
Written by London swaminathan
Post No.1801; Dated 15th April 2015
Uploaded at London Time:19-08
மஹாபாரதக் கதை
ஒரு நாள் ஒரு வறியவன் வந்து பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரிடம் ஒரு உதவி கேட்டான். அப்பொழுது அவர் அரசாங்க அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்ததால் நாளைக்கு வாருங்களேன் என்றார். யுதிஷ்டிரரின் மறு பெயர் தர்மர். அவர் சொன்ன சொல் தவறாதவர். ஆகையால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய தம்பி பீமசேனனுனுக்கு ஒரே ஆச்சர்யம். ஓடிப்போய் அரண்மனை வாயிலில் கட்டியிருந்த ஆராய்ச்சி மணியை அடிக்க ஆரம்பித்தான்.
பாரதம் முழுதும் – இமயம் முதல் குமரி வரை– ஒரே கலாசாரம் என்பதால் தமிழர்களின் அரண்மனை வாயிலில் (மனு நீதிச்சோழன் கதை) இருந்தது போலவே ஹஸ்தினாபுரத்திலும் இந்திரப் பிரஸ்தத்திலும் இப்படி மணிகள் இருந்தன.
பெரிய அவசரம், அநீதி அல்லது பெரிய வெற்றிச் செய்தி இருந்தால் மட்டுமே இப்படி மணி அடிக்கப்படும். ஆகையால் மணி ஓசை கேட்டவுடன் ஒரே பரபரப்பு. இதன் காரணம் அறியாத யுதிஷ்டிரரும் பதட்டம் அடைந்தார். எனது ஆட்சியில் என்ன நேர்ந்து விட்டது அறிந்து வாருங்கள் என்று மந்திரியை அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து உங்கள் தம்பியின் வேலை இது என்று சொன்னார்கள்.
உடனே தர்மர் (யுதிஷ்டிரர்) புடை சூழ எல்லோரும் சென்று பீமனிடம் காரணம் கேட்டனர். எனது அண்ணன் பொய்யே பேசாதவர். ஒருவர் உதவி கேட்டவுடன் நாளைக்கு வா என்றார். அவர் இன்னும் 24 மணி நேரம் உயிரோடு இருப்பதை அறிந்திருப்பது உலக அதிசயம் அல்லவா? இதை யார் இவ்வளவு உறுதிபடச் சொல்ல முடியும்? என்றார்.
உடனே தர்மருக்கு விஷயம் புரிந்தது. அவர் யாரை மறு நாள் வரச் சொன்னாரோ அவரைக் கூப்பிட்டழைத்து உடனே உதவி செய்தார். அதனால் தான் பெரியார்கள் “ஒன்றே செய்க, அதுவும் நன்றே செய்க, அதுவும் இன்றே செய்க” என்று நமக்குச் சொல்லுகிறார்கள்..
வியாசரும் யக்ஷப் பிரச்னம் ( பேயின் கேள்விகள்) என்ற பகுதியில் உலக மஹா அதிசயம் என்ன என்று கேட்கும் பேயின் (யக்ஷனின்) கேள்விக்கு தர்மர் வாயிலாக விடை பகர்வார்:
தினமும் எவ்வளவோ பேர் இறப்பதைப் பார்த்தும் மனிதர்கள், நாளைக்கு, தான் சாஸ்வதமாக இருக்கப்போவதாக நினைத்து எல்லா செயல்களையும் செய்கிறார்களே இதுதான் அதிசயம் என்கிறார். திருவள்ளுவரும் அதை அப்படியே சொல்லி வைத்தார்:
நெருநல் உளனொருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு — குறள் 336
நிலயாமை என்னும் பொருள் பற்றிப் பேசாத இந்திய ஞானி எவரும் இல்லை. இதற்கு நேர்மாறாக இக்கருத்தை மேலை உலகில் காண்பது அரிது. இது பாரதீய சிந்தனையின் ஒரு முகப் பார்வைக்கு மேலும் ஒரு சான்று.
வாழ்க ஏக பாரதம்!


You must be logged in to post a comment.