
WRITTEN BY S NAGARAJAN
Date: 10 November 2018
Time uploaded in London – 8-52 AM (GMT)
Post No. 5646
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பெங் சுயி– லோ ஷு சதுரம்
ச.நாகராஜன்
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 2200 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்ட மன்னன் யூ, ஒரு நாள் மஞ்சள் நதிக்கரை ஓரம் உலாவப் போனான். அப்போது அங்கு ஒரு ஆமையைப் பார்த்தான். அதன் ஓட்டில் ஒரு சில புள்ளிகள் காணப்பட்டதையும் அவை சதுர வடிவத்தில் உள்ள கட்டங்களில் இருப்பது போலவும் அமைந்திருப்பதையும் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
அந்தப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஒரே மாதிரியாக வரவே அவன் ஆச்சரியப்பட்டு தன் அரண்மனைக்கு அதைக் கொண்டு வந்தான். அந்த ஆமைக்கு அன்றிலிருந்து ராஜ உபசாரம் தான்!
ஆமை ஓட்டின் முதுகில் இருந்த மாயச் சதுரம் போலவே தானும் அமைக்க ஆரம்பித்தான். அன்றிலிருந்து மாயச் சதுரத்தின் மகிமை உலகில் பரவ ஆரம்பித்தது.
அந்த மாயச் சதுரத்தின் ரகசியத்தை உணர்ந்தவர்கள் பெங் சுயி என்ற சீன வாஸ்து சாஸ்திரத்தைக் கண்டனர்.
ஆமையின் முதுகில் இருந்த மாயச் சதுரம் இது தான்:

தெற்கு
4 9 2
3 5 7
8 1 6
வடக்கு
இது வியக்க வைக்கும் பல விந்தைகளைக் கொண்டது.
இது லோ ஷு சதுரம் (LO SHU SQUARE) என்று அழைக்கப்படுகிறது.
இதை வைத்தே பெங் சுயி சூத்திரமான The Eight Mansions Formula அமைக்கப்பட்டுள்ளது.
குவா நம்பர் என்ற ஒரு எண் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க குவா சூத்திரம் உள்ளது. இதை ஒவ்வொருவரும் கண்டு பிடித்துக் கொண்டு அதற்குத் தக தன் உத்தியோகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
பெங் சுயியின் வெற்றிக்கு நிதர்சனமாக நாம் காணும் ஒரு நகரம் ஹாங் காங். மேலை நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் மல்டி நேஷனல் நிறுவனங்கள் இப்போது பெங் சுயி படி தங்கள் வணிகத்தை மேம்படுத்தி வருகின்றன.
வீடு கட்டுவதற்கு விரும்பும் ஒருவர் இந்த பெங் சுயி உத்திகளின் படி வீட்டை அமைத்துக் கொள்ளலாம்; ஏற்கனவே வீட்டைக் கட்டியுள்ளவரும் தங்கள் வீட்டின் பகுதிகளை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
பெங் சுயி சாஸ்திரத்தில் பிரபலமான லில்லியன் டூ இது பற்றித் தனது புத்தகமான ‘Feng Shui – The complete Guide to the art and practice of Feng Shui’-இல் விளக்கியுள்ளார்.

பெங் சுயி என்றால் காற்றும் நீரும் என்று பொருள். இதை நமது வாழ்க்கையின் வளத்திற்காகப் பயன்படுத்துவதற்கு இதன் அடிப்படை விதிகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அனைத்தையும் செய்வது ‘ச்சீ’ (Chi) எனப்படும் ஆற்றல் தான்! இந்த ஆற்றலை நமக்கேற்றவாறு முறைப்படுத்துவதற்கு பெங் சுயி உத்திகள் தேவை.
செல்வ வளம், உடல் நலம், மன நிம்மதி என அனைத்தையும் பெங் சுயி மூலம் அடைய முடியும்.
போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற லில்லியன் டூ பல வருட காலம் பெங் சுயி பற்றி ஆராய்ந்தார். தான் கற்றவற்றைப் பிறருக்குச் சொல்லித் தர விளைவுகள் அபாரமாக நல்ல விதத்தில் இருந்தன.
அந்த அனைத்து உத்திகளையும் படங்களுடன் விளக்கி 360 பக்கங்கள் கொண்ட இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்.
ஏழு பகுதிகள் கொண்ட இந்த நூலில் முதல் பாகம் பெங் சுயி உருவான வரலாறை விளக்குகிறது. இரண்டாம் பகுதி பெங் சுயி அடிப்படைகளை விளக்குகிறது.மூன்றாம் பகுதி நமது வீட்டில் இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது. நான்காம் பகுதி தனி நபர் மேம்பாட்டுக்கானது. ஐந்தாம் பகுதி நமது தோட்டத்தில் பெங் சுயியைமுதல் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி விளக்குகிறது. வணிக வெற்றிக்கு பெங் சுயி எப்படி உதவும் என்பதை ஆறாம் பகுதியும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பெங் சுயியின் உதவியை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை ஏழாம் பகுதியும் விளக்குகிறது.
யின் மற்றும் யாங் (Yin and Yang) ஆற்றலை எட்டு திசைகளிலும் சமச்சீராக்கி நமது குடும்பத்தையும், நம்மையும் மேம்படுத்தும் இந்த பெங் சுயி ஒரு அற்புதக் கலை.
இதை முறையாக விளக்கும் லில்லியன் டூ புத்தகம் பெங் சுயி ஆர்வலர்களுக்கு ஒரு வரபிரசாதம்.
****
குறிப்பு : இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய மாயச் சதுரமும் கணிதப் புதிர்களும் என்ற நூலில் முதல் அத்தியாயத்தில் உள்ள முதல் மூன்று பாராக்கள் இந்தக் கட்டுரையின் முற்பகுதியாக அமைகிறது.
Tags- யின், யாங், மாயச் சதுரம், லோ ஷு சதுரம்