பூதம் கொடுத்த தொல்லை!

rama thai

Rama in Thailand.

ஆனந்தாஸ்ரமம் சுவாமி ராம்தாஸ் சொன்ன கதைகளை

தமிழில் தருபவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 960 தேதி:- 7 April 2014

ஒரு மனிதன் துஷ்ட தேவதைகளை வழிபட்டான். எதற்காக? தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் முடித்துக் கொடுக்க ஒரு பூதம் தேவை என்பதற்காக. அவன் செய்த தவம் பலித்தது. பூதமும் அவன் முன்னால் தோன்றியது.

பூதம் சொன்னது, “தலைவனே கட்டளை இடு. கண் மூடித் திறப்பதற்குள் காரியத்தை முடித்து விடுவேன். ஆனால்………… ஒரே ஒரு நிபந்தனை………………. என்னால் சும்மா மட்டும் இருக்க முடியாது. நீ வேலை எதுவும் கொடுக்காவிடில் உன்னையே விழுங்கி விடுவேன்”. இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு ஒரே சந்தோஷம். வேலை கொடுப்பதா கஷ்டம்? நிறைய வேலைகளைக் கொடுப்போம் என்று எண்ணினான்.

எனக்கு ஒரு மாளிகையைக் கட்டிக் கொடு என்றான். அடுத்த பத்து நிமிடத்தில் பிரம்மாண்டமான அரண்மனை அங்கே வந்துவிட்டது! இதைச் சுற்றி ஒரு சாலை போடு என்றான். அதையும் பூதம் நொடிப் பொழுதில் நிறை வேற்றி விட்டது! இதற்கு என்ன வேலை கொடுப்பது என்று அந்த மனிதன் திகைக்கத் துவங்கினான். உடனே பெரிய நகரத்தை உருவாக்கு என்றான். அதையும் பத்து நிமிடத்தில் முடித்துவிட்டு அடுத்த வேலை என்ன என்று கேட்டது.

அந்த மனிதனுக்கு பயம் வந்துவிட்டது. வேலை கொடுக்காவிடில் பூதம் விழுங்கி விடுமே என்று மரண பயம் தொற்றிக் கொண்டது. அருகில் ஒரு சந்யாசி இருந்தார். ஓடிப் போய் அவர் காலில் விழுந்தான். ஏதேனும் ஒரு வழி சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினான்.

அவர் ஒரு நல்ல யோசனை கொடுத்தார். அதோ இருக்கிறது பார்! ஒரு பெரிய மூங்கில் கம்பு. அதை பூமியில் நடச் சொல் மேலும் கீழும் ஏறி இறங்கி வரச் சொல் நான் ‘நிறுத்து’ என்று சொல்லும் வரை இப்படிச் செய்து கொண்டே இரு என்று பூதத்துக்கு உத்தரவிடு என்றார் அந்த சந்யாசி.

அந்த மனிதனும் பூதத்துக்கு அவ்வாறே உத்தரவிட்டான். அது கம்பத்தை நட்டு மேலும் கீழும் ஏறி இறங்கி வந்து அலுத்துச் சலித்து விட்டது. நாளடைவில் ஒரு நாள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டது!

உங்களுக்கு ராம நாமம் தான் அந்த மூங்கில் கம்பம். உங்களை வாட்டி வதைக்கும் அஹம்காரம்தான்—- ( யான் எனது என்னும் செருக்கு=வள்ளுவன் குறள்) ——அந்த பூதம். அதை ராம நாமம் என்னும் கம்பத்தின் மீது ஏறி இறங்க உத்தரவிடுங்கள். உங்கள் அஹம்காரத்தை அழிக்க வந்த மகத்தான சக்தி ராம நாமம் தான். அதை உச்சரித்தால் யான் எனது என்னும் செருக்கு தானாக ஓடிப் போய்விடும்.
மேலேயுள்ள கதை சுவாமி ராம்தாஸ் ஆங்கிலத்தில் சொன்னது.

வள்ளுவனும் இதை அழகாகக் கூறுகிறான். வள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். வடமொழியில் உள்ள பகவத் கீதையிலும், மனு தர்ம சாஸ்திரத்திலும், மஹா பாரதத்திலும், தர்ம சாஸ்திரங்களிலும் உள்ள விஷயங்களை பல குறள்களில் சொல் பிசகாமல், வரி பிறழாமல் மொழி பெயர்க்கிறான்!

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346, அதிகாரம் துறவு) — என்பது வள்ளுவன் வாய்மொழி.
பொருள்: அஹம்காரம், மமகாரம் இரண்டையும் அழிப்பவர்களுக்கு – அகந்தையைக் கைவிட்டவர்களுக்கு — தேவலோகத்துக்கும் மேலான மோக்ஷம் கிடைக்கும். அதாவது வீடு பேறு அடைய சுருக்குவழிப் பாதை!
நாமும் ராமன் புகழ் பாடுவோம்.

ஏப்ரல் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இராம நவமி. இராம பிரானின் பிறந்த நாள் விழா!!

Read my earlier posts on Rama:
Lord Sri Rama- The World’s Best P R Man
Rama Vs Kama
Aladdin’s Magic in Valmiki Ramayana
Who can read all 300 Ramayanas?
Maruti Miracle: 660 kilometres per hour!
How did Rama fly his Pushpaka Vimana?
Indus Valley Cities in Ramayana
How many miles did Rama Walk?
Where is Ramasetu (Rama’s Bridge)?
Rama – Embodiment of Dharma
Rama’s Trick! Three Stories!!
“Rama” and Sanskrit G”ramma”r