நாத்திகனுக்கு யாத்திரை பலன் தராது (Post No.6584)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 22 June 2019


British Summer Time uploaded in London – 7-59 am

Post No. 6584

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

பாகற்காயின் தீர்த்த யாத்திரை: ஒரு சுவையான சம்பவம்!

ashta vinayak

அஷ்ட சித்தி விநாயக ஸ்தலங்கள், மஹாராஷ்டிரம்.

Article Written by London swaminathan

Date: 6 November 2015

Post No:2304

Time uploaded in London :– 6-12  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?

கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?

ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. (5-99-2 அப்பர் தேவாரம்)

புனித யாத்திரை போவது அவசியம்தான். ஆனால் அதை அர்த்தமில்லாத சடங்காகவோ, சுற்றுலாவாகவோ நடத்தக் கூடாது. காசி, கயிலாயம், பத்ரிநாத், கேதார்நாத், திருப்பதி, சபரிமலை, கன்யாகுமரி என்று யாத்திரை போவோரை நினைத்து அப்பர் பாடிய தேவாரத்தை மேலே கண்டோம். துகாராம் சுவாமிகளின் கதை ஒன்றைக் காண்போம்.

நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான, முக்தாபாய், ஏகநாத், நாம்தேவ், துகாராம், சமர்த்த ராமதாஸ் என்போர் மகாராஷ்டிர பூமியை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த பெரியோர்களாவர்.

இவர்களில் ஒருவரான துகாராம் செய்வித்த “பாகற்காய் யாத்திரை” கதையைக் கேளுங்கள். ஒரு முறை கிராம மக்கள் எல்லோரும் தீர்த்த யாத்திரை செய்ய முடிவு செய்தனர். துக்காராம் சுவாமிகளிடம் சென்று அவரும் வரவேண்டுமென்று வேண்டினர். அவர் தான் வரமுடியாதென்றும் ஆனால் தன் கொடுக்கும் பாகற்காய்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் நீராடும்போது அவைகளையும் குளிப்பாட்டி, கோவில்களுக்குச் செல்கையில் பாகற்காய்களையும் தரிசினம் செய்விக்கும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.

கிராம மக்கள் ஆகையால் ஏன், எதற்காக என்று கேட்காமல் அப்படியே பாகற்காய்களை அவரிடம் பெற்று  தாங்கள் சென்ற எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர்; புனித நீராடச் செய்தனர். கடவுளரை தரிசினம் செய்யும் போதெல்லாம் அதையும் சந்நிதியில் வைத்தனர்.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் யாத்திரை முடிந்தது. எல்லோரும் பரம திருப்தியுடன் ஊருக்குத் திரும்பி துகாராம் சுவாமிகளின் காலில் விழுந்து நம்ஸ்கரித்துவிட்டு பாகற்காய்களையும் பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் சொன்னார்:

bitter gourd

நீங்கள் எல்லோரும் நான் சொன்னபடி செய்து பாகற்காய்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் விருந்து தர விரும்புகிறேன். வருகின்ற வெள்ளிக் கிழமை எல்லோரும் என்னுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள் என்றார்.

அனைவரும் அறுசுவை விருந்துக்கு ஆசைப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமையன்று சந்தித்தனர். வடை, பாயசம், அப்பளம், பொறியலுடன் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. அப்பொழுது துகாராம் சுவாமிகள், யாத்திரைக்குப் போன பாகற்காயையும் பொறியலாகச் செய்து அனைவர்க்கும் இது பிரசாதம் என்று பரிமாறினார். அனைவரும் அதை வாயில் வைத்த அடுத்த கனமே “மகா கசப்பு” என்று முகம் சுழித்தனர்.

துகாராம் சுவாமிகள், வியப்புடன், கசக்கிறதா? என்ன அதிசயம்? எத்தனை புனிதத் தலங்களுக்கு எடுத்துச் சென்றீர்கள்! எத்தனை புனித நீர் நிலைகளில்  நீராட்டினீர்கள்! இன்னும் அதன் பிறவிக்குணமான கசப்பு மாறவில்லையா? என்று வியந்தார். எல்லோருக்கும் சுவாமிகளின் உட்கருத்து விளங்கியது. பின்னர் சொன்னார்: உள்ளன்போடும் தூய்மையோடும் இறைவனை நினைத்துக் கொண்டு செய்வதே தீர்த்த யாத்திரை. அது உல்லாசப் பயணம் இல்லை. மனதில் மாற்றமில்லாமல் செய்யும் யாத்திரை பாகற்காய் யாத்திரை போன கதை போலத்தான் என்றார்.

—சுவாமி ராமதாஸ் சொன்ன கதை

12 jyotirlinga

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உவமை

பசுவினிடமுள்ள பாலானது, வாஸ்தவத்தில் அதன் சரீர முழுவதிலும் ரத்த ரூபமாய் பரவியுள்ளது என்றாலும் அப்பசுவின் காதுகளையோ கொம்புகளையோ பிசைந்தால் பால் வராது. அதற்கு அதன் முலைக் காம்புகளைப் பிடித்துத்தான் கறக்க வேண்டும் அதுபோல ஈசுவரன் இவ்வுலகில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறான். ஆயினும் எல்லா இடத்திலும் அவனை உன்னால் காண முடியாது. பூர்வ பக்தர்களுடைய குண விசேஷம் நிரம்பிய புண்யஸ்தலங்களாகிய கோவில்களில்தான் அவன் சுலபமாய்த் தென்படுகிறான்.

வயிறு நிறைய புல்லைத் தின்ற ஒரு பசு ஓரிடத்தில் சாந்தமாகப் படுத்துக்கொண்டு அசைபோடுவதைப் போல, தீர்த்த யாத்திரைக்கு நீ போய் வந்தால், அந்தந்த திவ்ய ஸ்தலத்தில் உன் மனத்தில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனியிடத்தில் உட்கார்ந்து அவற்றிடையே ஆழ்ந்து போக வேண்டும். அவ்வாறின்றி அங்கிருந்து வந்ததும், அவ்வெண்ணங்கள் உன் மனத்தைவிட்டு அகன்று போகும்படி, நீ உலக விவகாரங்களில் தலையிட்டுக் கொள்ளக்கூடாது

பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத்திலேயே இருக்கிறது.

கங்கையில் குளிப்பதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமென்றால், கங்கை நதியில் வசிக்கும் மீன்களெல்லாம் மோட்சத்துக்குப் போய்விடுமே!

–ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி.