
கடலுக்கு அடியில் ராவணன் உயிர்!! தாய்லாந்து ராமாயணம்-2 (Post No.5022)
WRITTEN by London Swaminathan
Date: 18 May 2018
Time uploaded in London – 7-49 AM (British Summer Time)
Post No. 5022
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
தாய்லாந்து ராமாயணமான ராம்கீயனில் பல சுவையான, விநோதமான செய்திகள் இருப்பதை நேற்று முதல் பகுதியில் சொன்னேன். இதோ பல விசித்திர, அதிசய ராமாயணக் கதைகள்.
வால்மீகி ராமாயணம் காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி ராமாயணம் அப்படிப் பிரிக்கப்படவில்லை.
உலகின் முதல் அரசன் அநோமதன்
முன்னொரு காலத்தில் சக்ரவாள மலையின் மீது ஹிரன்யாக்ஷன்
வசித்தான். அவன் தேவர்களைத் துன்புறுத்தவே அவர்கள் ஈஸ்வரனை அணுகி முறையிட்டனர். ஈஸ்வரன் சொற்படி நாராயணன் அந்த ஹிரன்யாக்ஷனை அழித்தார். அவர் திரும்பி வருகையில் பாற்கடலில் ஒரு அழகிய தாமரை மலரையும் அதில் ஒரு குழந்தையையும் கண்டார். உடனே நாராயணன் அக் குழந்தையை எடுத்து ‘க்ரைலாஸம்’ சென்று, ஈஸ்வரனிடம் அக்குழந்தையை அளித்தார். அவர் அக்குழந்தைக்கு அநோமடன் என்று பெயரிட்டு அவரை உலகின் முதல் அரசனாக்கி ஜம்பூத்வீபத்தில் உள்ள அயோத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இறைவன் சொற்படி இந்திரன், அந்த அயோத்தி மாநகரை உருவாக்கினான்.

விபீஷணன் மகள் பெஞ்சகாய்- அனுமன் காதல் திருமணம்
ராவணன், பெஞ்சகாய் என்ற ராக்ஷஸியை அழைத்து நீ சீதை போல உரு எடுத்து, இறந்த சடலம் போல ஆற்றில் மிதந்து போ. ராமன் அதைப்
பார்த்து மயங்கி கதறட்டும் என்று கட்டளை இட்டான். அவளும் அப்படியே செல்லுகையில், ராமன் காலைக் குளியலுக்கு நதிக்கு வருகையில் அதைக் கண்டு துக்கம் அடை ந்தான்.
அனுமனும் லக்ஷ்மணனும் அடுத்து வந்தனர். லக்ஷ்மணனும் அந்த சீதையின் சடலத்தைக் கண்டு கதறினான். ஆனால் அனுமனோ இது போலியா அசலா என்று ஐயமுற்று அந்த சடலத்தை சிதைத் தீயில் வைத்தான். பெஞ்சகாய் கதறியவாறு வானத்தில் தாவிக் குதித்தாள். சுக்ரீவன் அவளை சாட்டையால் அடித்து நீ யார்? என்று வினவ, அவளும் உண்மையைச் சொன்னாள். அவள் விபீஷணனின் தங்கை என்பதை அறிந்து ராமன் அவளை மன்னித்து அருளினன்.
அனுமனை அழைத்து இவளை பத்திரமாக இலங்கை வரை கொண்டு போய் விடு என்றனன். அனுமனுக்கும் பெஞ்சகாய்க்கும் இடையே காதல் மலர்ந்தது; அதுவும் கனிந்தது. ‘அசுரபாத’ என்ற பிள்ளையும் பிறந்தது. இது அனுமனின் முதல் திருமணம்; முதல் பிள்ளை.
இந்தியாவில் ராமாயணத்தில் ஹனுமார் நித்திய பிரம்மாச்சாரி. தாய்லாந்து மக்கள், ராமாயணத்தில் அவர்களுடைய கலாச்சாரத்தைக் கலப்பதற்ககாக ஹனுமாரை காதல் மன்னன் ஆக்கிவிட்டனர். அவருக்கு மேலும் பல மனைவியர் உண்டு! கதை வளர்கிறது.
ராவணன் உயிர் எங்கே?

ராமன் எத்தனையோ அம்புகளை எய்தும் ராவணன் மாயவில்லை. அப்பொழுது விபீஷணனன் ஒரு உண்மையைச் சொன்னான்.
மனிதனின் உடல் வேறு; உயிர் வேறு; உயிர் வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்; அதை ஒருவர் அழிக்கும் வரை ஒருவனுடைய உயிர் போகாது என்ற விஷயம் ராமகீயனின் பல இடங்களில் சொல்லப்படுகிறது.
ராவணனுடைய குரு கோ புத்ரன்; அவனிடம்தான் ராவணனின் உயிர் இருக்கும் பேழை (கலசம்) பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விபீஷணன் சொன்னான். உடனே ராமன், அனுமனை அழைத்து “சென்று வா மகனே; வென்று வா” என்று அனுப்பினன்.
ஹனுமார், அங்கதனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கோபுத்ரன் ஆஸ்ரமத்துக்குச் சென்றான். “இதோ பார், எங்களுக்கு ராமனைப் பிடிக்கவில்லை. நாங்கள் ராவணன் தரப்புக்கு கட்சி மாற வந்துள்ளோம். எங்களை அவனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்து என்றான். வெளுத்தை எல்லாம் பால் எனும் நம்பும் கோபுத்ரன் அவ்விருவரையும் இலங்கை வாயில் வரை அழைத்துச் சென்றான்.
ஒருவேளை ராவணன் உயிரையும் இதயத்தையும் வைத்திருக்கும் பேழையை ராமன் திருடக்கூடும் என்று ஹனுமன் எச்சரித்து இருந்ததால் கோபுத்ரன் அதையும் கையில் எடுத்துக்கொண்டே சென்றான். இலங்கை வாயிலை அடைந்தவுடன் திடீரென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. வாயிலைக் கடந்தால் கிண்ணத்தில்/ பேழையில் உள்ள உயிர் ராவணனிடமே பறந்து போய்விடும் என்று!
ஹனுமார் சொன்னார்
“குறை ஒன்றுமில்லை கோபுத்ரா. அங்கதனிடம் அதைக் கொடுத்து வாயிலுக்கு வெளியே நிற்கச் சொல்லுவோம்” என்றான். அவருடைய சதித் திட்டம் பலித்தது. அங்கதன் வாயிலி நிற்க இருவரும் இலங்கைக்குள் நுழைந்தனர். திடீரென்று ஹனுமார் திரும்பிச் சென்றார். அங்கதனை எவரேனும் சந்தேகப்பட்டு கொன்று விடலாம் ஆகையால் பாதுகாப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றார். கோபுத்ரனும் அவரை நம்பினார்.
அங்கதனிடம் திரும்பிவந்த ஹனுமார், ராவணனின் உயிர் போல ஒரு போலி உயிரை ( இதயத்தை) உருவாக்கி பேழையில் வைத்துவிட்டு அசல் உயிரை அங்கதனிடம் கொடுத்து இதை கடலுக்கு அடியில் புதைத்து விடு என்றார். அங்கதனுமவ்வாறு செய்யவே ராவணனை ராமன் எளிதாக வீழ்த்த முடிந்தது.

சீதை யார்?
ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த பெண்ணே சீதை என்றும் சிறு வயதிலேயே அவளைக் காட்டில் விட்டதாகவும், ‘தாய்’ மக்கள் நம்புகின்றனர். அந்தக் குழந்தையை ஜனகன் எடுத்து வளர்க்கவே அவள் பெரியவளாகித் திருமணம் முடித்து ராமனுடன் வாழ்கையில் ராவணன் அவளைத் தூக்கிவந்தான் என்றும் ‘தாய்’ மக்கள் கதை சொல்லுவர். அவளை ராவணன் தொட முயன்றபோது ராவணன் உடல் எரியவே அவளைத் தொடாமல் விட்டனன் என்பதும் கதை.
இப்படி ராமாயணத்தைத் தங்கள் கலாச்சார நம்பிக்கைக்கு ஏற்ப தாய் மக்கள் கதை கட்டிவிட்டனர்.
அடுத்த பகுதியில் மேலும் சில சுவையான ராமயண சம்பவங்களைக் காண்போம்.
தொடரும்……………..
— சுபம்—