
Written by S NAGARAJAN
Date:21 April 2017
Time uploaded in London:- 6-29 am
Post No.3836
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ரமண சாரல்
பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்!
by ச.நாகராஜன்
எல்லையற்ற கருணையுடன் உலக மக்களை உய்விக்க வந்த பெரும் அவதாரம் பகவான் ரமண மஹரிஷியின் அவதாரம்.
அந்த அவதாரத்தின் பெருமையை ஏராளமான சம்பவங்கள் விளக்குகின்றன. ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமான ஒரு உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
குடிபாடி வெங்கடாசலம் என்ற அணுக்க பக்தர் வரைந்துள்ள குறிப்புகளில் இரு சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.
வெங்கடாசலம் அவர்களை சலம் (1894-1979) என்றே அழைப்பர். தெலுங்கு மொழியில் சிறந்த எழுத்தாளர் அவர்.
1932இல் முதன் முதலில் அவர் பகவானை தரிசிக்க வந்த் போது அவர் ஒரு தீவிர சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். அவர் பார்த்த வேலை – இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ். 1950இல் அருணாசலத்தையே தன் வாழ்விடமாகக் கொண்டு இறுதி வரை அங்கேயே இருந்தார். அவர் ரமண பக்தர்கள் 19 பேர்களின் நினைவலைகளைத் தொகுத்து தெலுங்கு மொழியில் ‘பகவான் ஸ்ம்ரிதுலு’ என்ற அழகிய நூலை வெளியிட்டார். அதில் அவரது புத்திரியின் அனுபவங்களும் கூட உள்ளன.
எச்சம்மாவின் பூஜை
பகவானின் அணுக்க பக்தையான எச்சம்மா ஒரு முறை அவரிடம் வந்து மிகுந்த பெருமிதத்துடன் தான் ஒரு லட்சம் இலைகளை வைத்து பூஜை செய்ததாகத் தெரிவித்தார். உடனே பகவான், “ இலைகளைச் செடியிலிருந்து கிள்ளுவதற்குப் பதிலாக உன் தோலை ஒரு லட்சம் தடவைக் கிள்ளி அந்த மாதிரி பூஜை செய்யக் கூடாதா நீ?” என்று கேட்டார். சம்பிரதாய முறையிலான பூஜைக்கு அவர் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றாலும் தனது பக்தர்கள் இப்படிச் செயல்படும் போது உடனே அவர் அதை ஆதரிக்காமல் இப்படிக் கூறுவார்.
நமஸ்காரமும் பகவானின் சிரிப்பும்
ஒரு முறை சலம் அவர்களின் நண்பர் ஒருவர் ஆசிரமத்திற்கு வந்தார். அவருக்கு சாமியார்கள் மீது நம்பிக்கையே கிடையாது. ஆகவே முதலிலேயே பகவானை நமஸ்கரிப்பதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு வந்திருந்தார். அனவைரும் நமஸ்காரம் செய்த போதும அவர் செய்யவில்லை. ஆசிரமத்தைச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அது கோடைக்காலமாதலால் மாலை நேரத்தில் பகவான் அமரும் நாற்காலி ஹாலின் வெளியில் போடப்பட்டது. பக்தர்கள் சுற்றி அமர பகவான் அந்த நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அந்தப் பக்கம் வந்த நண்பர் தன்னை மீறிய சக்தி ஒன்றினால் பகவான் முன்னே வந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். உடனே பகவான் உரக்கச் சிரித்தார். அங்கிருந்த யாவருக்கும் அவர் ஏன் அப்படி திடீரென்று சிரித்தார் என்பது விளங்கவில்லை. ஆனால் சலத்திற்கு மட்டும் அதன் காரணம் என்ன என்று புரிந்தது.
இப்படி பகவான் பலரையும் தன் அருள் எல்லைக்குள் வரச் செய்து கருணை மழை பொழிந்த சம்பவங்கள் பல உண்டு!
பகவானின் ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் இறைத்தனமை நிரம்பி இருந்ததை அவருடன் நெருங்கி இருந்த ஆன்மீக சாதகர்கள் பலரும் அறிவர்.
***