மௌன நீரூற்றால் புரட்சி-2 (Post No.4974)

Written by S NAGARAJAN

 

Date: 3 MAY 2018

 

Time uploaded in London –  17-33   (British Summer Time)

 

Post No. 4974

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாக்யா 4-5-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு ஒன்பதாம் கட்டுரை

மௌன நீரூற்றால் புரட்சி செய்த பெண்மணி!–2

.நாகராஜன்

 

 

 

ஜனாதிபதி கென்னடியையே பதில் சொல்லச் செய்யும் அளவுக்கு ராக்கேல் கார்ஸனின் சைலண்ட் ஸ்பிரிங் உருவாகக் காரணம் என்ன?

ராக்கேல் சிறுமியாக இருந்த போது அவரது படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு மைல் தூரத்தில் உள்ள குதிரைகளை வெட்டித் தள்ளும் ஒரு கசாப்புத் தொழிற்சாலையைப் பார்த்த வண்ணம் இருப்பார்.அதிலிருந்த புகைபோக்கியிலிருந்து எழும் புகை வானத்தை மறைக்கும்.

 

 

மாலை நேரத்தில் வெட்டப்பட்ட உபயோகமற்ற மாமிசக் குவியலிலிருந்து எழும் நாற்றமும், குதிரை மாமிசத்தினால செய்யப்பட்ட உரத்தின் நாற்றமும் கிராமம் வரை வந்து அனைவரையும் வாந்தி எடுக்கச் செய்யும். ஆகவே மாலை நேரங்களில் கிராம மக்கள் வீ டுகளின் கதவுகளைத் திறப்பதே இல்லை.

 

 

இந்த அவலத்தினால் ராக்கேலின் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டதில் வியப்பில்லை.

தனது சைலண்ட் ஸ்பிரிங் நூலை அவர் அமெரிக்க இல்லத்தரசிகளை நோக்கி இலக்கு வைத்தார்.லட்சக்கணக்கில் அவற்றை வாங்கிய அமெரிக்கப் பெண்மணிகள் அவர் பக்கம் தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தினர்.

அவர்கள் ஜனாதிபதி கென்னடியிடம் ஒரு கேள்வியை முன் வைத்தனர்.

 

 

1962, ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஜனாதிபதியிடம் அரசு DDT  பற்றி ஏதேனும் செய்யப் போகிறதா இல்லையா என்று கேட்டனர்.

அவர் உடனடியாக இப்படி பதிலளித்தார்:

“ஆம்.செய்யப் போகிறோம். குறிப்பாக மிஸ் கார்ஸனின் புத்தகத்தால் தான். ஆனால் இதை அவர்கள் (கமிட்டி) பரிசீலித்து வருகிறார்கள்”.

கென்னடியின் அறிவியல் குழு 1963 மே மாதம் 15ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.

 

“சைலண்ட் ஸ்பிரிங் வெளிவரும் வரை பொதுவாக உரங்களில் விஷத் தனமை இருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் சுற்றுப்புறச்சூழல் கேட்டை ரசாயன உரங்களைக் கட்டுப்படுத்துவன் மூலமே தடுத்து நிறுத்த முடியும்.”

வணிக நோக்கில் இது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

1972இல் அமெரிக்க அரசு விவசாயத்தில் DDT உபயோகத்தைத் தடை செய்தது.

 

 

அமெரிக்காவின் தேசீயச் சின்னமான கழுகு ஒரு லட்சத்திலிருந்து 500 ஜோடிகளாகக்க் குறைந்தது ஏன்?

 

 

இரசாயன உரத்தினால் தான். அபாயகரமான உரம் அதன் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க விடாமல் பொறிப்பதற்கு முன் முட்டைகளை உடைத்து விட்டதால் இந்த அபாயம் ஏற்பட்டது!

 

என்றாலும் கூட மலேரியாவைத் தடுப்பதற்கு DDT அனுமதிக்கப்பட்டது. இதையும் ராக்கேல் எதிர்த்தார்.

 

இதற்கிடையில் அவரது உடல் நிலை இதய நோய்களுள் ஒன்றான ஆஞ்ஜினா (ANGINA) வியாதியால் பாதிக்கப்பட்டது.

அவருக்கு மார்பகப் புற்று நோயும் வந்து சேர்ந்தது.

1964இல் கான்ஸர் உடல் முழுவதிலும் பரவி விடவே அவர் தலைமயிர் எல்லாம் உதிர்ந்து தலை வழுக்கையானது. எலும்புகள் பலஹீனமாக ஆகி விடவே அவர் வீல் சேரிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1964 மார்ச் மாதம் கான்ஸர் கல்லீரலைத் தாக்கி அவரை வெகுவாகப் பாதித்தது.

 

 

அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் ஒரு ரேடியோ ஆக்டிவ் பதியத்தை அவர் உடலில் பதியம் செய்தனர்.

 

 

இது போன்ற உடல் நிலையில் தான் அவர் அமெரிக்க கமிட்டி முன்னர் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

DDT போன்ற இரசாயன உரங்கள் முதலில் பூச்சிகளைக் கொல்லும். பின்னர் உணவுச் சங்கிலித் தொடரினுள் புகுந்து உணவையே நச்சாக்கும். அதனால் பறவைகள், மீன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்தொழியும். ஏனெனில் அவை இப்படிப்பட்ட நச்சு உணவுகளை உட்கொள்ள வேண்டிய சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு உருவாவதால் தான்! ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்றார் அவர்.

 

 

‘மக்கள் விஞ்ஞானி’ என்ற பெயருடன் புதுமையாக மலர்ந்த அவர் மக்களுக்காக அரிய உண்மைகளைப் புள்ளி விவரங்களுடன் தொகுத்து வழங்கினார்.

 

 

நடக்க முடியாமல் அவர் தன் இருக்கைக்கு மெதுவாகத் திரும்பியது அனைவரையும் உருக்கியது.

தலை வழுக்கை தெரியாமல் இருக்க ஒரு ‘விக்’கை அவர் அணிந்திருந்தார்.

 

 

தனது வியாதி பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே அவரது கான்ஸர் பற்றி இறுதி வரை மக்களுக்குத் தெரியவில்லை.

 

1964ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அவர் காலமானார்.

அவரது அஸ்தியின் ஒரு பகுதி மேரிலாந்தில் அவரது தாயாரின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்னொரு பகுதி ஷீப்ஸ்காட் பே என்ற இடத்தில் தெளிக்கப்பட்டது.

 

மனித குல சரித்திரத்தில் முக்கியமான காலகட்டங்களிலெல்லாம் ஒரு புத்தகம் வெளியாகி அது வரலாறையே மாற்றுவது வழக்கம் என்று அலாஸ்காவைச் சேர்ந்த செனேட்டர் எர்னஸ்ட் க்ரூயநிங் அவரைப் போற்றிப் பாராட்டினார்.

 

ராக்கேலின் வழியில் சென்ற அறிஞர் அல்கோர் ‘யாருக்கும் பிடிக்காத உண்மை’ என்ற தலைப்பில் பல உண்மைகளை முன் வைத்தார். அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

 

இன்று சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும் அம்சங்கள் முன்பை விட ஏராளமாகப் பெருகி விட்டன. ஆனால் ராக்கேல் கார்ஸன் போல அயராது பாடுபட்டு அந்த அம்சங்களை ஒழிக்க ஆள் தான் இல்லை.

 

‘தி நன் ஆஃப் நேச்சர்’ – இயற்கையின் கன்யாஸ்தீரி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கார்ஸனின் புகழ் என்றும் இலங்கும்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஜெர்மனியைச் சேர்ந்த பெண்மணியான மரியா மெரியன் (Maria Merian -1647-1717) பூச்சிகளை ஆராய்ந்த ஒரு அபூர்வமான விஞ்ஞானி.

அவரது கண்டுபிடிப்புகளுக்கு முன்னர் அனைவரும் பட்டாம்பூச்சி பூமியிலிருந்து தானாகவே சேற்றிலிருந்து பிறக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

 

ஒவ்வொரு பூச்சியையும் அது எப்படி பிறக்கிறது எப்படி வாழ்கிறது என்று அவர் ஆராய்ந்தார். அவர் தனது கண்டுபிடிப்புகளை எல்லாம் அந்தக் காலத்திய விஞ்ஞான மொழியான லத்தீனில் எழுதாமல் ஜெர்மானிய மொழியில் எழுதியதால் அவரைப் பற்றிப் பலரும் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

 

என்றாலும் கூட சுயமாக பெரிய அளவில் நிதி திரட்டி பூச்சிகளை ஆராயக் களம் புகுந்தார். அவைகளை வகைப் படுத்தினார். பட்டியலிட்டார். அத்துடன் அவர் ஒரு ஓவியராகவும் திகழ்ந்ததால் செடிகள், பூச்சிகள், மிருகங்கள் ஆகியவற்றின் படங்களையும் வரைந்தார்.

 

அவை இன்றளவும் உள்ளன. அவரது பட்டியல் இன்றளவும் விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்கிறது.

பூச்சிப் பெண்மணி என்று புகழ் பெற்ற அவரை உலகம் இப்போது பாராட்டுகிறது!

***