எழுதினால் மனோவியாதி போகும்! (Post No.5363)

WRITTEN BY S NAGARAJAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 5-01 AM (British Summer Time)

 

Post No. 5363

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 24-8-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஐந்தாம்) கட்டுரை

எழுதினால் மனோவியாதி போகும்!

 

ச.நாகராஜன்

 

துயரமான சம்பவங்களுக்கு ஆட்பட்டு நிம்மதி இழந்தவர்களுக்கும், அடிக்கடி துயரங்களைச் சந்தித்து தூக்கமின்றி தவிப்பவர்களுக்கும் அறிவியல் தரும் ஒரு ஆறுதலான செய்தி – எழுதுங்கள், உங்கள் மனோ வியாதி போகும் என்பது தான்!

பிரபல உளவியல் அறிஞரான டாக்டர் ஜேம்ஸ் பென்னேபேகர் (Dr James Pennebaker – பிறப்பு 2-3-1950) ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழக பேராசிரியர். அவரும் அவரது மாணாக்கர்களும் உணர்ச்சிகரமான அனுபவங்களுக்கும் இயல்பான மொழிக்கும் உள்ள தொடர்பையும், இதனால் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர்.

 

30 ஆண்டுகளுக்கு முன் அவரது ஆய்வு ஒன்றின் மூலமாக இரகசியங்களை மனதிற்குள் போட்டுப் புதைத்து வைத்துக் கொள்வதன் மூலம் ஒருவருக்கு நோய் உருவாகும் என்பதை அவர் கண்டார். இதன் தொடர்ச்சியாக தங்களது ஆழ்ந்த இரகசியங்களை ஒருவர் எழுதுவதன் மூலமாக உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நலம் பெறுவார் என்பதையும் கண்டுபிடித்தார். இந்த எழுதுதல் பணிக்கு அவர் தந்த பெயர் எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் (Expressive Writing).

 

வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிரபல உளவியலாளர் இப்போது கண்டுபிடித்திருப்பது அன்றாடம் நாம் பேசும், எழுதும் மொழியானது நம்மை வெளிப்படுத்துகிறது என்பதைத் தான்!

 

இவரது புத்தகமான ‘ஓபனிங் அப் : தி ஹீலிங் பவர் ஆஃப் எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் டு ஹீல்’ (Opening up : The Healing Power of Expressing Emotion and Writing to Heal) பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. பத்து புத்தகங்களையும் 300 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள அவர் 1986இல் தன் ஆய்வைத் தொடங்கினார்.

 

ஆய்வுக்கென மாணவர்களை அழைத்து அவர்களிடம்  தங்களது வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்களை 15 நிமிடங்கள் அவர் எழுதச் சொன்னார். ஒரு துயரமான சம்பவமும் இல்லை என்றால் அவர்கள் கஷ்டமாக உணர்ந்த தருணத்தைப் பற்றி எழுதச் சொன்னார். இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியமாக வைத்திருக்கும் விஷயத்தை அவர்கள் எழுத வேண்டும். நான்கு நாட்கள் இந்த சோதனை தொடர்ந்தது. அவர்களில் இருபது பேருக்கு ஒருவர், எழுதும் போது ஓவென்று அழுதனர். ஆனால் அவர்கள் எழுதுவதை நிறுத்தவில்லை. பின்னர் அவர் ஆறு மாதங்கள் அந்த மாணவர்கள் எப்போதெல்லாம் சிகிச்சை நிலையங்களுக்குச் சென்றனர் என்பதைக் கண்காணிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அவருக்கு ஆச்சரியகரமான முடிவு தெரிந்தது. வெளியில் காரில் காத்திருந்த நண்பரிடம் வந்து ஒரு பெரிய விஷயத்தைத் தான் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். எந்தெந்த மாணவர்கள் தங்களது இரகசிய விஷயங்களை எழுதினார்களோ அவர்களெல்லாம் சிகிச்சை நிலையங்களுக்கு குறைந்த அளவே சென்றிருந்தனர்!

அன்று பிறந்தது சைக்கோ நியூரோ இம்யூனாலஜி! (Psychoneuroimmunology). எளிமையாக  எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் என்று இது இப்போது சொல்லப்படுகிறது. ஆஸ்த்மாவிலிருந்து ஆர்திரிடிஸ் வரை மார்பகப் புற்று நோயிலிருந்து மைக்ரேன் தலைவலி வரை இப்படி எழுதுவதால் குறைந்த அளவே டாக்டர்களைப் பார்க்க வேண்டிய அவசியம் அப்படி பாதிப்புள்ளானவர்களுக்கு ஏற்பட்டது என்பதை அவர் கண்டுபிடித்தார். காயங்கள் மிகவும் சீக்கிரமாக ஆறுவதைக் கண்டபோது அவரே ஆச்சரியப்பட்டார்.

 

ஆனால் ஜோயன் ஃப்ராடாரோலி என்ற கலிபோர்னியா ஆய்வாளர் இப்படி எழுதுவதால் கான்ஸர் போன்றவை முற்றிலும் குணமாகி விடுவதில்லை என்பதைக் கண்டார். என்றாலும் கூட சிறிய அளவு முன்னேற்றம் இருப்பதால் இலவசமாக செய்யக்கூடிய இந்த எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் பயனுள்ளது தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

 

 

மென்மேலும் இத்துறையில் ஆராய்ச்சி செய்த பென்னேபேகர் வார்த்தைகளை வைத்து ஒருவர் பொய் சொல்கிறாரா இல்லையா, ஒருவர் ஆணா பெண்ணா, பணக்காரரா, ஏழையா என்பன போன்றவற்றைச் சொல்லி விட முடியும் என்பதைக் கண்டார். இதற்கென ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமைத் தயார் செய்து ஒருவர் பேசுவதை எல்லாம் அதில் பதிவு செய்தார். அதன் மூலம் வார்த்தைகள் இருவருக்கிடையே ஒத்திருக்கும் போது அவர்கள் ஒருவர்பால் இன்னொருவர் ஈர்க்கப்படுகின்றனர் என்கிறார். ‘நான்’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்பது அவரது அறிவுரை.

 

 

இப்போது பென்னேபேகர் ப்ராஜக்ட் 2021 என்ற ஒரு புதிய ஆய்வுக்கு செயல் இயக்குநராக இருக்கிறார். இந்தத் திட்டம் 2016, ஜனவரி 19ஆம் தேதி துவங்கப்பட்டது. ‘ஏராளமான நவீன தொழில்நுட்பங்கள் பெருகி விட்ட இந்தக் காலத்தில் பழைய கால கல்விமுறை கற்பவர்களுக்குச் சரி வராது. மற்றவர்களுடன் அவர்கள் பழகும் விதம், ஆய்வுப் பேப்பர்களை எழுதும் விதம், ஆய்வு செய்யும் விதம் ஆகியவற்றில் ஒரு புதிய செயல்முறை வேண்டும்’ என்று கருதும் பென்னேபேகர் தனது பல்லாண்டு ஆய்வை வைத்து ஒரு புதிய செயல்முறையை மாணவர்களுக்கென அறிமுகப்படுத்தவிருக்கிறார். இது செயல்படும் போது புதிய தலைமுறை உருவாகும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

 

வார்த்தைகளின் மூலம் ஒருவரை நன்கு அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் போதே வார்த்தைகளை மாற்றிப் பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்தை நோயற்றதாக, வளமுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம் என்பது நல்ல செய்தி தானே! இதை அவரது பத்துப் புத்தகங்களும் விளக்குகின்றன!

விரைவில் முடியவிருக்கும் ப்ராஜெக்ட் 2021 பல புதிய தகவல்களைத் தரும் என்பது உறுதி!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ….

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான பால் டிராக் (Paul Dirac தோற்றம் 8-8-1902 மறைவு 20-̀10-1984) அன்றாட பிரச்சினைகளுக்கு விஞ்ஞானத் தீர்வுகளைத் தருவதில் அதிக விருப்பமுள்ளவர்.

 

ஒரு முறை கோப்பன்ஹேகனில் அவர் ஒரு புதிய கொள்கையை விவரித்தார். அதாவது ஒரு பெண்ணின் முகம் அழகாகத் தோன்ற அவளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை அவர் கூட்டத்தினரின் முன் வைத்தார். அவர் இதைப் பற்றி விளக்கிப் பேசுகையில், “ஒரு பெண்ணை வெகு தூரத்திலிருந்து பார்ப்பதாக வைத்துக் கொள்வோம்; பார்ப்பவருக்கு ஒன்றுமே தெரியாது அல்லவா? அதே பெண்ணை மிக மிக அருகில் வைத்துப் பார்த்தால் வட்டமான முகம் மனிதக் கண்ணின் சிறிய அளவினால் சிதைந்து தோன்றும். சின்னச் சின்ன சுருக்கங்கள் கூட பெரிதாகத் தோற்றமளிக்கும். ஆகவே ஒரு பெண்ணின் முகத்தை அழகாகப் பார்க்க ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தான் நிற்க வேண்டும்.”

 

கூட்டத்தினர் ஆரவாரித்தனர். கூட்டத்தில் இருந்த கமாவ் (Gamow)

என்பவர், “பால், எவ்வளவு அருகிலிருந்து ஒரு பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

தன் இரு கைகளையும் இரண்டு அடி தூரத்தில் வைத்துக் கொண்ட பால், “இவ்வளவு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்” என்றார்.

அனைவரும் சிரித்தனர்!

***