத்து செயற்கை அறிவு நம்மை ஆளப்போகும் யுகத்தில், சினிமா, நடனம், நுண்கலைகள் போன்ற நுட்பமான விஷயங்கள் அறவே இருக்காது!,

 

 

மனிதர்கள் செயற்கை அறிவு சாதனங்களுக்கு அடிமையாக ஆகி, அவர்களை எஜமானராகக் கொண்டு செயல்பட வேண்டி வரும், என்பது தான்!

 

இன்னொரு முக்கிய விஷயம், செயற்கை அறிவு இயந்திரங்கள் பெருமளவில் உலகை ஆக்கிரமிக்கும் போது மனிதர்கள் இன்று பார்க்கும் வேலைகளில் 70 சதவிகிதம் இருக்காது! அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

 

 

ஆகவே செயற்கை அறிவை வரவேற்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக வரவேற்பை நடத்த வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஏகோபித்த கருத்தாக அமைகிறது!

செயற்கை அறிவே உனக்கு ஒரு ஜே போட்டு வரவேற்கிறோம் – சற்று ஜாக்கிரதையுடன்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

செயற்கை அறிவு பற்றிய ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்தவர் பிரபல விஞ்ஞானியான மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky 1927-2016)

அவர் அறிமுகப்படுத்திய இரண்டு விதிகள் அனைவராலும் மேற்கோள் காட்டப்படுகின்றன.

 

முதல் விதி: வார்த்தைகள் உங்களது வேலைக்காரர்களாக இருக்க வேண்டும்; உங்கள் எஜமானர்களாக அல்ல! (Words should be your servants, not your masters)

இரண்டாவது விதி: எதையாவது செய்யவெண்டும் என்பதற்காகச் செய்யாதீர்கள். அதில் நிலைத்திருங்கள். (Don’t just do something. Stand there)

 

அவரது ஆராய்ச்சிக்கிணங்க அவரது வீட்டிலும் லாபரட்டரியிலும் நூற்றுக்கணக்கான வினோத பொருள்கள் இருக்கும். அவரது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் உலகெங்கிலுமிருந்து ஆராய்ச்சி உரைகள் வந்தவண்ணம் இருக்கும். டெலிபோனுக்கு அருகில் உள்ள ஒரு மெஷினிலிருந்து விநோதமான ஒலிகள் எழுந்த வண்ணம் இருக்கும். அந்த விநோதமான ஒலிகளை வைத்து தனது சர்க்யூட்டில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வார்! பின்னால் இந்த உத்தியைப் பயன்படுத்தி பல விளையாட்டு பொம்மைகளைச் செய்யும் கம்பெனி ஒன்றை அவர் தொடங்கினார்.

 

அவரது சோதனைச்சாலயோ இன்னும் விநோதமான ஒன்று. பிளாஸ்டிக்கினால் ஆன ரொபாட் சிலை ஒன்று அங்கு இருக்கும்.

 

துணியினால் ஆன செடி ஒன்று தத்ரூபமாக செடி போல இருக்கும். பெரிய கம்ப்யூட்டர் ஒன்று உண்டு. அது அனைத்து வேலைகளையும் செய்யும் – கதவுகளைத் திறக்கும். லிப்டுகளை இயக்கும். அதற்கு இயந்திரக் கைகள் உண்டு! ரொபாட்டுகளை இயக்க ரிமோட் கண்ட்ரோலும் அதற்கு உண்டு! அது செஸ் போட்டியில் வென்றதற்காக அளிக்கப்பட்ட ட்ராபி அதன் மேல் காணப்படும்! 1963இல் புதுப்பிக்கப்பட்ட அவரது லாபரட்டரி ஒன்பது மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான சோதனைக் கூடம்! அவருக்கு உதவியாக ஒன்பது பேராசிரியர்களும் நூறு மாணவர்களும் அங்கு பணியாற்றினர்.

 

இசை கம்போஸ் செய்வது மின்ஸ்கியின் பொழுதுபோக்கு. உயிரியல் மற்றும் கணிதத்தில் மேதையான அவர் செயற்கை அறிவுக்குத் தாவி ஏராளமான கண்டுபிடிப்புகளைத் தந்து ‘செயற்கை அறிவின் தந்தை என்ற செல்லப் பெயரையும் பெற்றார்!

***