Ramayana Paintings
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 18 — ராம ராஜ்யம் -4
By ச.நாகராஜன்
நூறாவது ஸர்க்கத்தில் 70வது ஸ்லோகமாக அமைவது இது.
யாத்ராதண்டவிதானம் ச த்வியோனி சந்திவிக்ரஹௌ I
கச்சிதேதான்மஹாப்ராக்ஞ யதாவதனுமன்யஸே II
யாத்ராதண்டவிதானம் ச – ஐந்து வித யானங்களையும்
த்வியோனி – இரண்டு வகையாயுள்ள
சந்திவிக்ரஹௌ – ஸந்தி விக்ரஹங்களென்ற
ஏதான் – மேற்கண்டவைகளை
தத்வத்த – உள்ளபடி
புத்த்வா – ஆராய்ந்து
யதாவது – அதற்கேற்றவாறு
அனுமன்யஸே கச்சித் – நடந்து வருகின்றனையா
மஹாப்ராக்ஞ ராகவ! – மஹாபுத்திமானான பரத!
(அர்த்தம் புரிவதற்காகச் சில சொற்கள சென்ற 68,69 ஸ்லோகங்களிலிருந்து மேலே சேர்க்கப்பட்டிருக்கிறது)
இங்கு ராமர் ஐந்து வித யானம் என்று குறிப்பிட்டது :- 1) பகைவரைப் பகைத்துச் செல்லுதல் 2) நேசித்துச் செல்லுதல் 3) பலருடன் கூடிச் செல்லுதல் 4) வஞ்சனை செய்து செல்லுதல் 5) அலக்ஷியம் செய்து செல்லுதல்
ராமர் பரதனைக் கேட்கும் கேள்விகள் ஒரு மன்னன் எப்படி அரசாள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஸர்க்கம் முழுவதையும் படித்தால் ராமராஜ்யத்தின் இலக்கணத்தை ஒருவாறு நாம் அறிய முடியும்.
“சக்கரவர்த்தி குமாரா! பிரதி தினமும் காலை வேளையில் ராஜ வீதியில் அங்கங்கிருந்து எல்லோரும் பார்க்கத் தகுந்தபடி மனிதர்களுக்குக் காட்சி தருகின்றனையா”
“பரதா! உனது வரவு அதிகமாயிருக்கிறதா? செலவு அதற்குக் குறைந்திருக்கிறதா? உன் பொக்கிஷமானது தகுதியற்றவரிடம் சேராமல் இருக்கிறதா?”
இப்படி எல்லாம் ஏராளமான கேள்விகளைக் கேட்கும் போது பரதனை அவர் பாராட்டவும் செய்கிறார்; தன் அன்பைச் சொல்லில் குழைத்து அழைக்கிறார்!
ஜயதாம் வர – வெற்றி பெற்றவர்களுள் சிறந்தவனே
காலக்ஞ – உசிதமான காலத்தை அறிந்தவனே
தாத – குழந்தாய்!
சௌம்ய – சௌம்யனே
கைகேயி புத்ர – கைகேயியின் புத்திரனே
ராஜபுத்ர – சக்கரவர்த்தி திருக்குமாரா
நரர்ஷப – புருஷோத்தமனே
மஹாப்ராக்ஞ – மகா புத்திமானே
இவை அனைத்தும் பரதனுக்குப் பொருத்தமாக இருப்பதைக் கண்டு வியக்கிறோம்.
வன: கிம் ஆகத: – காட்டிற்கு ஏன் வந்தாய்?
பத – ஏன் இந்தக் கஷ்டம்?
என்று அன்புடன் கேட்கும் ராமனின் அன்புக்கு ஈடு இணை உண்டோ?
சகோதர பாசத்தைத் தெள்ளென எடுத்துக் காட்டும் ராம – பரதன் சந்திப்பு அற்புதமாக வால்மீகி முனிவரால் விவரிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாக மனித குலத்தின் ரத்த சம்பந்த உணர்வையும், அன்பையும் இப்படித் தகுந்த சொற்களால் வடித்தெடுக்கும் இன்னொரு காவியம் இல்லை என்றே சொல்லலாம்!
******
ராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 17 — ராம ராஜ்யம் -3
By ச.நாகராஜன்
நூறாவது ஸர்க்கத்தில் 68-வது ஸ்லோகத்தைத் தொடர்ந்து 69 வது ஸ்லோகமாக அமைவது இது:
இந்த்ரியாணாம் ஜயம் புத்த்வா ஷாட்குண்யம் தைவமானுஷம் I
க்ருத்யம் விம்சதிவர்கம் ச ததா ப்ரக்ருதி மண்டலம் II
இந்த்ரியாணாம் ஜயம் – ஐம்புலன்களையும் அடக்குதலையும்
ஷாட்குண்யம் – ஆறு குணத்தையும்
தைவ மானுஷம் – மனிதரால் தோன்றும் ஐந்து வியசனங்களையும்
க்ருத்யம் – பகைவரிடம் விசுவாசமற்றவர்களைத் தன் வசமாக்கிக் கொள்ளலையும்
விம்சதி வர்கம் ச – இருபது வர்க்கங்களையும்
ததா ப்ரக்ருதி மண்டலம் – அவ்வாறே ப்ரக்ருதி மண்டலங்களையும்
(ஆராய்ந்து அதற்கேற்றபடி நடந்து வருகிறாயா?)
இங்கு ராமர் ஆறு குணம் என்று குறிப்பிட்டது:- 1) சந்தி 2) விக்ரகம் 3) போருக்குச் செல்லல் 4) போருக்குச் செல்லாதிருத்தல் 5) பகைவரை ஒருவருக்கு ஒருவர் பேதமுறச் செய்தல் 6) பகைவரை ஆஸ்ரயித்தல்
தைவ மானுஷம் என்பது தீ, நீர், பிணி க்ஷாமம், இறப்பு எனும் ஐவகை தெய்வ துன்பங்களையும், அதிகாரிகள், கள்வர், அன்னியர், அரசனுக்கு இஷ்டர், அரசனது கோப குணம் ஆகிய ஐந்து துன்பங்களையும் குறிக்கும்.
இருபது வர்கங்கள் என்று குறிப்பிட்டது:- 1) ராஜ்யம் 2) பெண் 3) ஸ்தானம் 4) தேசம் 5) இனத்தார் 6) பொருள் இவைகளைப் பறித்துக் கொள்ளல் 7) மதம் 8) மானம் 9) விஷய பீடை 10) மதியின்மை 11) சக்தியின்மை 12) குணமின்மை 13) தெய்வத்தை இகழ்தல் 14) நேசரை இகழ்தல் 15) பொருளை இகழ்தல் 16) சுற்றத்தாரைக் கொலை செய்தல் 17) கருணையின்மை 18) தேசத்தை இகழ்தல் 19) பொருள் ஒன்றிலேயே விருப்புறுதல் 20) தான் கோரிய விஷயத்திலேயே ஆசையுற்று இருத்தல்
ப்ரக்ருதி மண்டலம் என்று குறிப்பிட்டது :- 1). மந்திரி 2) தேசம் 3) கோட்டை 4)கோசம் 5) தண்டம் என்னும் ஐந்து பிரகிருதிகளையும் நடுவில் அரசன், முன்னரசனுக்குச் சத்ரு, தன் மித்திரன், சத்துருவின் மித்திரன், தன் மித்திரனுக்கு மித்திரன், சத்துருவின் மித்திரனுக்கு மித்திரன் ஆகிய ஐவர்கள், பின்னர் பார்ஷ்ணிக்ராஹன், ஆக்ரந்தன், பார்ஷ்ணிக்ராஹாஸாரன், ஆக்ரந்தாஸாரன் என்னும் நால்வர்கள், பக்கத்திலிருப்பவன், மத்தியமன், புறத்திலிருப்பவன், உதாசீனன் ஆகிய இவர்கள் அனைவருமாவர்.
ராஜ்ய கட்டமைப்பையும் விரிவான நடைமுறைகளையும் இந்த ஸ்லோகம் விளக்குகிறது அல்லவா.
இத்துடன் அடுத்து வரும் இன்னொரு ஸ்லோகத்தையும் சேர்த்துப் பார்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.
Swami_48@yahoo.com
**********



You must be logged in to post a comment.