மரங்களை அலங்கரித்த மங்கையர்: கம்பன் தரும் அதிசயத்தகவல் (Post No.3248)

img_4055

Written by London Swaminathan

 

Date: 13 October 2016

 

Time uploaded in London: 20-36

 

Post No.3248

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

முல்லைக்கு தேர் ஈந்த பாரி வள்ளலை நாம் அறிவோம். ஒரு முல்லைக் கொடி காற்றில், கொழு கொம்பு இல்லாமல் தத்தளிக்கிறதே என்று வருந்தி தனது தேரையே ஒரு முல்லைக் கொடிககு அளித்தான் தமிழ் மன்னன் பாரி.

 

இதூபோல உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் கானகத்தில் வளர்ந்த, சகுந்தலை என்ற பெண், செடிகொடி களுக்குத் தண்ணீர் விட்டுவிட்டு அந்த நீரை பறவைகள் அருந்துவதைப் பார்த்துவிட்டுத்தான் சாப்பிடப்போவாள் என்றும் எல்லாப் ண்களுக்கும் உள்ள பூச்சூடும் ஆர்வம் அவளுக்கு இருந்தாலும் பூவைப் பறித்தால் அதன் அழகு போய்விடுமே என்று எண்ணி பூவைக்கூட செடியிலிருந்து பறிக்க மாட்டாள் என்றும் காளிதாசன் பாடுகிறான். அது மட்டுமல்ல பூங்கொடிகள் முதல் முதலில் பூத்த நாள ன்று சகுந்தலை ஒரு விழாக் கொண்டாடினாள் என்றும் காளிதாசன் பாடுகிறான்,(அபிக்ஞான சாகுந்தலம், நாடகம் அங்கம் 4)

 

நம்முடைய கிராமப்புறங்களில் பல மரங்களில், குழந்தை பிறக்காதவர்கள் தொட்டில் போன்ற பொம்மைகளைத் தொங்கவிடுவர். இன்னும் சிலர் தனது துணிமணிகளிலிருந்து நூல் அல்லது, கந்தைகளைக் கிழித்து தொங்கவிடுவர். இது போல மேலை நாடுகளிலும் அந்தக் காலத்தில் வழக்கம் இருந்தது. இப்போது பார்ப்பது அரிது. இது எல்லாம் பிரதி பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்கள். .ஆனால் சகுந்தலையும் பாரியும் பிரதிபலன் எதிர்பாராமல் தாவரங்களையும் தன்னுயிராகக் கருதினர். இது போல செடிகொடிகளை சகோதரியாகக் கருதிய பாடல் சங்க இலக்கியத்திலும் இருப்பதை முன்னரே காட்டிவிட்டேன்.

img_4033

கம்பன் தரும் ஒரு அரிய தகவல்– மரங்களை பெண்கள் அலங்கரித்த செயல் பற்றியது!

 

கம்ப ராமாயணம், பால காண்டத்தில் வரும் பாடல் இதோ:-

பூ எலாம் கொய்து கொள்ளப் பொலிவு இல துவள நோக்கி

யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி

கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழையப் பூட்டி

பாவையர் பனிமென் கொம்பை நோக்கினர் புரிந்து நிற்பார்

 

பொருள்:-

பூங்கொடிகளில் உள்ள மலர்களை எல்லாம் பெண்கள் பறித்துவிட்டனர். அடக் கடவுளே! நம் கணவன்மார்கள் வந்தபோது இந்தச் செடிகள் மொட்டையாக நின்றால் அழகாய் இராதே என்று எண்ணி தாம் அணிந்திருந்த முத்துமாலை, இரத்தின மாலை, தங்க வடங்கள், காதணிகள் எல்லா வற்றையும் கொடிகளுக்கும் செடிகளுக்கும் சூட்டி அவை அந்தக் கனத்தில் தாழத் துவங்கினவாம். பிறகு அந்தப் புதுப்பொலிவுபெற்ற செடிகொடிகளைக் கண்டு மகிழ்ந்தனராம்.

 

தாவரங்களின் மீது என்னே அன்பு. மேல நாடுகளில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் சட்டை, செருப்பு போட்டு மகிழும் மக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் செடிகொடிகளுக்கு ஆபரணங்களைப் போட்டு அழகு பார்த்தது நம் நாட்டில்தான். அதுவும் கம்பன் மட்டுமே தரும் தகவல் இது!

img_4063

வாழ்க செடி கொடிகள்: வளர்க மரங்கள்!!