ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா? (Post No.3910)

Written by London Swaminathan

 

Date: 15 May 2017

 

Time uploaded in London: 12-33

 

Post No. 3910

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்

–சுந்தர காண்டம், சூளாமணிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:-

பிறருக்குத் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்ட அரக்கருடைய இலங்கையை மட்டுமா? கணக்கற்ற உலகங்கள் அனைத்தையும் எனது ஒரு சொல்லினால் சுட்டெரிப்பேன் அவ்வாறு செய்வது ராமனின் வில்லாற்றலுக்கு இழிவு உண்டாக்கும் என்று உணர்ந்து அத்தொழிலைச் செய்யாது விட்டேன் – என்று அனுமனிடம் சீதை சொல்கிறாள்.

 

என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள், உடனே ராம பிரானிடம் சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் சொன்னபோது சீதை கூறியது இது.

நீ ஒரு ஆண்மகன்; உன் தோள் மீது ஏறுவது தர்மம் ஆகாது என்றும் வாதிடுகிறாள்.

 

அதாவது ராமனின் வில் ஆற்றலுக்காவது அவர் தனது சொந்த சக்தியைச் செலவழிக்க வேண்டும். ஆனால் பத்தினிப் பெண்ணாகிய சீதைக்கோ அது கூடத் தேவை இல்லை. உடல் வலிமையின்றி மன வலிமையால் சாபம் போட முடியும்.

 

பெண்களுக்குள்ள இந்த அபார சக்தியை வள்ளுவனும் போற்றுவான்:

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு தெய்வத்தைக் கும்பிடாமல் கணவனையே தெய்வமாகக் கும்பிட்டுத் துயில் எழும் பெண்/ மனைவி பெய் என்று சொன்னால், அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும் என்பான் வள்ளுவன்.

 

கண்ணகியும் தன் சொல்லால் மதுரையைச் சுட்டெரித்தாள்.

சாவித்ரி எமனுடன் வாதாடி, கணவன் உயிரை மீட்டுக் கொண்டு வந்தாள். சந்திரமதி, தமயந்தி போன்றோரும் துயரங்களைக் கடந்து வெற்றி பெற்றனர்.

திரவுபதியும் தான் எடுத்த சபதத்தை பாண்டவர்களின் மூலம் நிறைவேற்றிக் காட்டினாள்.

 

 ஆகையால் சொல்லால் சுடுவேன் என்று சூ ளுரைத்தது பொருத்தமே.

 

அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர், இந்தியப் பிரதமர் கைகளில் அணுகுண்டுகளை ஏவிவிடும் பட்டன்” (switch or Button) இருக்கிறது. ஆயினும் அச்சக்தியைப் பிரயோகிக்காமலேயே பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அது போல பத்தினிப் பெண்களிடமும் அபார சக்தி இருக்கிறது அதை எவ்வளவு கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு கவனத்துடன் பயன்படுத்துவார்கள். அதை வீணாகப் பயன்படுத்தமாட்டார்கள்; பெண்கள் கருணை உள்ளம் படைத்தவர்கள்.

 

ராமனின் வில்லாற்றலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாது, ராவணன் என்ற அரக்கனை அகற்றும் பணியை அவதார புருஷனாகிய ராமனே செய்யட்டும் என்று சீதை பொறுமையாக இருக்கிறாள்.

 

வால்மீகி ராமாயணத்தில் இது போன்று உலகங்கள் அனைத்தையும் சுட்டெரிக்கும் வல்லமை பற்றிப் பேச்சு இல்லை.

 

வால்மீகி ராமாயணத்தையே கம்பன் பின்பற்றினாலும், பல இடங்களில் அவன் புதுக் கதைகளையும், புது வசனங்களையும் சொல்லுவது அவன் வேறு சில  ராமாயணங்களின் கதைகளையும் எடுத்தாண்டதைக் காட்டுகிறது. அவனே மூன்று ராமாயணங்கள் பற்றிப் பேசுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட மூன்றில் இன்று நமக்குக் கிடைப்பது வால்மீகி ராமாயனம் ஒன்றே.

 

கம்பனைப் பயில்வோம்; கவின்சுவை பெறுவோம்.

-Subham–