
Written by S NAGARAJAN
Date: 3 January 2017
Time uploaded in London:- 5-53 AM
Post No.3509
Pictures are taken from different sources; thanks.
Contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 18
ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள் – 3
ச.நாகராஜன்
ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்
குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்
25) சிவாஜி சைநியத்தாரிடம் கூறியது – சி.சுப்பிரமணிய பாரதி (1906)
இந்தப் பாடல் கோத்திர மங்கையர் குலங்கெடுக்கின்றார் என்ற வரியுடன் முடிகிறது.
குறிப்பு என்று குறிப்பிட்டு கீழ்க்கண்ட வரிகள் தரப்படுகின்றன:
குறிப்பு: இச் செய்யுளில் ‘பாரதநாடு பார்க்கெலாந் தெய்வமாம், நீரதன் புதல்வரிந் நினைவகற்றாதிர்!’ என்னும் இரண்டு வரிகள் புதிய பதிப்புகளில் (சக்தி 1957) காணப் பெறவில்லை. ‘நவைப்டு துருக்கர்’ என்பது நகைபுரி பகைவர்’ என மாறி யிருக்கிறது.
26) அல்லா! அல்லா! அல்லா! – இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை – சுதேசமித்திரன் 24-6-20
இந்தக் கவிதை பற்றிய குறிப்பு ஒன்றும் இங்கு தரப்படுகிறது.
சுதேசமித்திரன் காரியலத்தார் வெளியிட்ட ‘கதாரத்னாகரம்’ என்னும் தமிழ் மாதப்பத்திரிகை 1920 ஜூலை மாத இதழில் 77ஆம் பக்கத்தில் பாரதியார் பாடிய அல்லா பாட்டு வெளியாகியிருக்கிறது. இதில் காணும் ஸ்வரவரிசையும் , மூன்றாவது பாட்டும் ஏற்கனவே வெளிவந்துள்ள ‘பாரதியார் கவிதை’யில் காணப் பெறவில்லை.
குமரி மலரில் இந்தக் குறிப்பு ஒரு புறமிருக்க இப்போதுள்ள பாரதியார் கவிதைகளில் விடுபட்ட மூன்றாம் சரணம் இணைக்கப்பட்டுள்ளது.
‘ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர் பிதா’ என்று இந்த சரணம் ஆரம்பிக்கிறது.
27) A Beautiful Arrangement நேர்த்தியான வியாபாரம் – சி.சுப்பிரமணிய பாரதி (1907)
இந்தியா வாரப் பத்திரிகை 27-4-1907
28) Excessive Optimism அளவு கடந்த நம்பிக்கை சி.சுப்பிரமணிய பாரதி (1906)
இந்தியா வாரப் பத்திரிகை 2-11-1906
29) பத்திரிகைத் தமிழ் சி.சுப்பிரமணிய பாரதி (1909)
இந்தியா 24-4-1909
30) பாரதி திருநாள்
திரு.வி.க (1929)
நவசக்தி 11-9-1929 தலையங்கக் குறிப்பு (ஆசிரியர் திரு.வி.க)
இந்தக் கட்டுரை மூலம் 1929லிருந்தே பாரதியார் தினம் கொண்டாடப்பட ஆரம்பித்திருபப்தை அறிய முடிகிறது.
இதில் திரு.வி.க குறிப்பிடும் வாசகங்கள் உருக்கமானவை.
சில வரிகளைக் கீழே பார்க்கலாம்:
தமிழ் நாட்டுக்குப் புத்துயர் அளித்துத் தமிழ் மொழிக்கு என்றும் மாறாத இளமையைத் தந்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் திருநாள் இன்று உறுகின்றது.
இதைத் தமிழர்கள் ஆங்காங்கு கொண்டாடுவார்கள் என்று நம்புகிறோம்.
வறுமையில் வாடி நின்ற பாரதியார், இணையிலாத் தமிழ்ச் செல்வத்தை நாட்டுக்கு அளித்துச் சென்றார்.
31) சக்கரவர்த்தினி சி.சுப்பிரமணிய பாரதி (1906)
நெ.100, வீரராகவ முதல்தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை
– சக்ரவர்த்தினி’ 1906 பிப்ரவரி
இந்தக் கட்டுரையில் பாரதியார் எழுதும் முதல் வரி சக்கரவர்த்தினியின் ஆரம்பம் பற்றித் தெரிவிக்கிறது.
“நமது பத்திரிகை பிரசுரமாகத் தொடங்கி ஏழு மாதங்கள் ஆய்விட்டன.”
32) மாதர் கல்விக் கணக்கு சி.சுப்பிரமணிய பாரதி (1906)
சக்ரவர்த்தினி 1906 பிப்ரவரி
33) மகா மகோபாத்தியாய சாமிநாதய்யர் சி.சுப்பிரமணிய பாரதி (1906)
சக்கரவர்த்தினி சென்னை 1906 பிப்ரவரி
34) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி
கனம் கே.வி.அரங்கசாமி ஐயங்கார் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதுவதன் சாராம்சம் : –
கவியும் தேசபக்தரும் ஆகிய ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி இள வயதில் இம்மண்ணுலகை நீத்து விண்ணுலக கெய்தியானது தமிழ் நாட்டிற்கே பெருத்ததொரு நஷ்டமாகும்.
அவர் தன் கவித்திறமையை இந்தியாவின் முன்னேற்றத்திலும், இந்திய மக்களின் முன்னேற்றத்திலும் உபயோகப்படுத்தி வந்தார்.
அறிவாளிகள் உயிருடன் இருக்கும் போது ஜனங்கள் கௌரவிக்காதது சாதாரணம். அப்படியிருந்தும் ஸ்ரீமான் பாரதியாரின் தேசபக்தியும் இனிமையான கவிகளும் சிலரை அவர் பால் ஈர்த்தன.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் காலஞ்சென்ற ஸ்ரீமான் வி.கிருஷ்ணசாமி ஐயர் ஆவர். அவர் பாரதியாரின் நூல்களை வாங்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் இனாமாக அளித்தார்.
ஸ்ரீமான் பாரதியார் அஞ்ஞாதவாசத்தில் அதிக கஷ்டப்பட்டார். பாரதியாருக்கு போதிய சௌகரியகளில்லாமையாலும், குடும்பக் கவலைகள் மேலிட்டமையாலும் அவர் உடல், மனம் இரண்டிலும் நலிவுற்றார்.
அவர் தம் சொந்த நாட்டிற்கு வந்த பின்னரும் கவனிக்கப்படடமையால் இறக்க நேரிட்டது தேசத்திற்காக உழைக்கும் தேசபக்தர்களின் நன்மைகளைக் காங்கிரஸாவது கவனிக்குமா?
பாரதியாரின் நூல்கள் எஞ்ஞான்றும் நிலைத்திருக்கும். அவர் தம் பந்துக்களில் யாரேனும் அவர் நூல்களைச் சேகரித்து வெளியிடுவாரா?
தமிழர்களுக்கு ஆத்மா இருக்கும் வரை அவர்கள் சுப்பிரமணிய பாரதியின் அரிய சேவைகளை மறக்க மாட்டார்கள்.
-நவசக்தி
4-11-1921 ஆசிரியர் திரு.வி.க
குமரி மலர் பத்திரிகையில் ஏ.கே. செட்டியார் வெளியிட்டு வந்த அரிய பாரதியாரின் கவிதை மற்றும் கட்டுரைகள் அவரின் தமிழ் பற்றையும் பாரதியார் பற்றையும் அறிவிப்பன. அத்துடன் பாரதியார் பற்றிப் பலரும் அந்தக் காலத்தில் பல்வேறு இதழ்களில் எழுதியிருந்த கட்டுரைகளையும் கூட அவர் தொகுத்து தன் குமரி மலரில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
இன்னும் பல கட்டுரைகளை அடுத்துக் காண்போம்.
இவை பாரதி இயலில் ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, பாரதியாரைப் பற்றி நன்கு அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
*****