பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

ja,mbu fruits

Research Paper written by London swaminathan

Research Article No.1656; Dated 17th February 2015.

வராகமிகிரர் என்னும் மாமேதை 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியா – பிருஹத் சம்ஹிதையில் – கூறிய அரிய பெரிய அபூர்வ விஷயங்களைக் கண்டோம். இன்று மேலும் சில விஷயங்களைத் தொட்டுக் காட்டுவேன்.

வறண்ட பூமிகளிலும் பாலைவனப் பிரதேசங்களிலும் வளரும் சில மரங்கள் முதலியவற்றைக் கொண்டு தண்ணீர் கண்டு பிடிக்கும் உத்தி / டெக்னிக் இது. வராஹமிகிரர் ஒரு விஞ்ஞானி. ஆகையால் மாய மந்திரம் – அண்டாகா கசும் அபூர்வ கா குசும் – என்று மம்போ ஜம்போ –வுக்குப் போகாமல் அறிவியல்பூர்வ முறையில் இதை அணுகியுள்ளார்.

சிலவகை மரங்கள் அதிக இலைகளுடன் காணப்படும். அவற்றின் செழுமை, மற்றும் பாம்புப் புற்றுகள், தவளை இவைகளைப் பார்த்து நிலத்துக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதா, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.

எப்படி எண் திசைக்கும் காவல் தெய்வங்கள் இருக்கிறதோ அதே போல எட்டு திசைகளில் பூமிக்கடியில் உள்ள தண்ணீருக்கு அந்தக் காலத்தில் பெயர்கள் இருந்தன என்பதையும் இவர்தம் நூல் செப்புகிறது.

Bassia latifolia_clip_image002

இலுப்பை வகைத் தாவரம்

உடம்பிற்குள் எப்படி ரத்த நாளங்கள் ஓடுகின்றனவோ அப்படி வானத்திலும் நிலத்துக்கு அடியிலும் நீரோட்டம் உண்டு என்றும் இவர் சொல்கிறார்.

எறும்பும், பாம்புப் புற்றுகளை உண்டாக்கும் கறையான் களும் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப் பதத்தின் மூலம் தண்ணீர் பெறும் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. அவைகள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் புற்று உண்டாக்கும். ஈரப்பசை இல்லாவிடில் புற்று உதிர்ந்து விடும். இதை எல்லாம் அறிந்து மனு, சாரஸ்வதர் என்ற இரு அறிஞர்கள் நூல்களை எழுதியதாகவும் அதையே தான் பின்பற்றுவதாகவும் சொல்லுவார். அந்த நூல்கள் இன்று கிடைக்காவிடினும் உரைகாரர்கள் பல விஷயங் களை நமக்கு எடுத்துரைக்கின்றனர்.

1500 ஆண்டுகளுக்கு முன் இதை வராகமிகிரரும், அவருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள் என்றால் அதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்திருந்தால்தான் இப்படி நூல் எழுத முடியும். மேலும் வேறு எந்த மொழியிலும் இது போல நூல்கள் இருந்ததாக யாம் அறியோம்.

2_vilvam_tree

வில்வ மரம் பற்றியும் வராகமிகிரர் சொல்கிறார்

சுமார் 125 ஸ்லோகங்களில் இவர் தரும் தகவல்களை தாவரவியல் துறையினரும், நீரியல் துறையினரும் ஆராய்ந்து கிராம மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்காலாம். மேலும் இதில் செலவு என்பது கிணறு வெட்ட மட்டுமே ஆகும். பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க பணமோ கருவிகளோ தேவை இல்லை.

125 பாடல்கள், அதற்கான உரைகள் முழுதையும் எழுதினால் அது புத்தக உருப் பெறும் என்பதால் ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காட்டுவேன்.

தண்ணீர் இல்லாத இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால் சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் எறும்புப் புற்று (பாம்புப் புற்று) இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.

இவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.

மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.

kadamba

கடம்ப மரம்

ஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்!

சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார்!! பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் பகருவார் வராகமிகிரர்.

அவர் நிறைய மரங்கள், புல், செடி, கொடி வகைகளைச் சொல்லுவதாலும், பழைய கால நீட்டல் அளவை சொற்களைப் பிரயோகிப்பதாலும் செயல் முறையில் பரிசோதித்து நிறை குறைகளை அறிய வேண்டும்.

இது பயனுள்ள ஒரு துறை என்பதால், ஆர்வத்துடன் ஆராய வேண்டிய அத்தியாயம் இது. வெளிநாடுகளில் இன்ன தாவரங்கள் இருந்தால் பூமிக்கடியில் இன்ன இன்ன உலோகங்கள் கிடைக்கும் என்னும் தாவர இயல் துறை நன்கு வளர்ந்திருக்கிறது. பழங்கால நூல்களில் உள்ள ரகசியங்களை நாம் கற்றோமானால் செலவு இல்லாமல் கனிமச் சுரங்கங்களைக் கண்டு பிடிக்கலாம்.

kantankattari

கண்டங்கத்தரி

நம்முடைய முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து அதன் ரகசியங்களை எழுதிவைத்துள்ளனர். சூரியன் சந்திரன் ஆகியவற்றின் போக்கைக் கண்டுபிடித்து கிரஹணம் முதலியவற்றைச் சொன்னவர்கள் எறும்பையும் தவளையையும் கண்டு பல சாத்திரங்களைச் செய்துள் ளனர்! இதை எண்ணி எண்ணி வியப்பதைவிட செயல் முறையில் பயன்படுத்த வேண்டும்.

எனது ஆங்கிலக்கட்டுரையில் கூடுதல் தாவரங்களின் பெயர்களைக் கொடுத்து இருக்கிறேன். முழு விவரம் வேண்டுவோர் பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 54-ஐக் காண்க.