மஹரிஷியும் மகாத்மாவும்!

ramana2

Research article written by S NAGARAJAN

Post No.2208

Date: 2nd  October 2015

Time uploaded in London: 7-52 am

 

 

வாழ்விக்க வந்த மஹான்

அக்டோபர் இரண்டாம் நாள். காந்தி ஜெயந்தி. அண்ணலை நினைவு கூர வேண்டிய நன்னாள்!

 

மஹரிஷியும் மகாத்மாவும்!

.நாகராஜன்

 

 

மஹரிஷியும் மகாத்மாவும்

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய அதிசயங்கள் இரண்டு. மஹரிஷியும் மகாத்மாவும்!

சமகாலத்தில் வாழ்ந்த இந்த இருவரைப் பெற பாரதம் என்ன தவம் செய்ததோ!

ஒருவர் தேசத்திற்கு விடுதலையை வாங்கித் தர முயற்சி செய்து, வெற்றி பெற்றார்.

இன்னொருவரோ அனைத்து ஆன்மாக்களுக்கும் பிறவியிலிருந்து விடுதலை பெறும் பெரு நெறியைக் காட்டினார்.

 

இருவரும் வாழ்க்கையும் சொல்வதும் ஒரே செய்தியைத் தான்!

MY LIFE IS MY MESSAGE (என் வாழ்க்கையே நான் தரும் செய்தி) என்பது தான்!

மஹாத்மா மஹரிஷியைப் பற்றி எப்போதுமே உயர்வாகப் பேசுவார். மஹரிஷியும் மஹாத்மாவைப் பற்றி உயர்வாகப் பேசுவார்.

இருவரையும் இணைத்து பெரும் நூலையே எழுதி விடலாம்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி இரு சம்பவங்களை நினைவு கூர்ந்து நமது வாழ்க்கையைப் புனிதமாக்குவோம்.

 ramana

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்

 

1938ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஜம்னாலால் பஜாஜுடன் பாபு ராஜேந்திர பிரசாத் (இந்தியாவின் எதிர்கால முதல் ஜனாதிபதி; 1938இல் காங்கிரஸில் தலைவர்; காந்திஜியின் தொண்டர்) ரமணாஸ்ரமத்திற்கு வந்தார்.

ஜம்னாலால் பஜாஜ் ஏராளமான கேள்விகளைக் கேட்டு மஹரிஷியிடம் பதில் பெற்றார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் சமயம். ரமண மஹரிஷியிடம் பிரியா விடை பெறும் நேரம்.

 

 

ராஜேந்திர பிரசாத் கேட்டார்:”-மஹாத்மா காந்திஜியின் அனுமதியுடன் நான் இங்கு வந்திருக்கிறேன். அவரிடம் சீக்கிரம் திரும்பிச் செல்ல வேண்டும். அவருக்கு பகவான் ஏதாவது செய்தி தர முடியுமா?”

பகவான்:- “அத்யாத்ம சக்தி அவருள்ளிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. அது போதும். அதை விட வேறென்ன வேண்டும்?”

தன்னை வழி நடத்தும் சக்தியையே காந்திஜியிடம் கண்டார் மஹரிஷி! பகவானைப் பணிந்து ராஜேந்திர பிரசாத்தும் ஜம்னாலால் பஜாஜும் விடை பெற்றனர்.

 

யாரேனும் சக்தி குறைந்திருப்பது போலக் காணப்பட்டால் அவரை ரமணாஸ்ரமம் போ என்று அனுப்பி விடுவார் மகாத்மா!

மஹாத்மாவின் ஒவ்வொரு செயலும் மஹரிஷிக்குத் தெரியும்!

 

 rajendra

கடவுள் காட்டும் வழிப்படி நடப்பவர் காந்திஜி!

1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி. 11ஆம் தேதி ஹரிஜன் இதழில் காந்திஜி எழுதியிருந்த கட்டுரையைச் சுட்டிக் காட்டினார் மஹரிஷி.

காந்திஜி அதில் எழுதி இருந்தார்:- “How mysterious are the ways of God! This journey to Rajkot is a wonder even to me. Why am I going, whither I am going? What for? I have thought nothing about these things. And if God guides me, what should I think, why should I think? Even thought may be an obstacle in the way of His guidance.

 

The fact is, it takes no effort to stop thinking. The thoughts do not come. Indeed there is no vacuum – but I mean to say that there is no thought about the mission.”

 

இதைப் படித்த மஹரிஷி இது எவ்வளவு உண்மை என்று கூறி ஒவ்வொரு வரியையும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

பின்னர் இந்த எண்ணமற்ற நிலையைத் தாயுமானவர் பாடி இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

 

சும்மாவிருக்கச் சுகம் சுகமென்று சுருதி எல்லாம்                               

அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டு அறிவின்றியே                                 

பெம்மான் மௌனி மொழியையும் தப்பி என் பேதைமையால்                        

வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதி வசமே!”

 

வரிசையாக இப்படி மூன்று பாடல்களை பகவான் சுட்டிக் காட்டி காந்திஜி கூறிய நிலை மெய் தான் என்பதை விளக்கி அருளினார்.

மறுநாள் பக்தர் ஒருவர், காந்திஜி எண்ணங்களே அந்நியமாக இருக்கிறது என்ற நிலையையா சுட்டிக் காட்டி உள்ளார் என்று கேட்டார்.

மஹரிஷி: “ஆம்! நான் என்ற எண்ணத்திற்குப் பின்னரே அனைத்து எண்ணங்களும் எழும்.”

 

 gandhi3 gandhi  gandhi2

தொடர்ந்து பக்தர் காந்திஜி கடவுளின் வழிகாட்டலுக்கு நம் எண்ணமே ஒரு தடை என்று சொல்கிறாரே என்று விளக்கம் கேட்டார்.

அதற்கு மஹரிஷி,” சாதனை என்பது தடைகளை நீக்கவே! ஆனால் ஒரு நிலையில் அந்த சாதனைக்குப் பிறகும் ஒருவன் தனது இயலாமையை உணர்கிறான். அப்போது தான் கடவுளின் சக்தி உணரப்படுகிறதுஎன்று அருளினார்.

 

 

ஒரு உயரிய நிலையை இன்னொரு உயரிய நிலையை அடைந்த அனுபவஸ்தரே அறிய முடியும்; விளக்க முடியும், இல்லையா!

குழுமி இருந்த பக்தர்கள் அனைவரும் இருவரின் நிலையையும்மகாத்மா, மஹரிஷி இருவரின் நிலையையும் உணர்ந்து பிரமித்தனர்!

இப்படி ஏராளமான உரையாடல்கள் காந்திஜி பற்றி அவ்வப்பொழுது மஹரிஷி ஆஸ்ரமத்தில் நிகழ்த்துவதுண்டு!

ஒரே சக்தி, இரு வேறு இடங்களில் இரு வேறு விதமாக வேலை செய்தது. ஒன்றி இயக்கமாககாந்திஜி வடிவில்.

இன்னொன்று மௌனமாகமஹரிஷி வடிவில்!

 

 stamp_einstein1

ஐன்ஸ்டீனின் புகழாரம் இருவருக்கும் பொருந்துகிறது!

 

அற்புதமான மஹாத்மாவைப் பற்றி அவரது 70ஆவது பிறந்த நாளன்று பெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், “Generations to come, it may well be, will scarce believe that sucha man as this one ever in flesh and blood walked upon this earth” (வரும் தலைமுறையினர், இப்படிப்பட்ட ஒருவர் ரத்தமும் சதையும் பொருந்தி இந்த பூமியில் நடந்தார் என்பதை அரிதாகவே நம்புவர்) என்று கூறி பிரமித்தார்.

 

ஐன்ஸ்டீனின் இதே மொழியை மஹரிஷிக்கும் பொருத்திப் பார்த்தால் அப்படியே பொருந்துகிறது.

வருகின்ற தலைமுறையினர் மகாத்மாவையும் மஹரிஷியையும் பற்றி எண்ணி எண்ணி பிரமிப்பர்.

அவர்கள் நடந்த இந்த புனித பூமியில் நடக்கும் பேறு பெற்றதை எண்ணி மகிழ்ந்து அவர்களை கை கூப்பித் தொழுவோம்!

************* 

On the occasion of Mahatma Gandhi’s 70th birthday. “Generations to come, it may well be, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth.”