
WRITTEN by London swaminathan
Date: 18 JULY 2018
Time uploaded in London – 8-10 am (British Summer Time)
Post No. 5232
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பிரான்ஸிலும் நீலாம்பரிகள் உண்டு; சமயம் பார்த்து பழிவாங்கி விடுவாள். வாட்களை விட சொற்கள் வலிமையானவை — WORDS ARE SHARPER THAN SWORDS. இதோ பிரான்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்!
பாலின் போனபர்ட் (PAULINE BONAPARTE 1780-1825) என்பவள் இதாலிய பிரபுக்கள் குடும்பப் பெண்மணி; பிரெஞ்சு இளவரசியும் கூட. நெப்போலியனின் சகோதரி.
அவள் ஒரு முறை விருந்தில் கலந்து கொண்டாள். எப்படி?
ஒய்யாரி, சிங்காரி; அன்ன நடை, சின்ன இடை! கிளி மொழி! குயில்பாட்டு சகிதம்!

பாரிஸ் நகரில் விருந்து நடந்தது.
விருந்தில் எல்லோரையும் அசத்த வேண்டும் என்னும் அளவுக்கு ஆடை, அணிகலன்கள்!
தாமதமாகப் போனால்தானே அனைவரின் பார்வையும் அவள் மீது விழும் ஆகையால் அனைவரும் வந்த பின்னர் ஒய்யரமாக உள்ளே வந்தாள்; அவளைக் கண்டு அசந்து போன பாண்டு வாத்யக் கோஷ்டி அவளையே பார்த்துக் கொண்டு வாசிப்பதை நிறுத்திவிட்டனர். எல்லோரும் ஏன் என்று திரும்பிப் பார்த்தால், பேரழகி அங்கே நிற்கிறாள்.
அழகான மஸ்லின் துணியிலான கவுன்; தங்க நிற பார்டர். மார்பு வளையத்திலும் தங்க பார்டர். அதில் நடுவில் ரத்தினக் கல்; இவ்வளவு அலங்காரத்துக்கு அவள் சில மணி நேரமாவது கண்ணாடி முன் நின்றிருப்பாள்! ஆனால் அவளது முயற்சிகள் வீண் போகவில்லை. உண்மையிலேயே அசத்திவிட்டாள்.
பெண்கள் பொறாமைக்காரிகள் அல்லவா? எல்லோருக்கும் பற்றி எரிந்தது. அதில் ஒருவள் ஏற்கனவே இவள் காரணமாக பதவி பறிபோனவள். அவளும் பெரிய இடத்துப் பெண்மணி அவள் பெயர்Madame de Coutade sமேடம் தெ (ரு) கூத்தாடி! !
அவள் தன் தோழியுடன் இவளிடம் வந்து உற்று நோக்கினாள்; அடி முதல் முடி வரை நோட்டமிட்டாள்.
அடாடா! என்ன அழகு! என்ன அழகு!! என்று சொன்னாள்.
இவளது பார்வை பாலினுக்குப் பிடிக்கவில்லை; ஆயினும் அழகைப் புகழத்தானே செய்கிறாள் என்று வாளாவிருந்தாள்.

அழகுதான். ஆனால்…. அது மட்டும்……….. என்று இழுத்தாள் பொறாமைக்காரி.
எது மட்டும்!…. என்று வினவினாள் தோழி.
நன்றாகப் பார்! தெரியவில்லையா! எம்மாம் பெரிய காது! கழுதைக் காது!
எனக்கு மட்டும் இப்படிக் காது இருந்தால், அதை நான் வெட்டித் தூக்கி எறிவேன் என்றாள்.
‘தடால்’ என ஒரு பெரிய சப்தம்!
எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.
பேரழகி பாலின், அந்தச் சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் தடால் என்று மயங்கி விழுந்தாள்.
அவளுக்கு இரண்டு கணவர்கள்! ஆயினும் அண்ணன் நெப்போலியன் மீது அளவு கடந்த பாசம்; பிரிட்டிஷாரிடம் நெப்போலியன் தோற்றபோது, அவனைத் தொலைதூர தீவில் சிறையில் அடைத்து அவனுக்கு விஷ உணவு கொடுத்து பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றனர். ஏனெனில் அவன் மாவீரன்; தப்பித்தால் பிரிட்டிஷார் கதி- சகதி!
அந்த சூழ்நிலையிலும் அவனை வந்து பார்த்த ஒரே ஒரு உறவினர் பாலின் போனபர்ட் என்னும் இந்தப் பேரழகிதான். பாசத்தின் சின்னம் அவள்!
சுபம்