
Date: MARCH 17, 2018
Time uploaded in London- 5-15 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4823
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ஞான ஆலயம் குழு வெளியீட்டுப் பத்திரிகையான ஸ்ரீ ஜோஸியம் மாத இதழில் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!
ச.நாகராஜன்

ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நமது சாஸ்திரங்கள் நுட்பமானவை. பல நூற்றாண்டுகளில் கிடைத்த அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் மனித குலத்திற்கு நலம் பயக்கும் நாட்களையும் நட்சத்திரங்களையும் மஹரிஷிகள் கண்டு அதை ஜோதிடம் உள்ளிட்ட சாஸ்திர நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர்.
தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.
பஞ்சக நட்சத்திரங்களும் பஞ்சக் யோகமும்!
அவிட்டம் , சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் பஞ்சக் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சகம் என்றால் ஐந்து. இந்த ஐந்து நட்சத்திரங்கள் உள்ள ராசிகள் கும்பமும் மீனமும் ஆகும். சந்திரன் இந்த ராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சக் கால் என அழைக்கப்படுகிறது. இதை பஞ்சக யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறும்.
இந்த நட்சத்திரங்களில் (அவிட்டம் கடைசி இரு பாதங்கள் மட்டும்) புல், மரம் வெட்டக் கூடாது.
தென் திசையில் பயணம் மேற்கொள்ளக் கூடாது
படுக்கை அமைக்கக் கூடாது
புதிய பிஸினஸ் துவங்கக் கூடாது
பிரேத தகனம் கூடாது. (அப்படியானால் ஐந்து நாட்கள் எப்படி ஒரு பிரேதத்தை தகனம் செய்யாமல் வைத்திருப்பது என்ற கேள்வி எழும். இப்படி எரித்தால் இன்னும் ஐந்து மரணம் வரும் என்பதாலேயே இது சொல்லப்படுகிறது. என்றாலும் பிரேதத்தை தகனம் செய்யும் போது பரிகாரமாக இன்னும் ஐந்து மலர், மாவு ஆகியவற்றினாலான உடல்களையும் சேர்ந்து எரிப்பது மரபு.
சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும். சுப காரியம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உரிய பரிகாரத்தைத் தெரிந்து கொண்டு செய்வது வழக்கம்.
பஞ்சக காலம் என்பது மாதம் ஒரு முறை அதாவது 27 நாள் சுழற்சியில் வரும். இதை முன்னதாகவே கணித்து நமது திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.
புத்தாடை அணிவதற்கான தினங்கள்!
புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் புத்தாடைகளை அணிய வேண்டும்.
- முகூர்த்த மார்த்தாண்டம்
புத்தாடை அணிவதற்கான நட்சத்திரங்கள்!
அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம்,சித்ரா,ஸ்வாதி,விசாகம், அனுஷம்,பூசம்,அஸ்வினி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் புத்தாடை அணிய வேண்டும்.
– முகூர்த்த மார்த்தாண்டம்
எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான விதிகள்!
1)பணம் (செல்வம்), உறவினர், நிலை, தொழில், படிப்பு ஆகிய ஐந்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் ஒன்றை விட ஒன்று அதிக சிறப்பு வாய்ந்தது என்று கொள்ள வேண்டும்.
– மனுஸ்மிருதி, பவிஷ்ய புராணம், யாக்ஞவல்ய ஸ்மிருதி, கூர்ம புராணம்
2) எல்லா தார்மீக காரியங்களிலும் முதலில் நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். – வைஸ்வாரம்ப ஸ்மார்த்த சூத்ரம்
3) வீட்டின் ஸ்தீரி இல்லாமல் ஒரு யக்ஞ காரியமும் செய்யக் கூடாது.
-ஆனந்த ராமாயணம்
4) பாடம் படித்தல் (ஓதுதல்), தேவி பூஜை, வஸ்திரம், நகை அணிதல்,ஆகியவற்றை வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.
-கருட புராணம்
சந்தியாகாலத்தில் செய்யக் கூடாதவை
சந்தியாகாலத்தில் 1) உணவு உண்ணக் கூடாது 2) உடல் உறவில் ஈடுபடக்கூடாது 3) உறங்கக் கூடாது 4) வேதம் ஓதக் கூடாது.
சத்வாரி கலு கர்மாணி சந்த்யாகாலே விவர்ஜியேத் |
ஆஹாரம் மைதுனம் நித்ராம் ஸ்வாத்யாம் ச சதுர்தகம் ||
- ஸ்மிருதி சந்தர்ப: – 76
இப்படி நுணுக்கமாக அனைத்து விஷயங்களையும் நமது சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
அனைவரும் அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற முடியாது என்பதாலேயே இதில் விற்பன்னராக உள்ள சாஸ்திர பண்டிதர்கள் அல்லது ஜோதிடரைக் கலந்தாலோசித்து அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும் என்ற எளிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தினர்.
குடும்ப புரோகிதர், குடும்ப ஜோதிடர் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்வது என்ற நடைமுறை சிக்கலான விஷயங்களை ஒரு குடும்பம் எதிர்கொள்ள நேரிடாதவாறு பாதுகாத்தது.
இன்றும் இதை நடைமுறையில் அனுஷ்டிப்போர் சிக்கலின்றி வாழ்வதைப் பார்க்கலாம்.
***