
Radha and Krishna appear in Yaga Fire
Compiled by London Swaminathan
Date: 23 August 2016
Time uploaded in London: 13-48
Post No.3085
Pictures are taken from various sources; thanks for the pictures.
பாரதீய கலாசாரம், இமயம் முதல் குமரி வரை ஒன்றுதான் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியமும், பிற்கால இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பட்டயங்களும் சான்று பகர்கின்றன.
தமிழ் மன்னர்கள் செய்த யாக யக்ஞங்கள் பற்றி இரண்டு கட்டுரைகளில் சொன்னேன். ஒன்று கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் பற்ற்றியது. மற்றொன்று சோழன் பெருநற்கிள்ளியின் ராஜசூய யக்ஞம் பற்றியது.
காஞ்சிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், தமிழ்நாடு தொல்பொருட் துறையின் முன்னாள் டைரக்டருமான டாக்டர் இரா. நாகசாமி எழுதிய ஒரு நூலில் தமிழ்நாட்டு வேந்தர்கள் செய்த யாக யக்ஞங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
எத்தனை மன்னர்கள் யாகம் அல்லது வேள்விகளில் நம்பிக்கை வைத்து , ஆர்வத்தோடு அவைகளைச் செய்தார்கள் என்பதைப் பட்டியலைப் படித்தால் புரியும்.
நூலின் பெயர்:- யாவரும் கேளிர்
ஆசிரியர் – இரா.நாகசாமி
வாசகர் வட்டம், சென்னை-17
1973

Narasimha appear in Swathi Homam
“அரசர்கள் இருவகை வேள்வி வேட்டனர். அறக்கள வேள்வி என்றும் மறக்கள வேள்வி என்றும் அவை அழைக்கப்பட்டன. போரில் வெற்றி கண்ட காலத்து துணித்த மாற்றானின் தலையை அடுப்பாக அமைத்து, குருதியை உலையகவும், துண்டிக்கப்பட்ட கரத்தை துடுப்பாகவும் கொண்டு போர்க்களத்தில் வேள்வி செய்வது ஒரு மரபு. இதையே மறக்கள வேள்வி என்பர். பாண்டியன் தலையங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் களவேள்வி வேட்டான் என்று மாங்குடிக்கிழார் கூறுவார். இதே நிகழ்ச்சியை மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும் கூறியுள்ளார்.
தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.
நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார் (புறம்.29)
பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் (புறம்.15)
இதுபோன்று சங்ககாலப் பேரரசர்கள் அனைவரும் வேள்வி வேட்டனர். கரிகால் பெருவலத்தான் பருந்து வடிவில் செய்யப்பட்ட வேள்விக் குண்டத்தில் யூபத்தை நாட்டி வேத வேள்வித் தொழிலாகிய யாகத்தை முடித்தான். அப்போது குற்றமற்ற அவாது குலமகளிர்கள் அவனருகே நின்றனர் (புறம்.224)
தூவியற் கொள்கை துகளறு மகலிரொடு
பருதியுருவிற் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில் முடித்த தூஉம் (புறம்.224)
இவனது குலத்தில் வந்த பெருநற்கிள்ளி, இராஜசூயம் என்னும் அரசர்க்குரிய சிறந்த வேள்வி வேட்டு, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனப் பெயர் பெற்றான்.
பல சேர மன்னர்கள் வேள்வி வேட்டனர்

Prince Charles in Rishikesh
பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)
பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74-1-20
இளஞ்சேரல் இரும்பொறை முறைப்படி சாந்தி வேட்டான். சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான. அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்
பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின் — என சிலம்பு (28–196-199) கூறுகிறது.
அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப்பெய்தினர் (புறம்.99) வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.

Sathya Sai baba in Adhi Rudra Yaga
சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.
பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்
தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.
மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.
பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.
குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம்
செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.
சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்”.
–சுபம்–
You must be logged in to post a comment.