(Picture from face book: Ramapriya ramanuja dasi)
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2
by ச.நாகராஜன்
Post No 1635; Dated 9th February 2015
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்!
தமிழர் தம் நீண்ட வரலாற்றை எடுத்துக் கொண்டு பார்த்தால், ராமர் தமிழ் குடும்பங்களின் பின்னணியாகத் திகழ்வது தெரியவரும். அவர் கால் படாத இடம் தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு பல தல புராணங்கள் அவரது பெருமையைச் சுட்டிக் காட்டுகின்றன. இராமேஸ்வரத்தில் சேது அமைத்து இராவணனை வதம் செய்த அவரை தமிழ்க் குடும்பங்கள் வழிபட்டு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்றே அறநெறி கொண்டவன் அவன்.
துஷ்டர்களுக்கு ஒரே பாணம் – ஒரு வில்!
சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு – ஒரு சொல்!
ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி – ஒரு இல்!
இது தான் அவனது அறநெறி.
Vishnu with Sridevi and Bhudevi
ராமர் போல துஷ்டர்களிடமிருந்து என்னைக் காத்து, அபயம் என உன்னையே கரம் பிடிக்கும் என்னைப் போற்றி நேசித்து, வாழ்நாள் முழுவதும் என் ஒருத்தியுசடனேயே வாழ வேண்டும் என்ற முப்பெரும் நெறிகளைச் சுட்டிக் காட்டி அதையே நான் விழைகிறேன் என்பதைப் பாடல் மூலம் சொல்ல வேறு எந்த ஒரு சந்தர்ப்பம் தான் கிடைக்கும், ஒரு பெண்ணுக்கு!
ஆக, பெண் பார்க்கும் படலத்தில் ராமரைப் பற்றிப் பாடுவது சரியானது தான் என கவிஞரும், பட இயக்குநரும், வசனகர்த்தாவும் நினைத்திருந்தால் அது சரிதானே!
இந்த வகையில் ராமர் எத்தனை ராமனடி பெண்களின் மனதைக் கவர்ந்த ஒரு பாடல் என்றால் அதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?
Sita in Asoka Vana in Sri Lanka
ராஜாராமனும் சீதாராமனும்
இதை இயற்றிய சம்பவம் பற்றி கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகையில், “உத்தரகாண்டத்தில் ராஜாவான ராமனின் ஆணைப்படி சீதையைக் காட்டில் விட்டு விட்டு அயோத்திக்குத் திரும்பி வந்த லட்சுமணன் மாளிகையில் ராமர் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து வியந்து, நீங்கள் தானே சீதையைக் காட்டில் விட ஆணையிட்டீர்கள், பின் அழுவது ஏன் என்று கேட்க, ராமர், “அப்படி ஆணையிட்டது ராஜாராமன், இப்போது அழுவது சீதாராமன்” என்று ராமர் பதில் சொல்கிறார். இதைப் படித்து உத்வேகம் பெற்று ராமர் எத்தனை ராமரடி பாடலை இயற்றினேன்” என்று சொன்னாராம்!
வசந்தத்தில் ஓர் நாள்
ஆக இந்த வகையில் இன்னும் ஒரு பெண் பார்க்கும் படலத்தில் வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். படம் மூன்று தெய்வங்கள். வெளியான ஆண்டு 1971. படத்தை இயக்கியவர் தாதா மிராஸி. பாடலைப் பாடியவர் பி.சுசீலா. இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இயற்றியதோ கவிஞர் கண்ணதாசன் தான்! ராகம்:தர்பாரி கானடா
பாடலைப் பார்ப்போம்:
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ வைதேகி காத்திருந்தாளோ
மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ தேவி
திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ தேவி காவலில் நின்றிருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண மாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டுத் தந்தாரோ அங்கே பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில் பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ
அங்கே சீரோடு வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ தேவி தேவி வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தாளோ
Sugreeva – Vali fighting
காட்சி அமைப்பு அந்தக் காலப் படப்பிடிப்பின் படி மிக பிரமாதமாக அமைந்திருந்தது. நாகேஷ் பிரம்மா. சிவாஜிகணேசன் விஷ்ணு. முத்துராமன் சிவன். அவர்கள் மலையைத் தொட்டுத் தர சிவகுமார் மாலையை சந்திரகலாவிற்கு அணிவிப்பதாக காட்சி அமைகிறது.பாடலைப் படத்தில் பாடுபவர் சந்திரகலா. அந்தக் காலத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்தவர். பாடல் காட்சியின் பின்னணியில் தேவ லோகக் காட்சிகள் இடம் பெறுகின்றன. குணசித்திர நடிகரான எஸ்.வி.சுப்பையா, வி.எஸ்.ராகவன் என காட்சி களை கட்டுகிறது.
ராமரைப் பாடலில் கொண்டுள்ள திரைப்படங்களில் மூன்று தெய்வங்களும் ஒன்று.
-தொடரும்.




You must be logged in to post a comment.