அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்! (Post No.3371)

Written by S NAGARAJAN

 

Date: 20 November 2016

 

Time uploaded in London: 5-51 am

 

Post No.3371

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாக்யா 18-11-2016 இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அற்ப சண்டைகளை விட ஆகாயத்தைப் பாருங்கள்!

ச.நாகராஜன்

“அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;                                         

     அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை;                      மண்டலத்தை அணுவணு ஆக்கினால்,                                             

     வருவது எத்தனை அத்தனை யோசனை                                              கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,                                        

     கோலமே! நினைக் காளி என்றேத்துவேன்! –ம்காகவி பாரதியார்

 

    2016ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அஸ்ட்ரோபிஸிகல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை பெரும் பிரமிப்பை உலகில் ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபஞ்சத்தைப் பற்றிய நமது அறிவு கொஞ்சமே என்று கூறும் இந்த ஆய்வுப் பேப்பர், ‘உலகில் நூறு கோடிக் கணக்கான (பில்லியன்) காலக்ஸிகள் உள்ளன என்று முன்னர் நினைத்தோம். அது தவறு. இப்போது கிடைத்துள்ள ஆய்வின் முடிவின் படி  பிரபஞ்சத்தில் இரண்டு டிரில்லியன் காலக்ஸிகள் உள்ளன. அதாவது முன்னர் நினைத்ததை விடப் பத்து மடங்கு அதிகம் காலக்ஸிகள் உள்ளன என்கிறது.

 

ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின்னால் 12 பூஜ்யங்களைக் கொண்ட ஒரு பெரிய எண்!  இதை விளக்க ஒரு சிறிய உதாரணம் தரப்படுகிறது. இயேசு பிறந்த அன்றிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு பத்து லட்சம் டாலர்களைத் தினமும் செலவழித்து வந்தால் கூட 2016இல் இன்றைய தினத்தில் நீங்கள் ஒரு டிரில்லியன் டாலரைச் செலவழித்து முடித்திருக்க முடியாது!

 

இன்னொரு விளக்கம்: பத்து லட்சம் விநாடிகள் என்பது 11.5 நாட்கள். ஒரு பில்லியன் விநாடிகள் என்பது 32 வருடங்கள். ஒரு டிரில்லியன் விநாடிகள் என்பது 32000 ஆண்டுகள்!

ஹ்ப்பிள் டெலஸ்கோப் மற்றும் உலகில் உள்ள அதி நவீன சாதனங்களை வைத்துச் செய்யப்படும் ஆய்வின் முடிவாக விஞ்ஞானிகள், “பிரபஞ்சத்தில் உள்ள காலக்ஸிகளில் 90 சதவிகிதம் மிகவும் மங்கலாக உள்ளன. அவை நாம் நம்ப  முடியாத அளவு வெகு வெகு தூரத்தில் உள்ளன என்கின்றனர்!

 

ஒரு காலக்ஸி என்பதில் நூறு நூறு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலமும் பல நூறு கிரகங்களைக் கொண்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் ‘இந்த காலக்ஸிகளில் நமது பூமி போல உள்ள  கிரகங்கள் மட்டும் பல பில்லியன்கள் உள்ளன என்கின்றனர். இவை அனைத்தும் உயிரினங்கள் வாழக் கூடிய கிரகங்களே!

 

இப்போது இரண்டு டிரில்லியன் காலக்ஸிகளை எண்ணிப் பார்த்தால் அதில் பூமி போன்ற கிரகங்கள் எத்தனை கோடி கோடி கிரகங்கள் இருக்கும்? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது, அல்லவா!

பிரபல பத்திரிகையான ஃபோர்பஸ் (Forbes) பூமியில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் 200 காலக்ஸிகள் இருக்கின்றன என்று சுருக்கமாகக் கூறுகிறது.

 

 

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கான்ஸிலிஸ் (Christopher Conselice of University of Nottingham)  என்பவரே இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவர். அவர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள குறிப்பு ஒன்றில், “எதிர்காலத் தலைமுறைகள் கண்டுபிடிக்கும் டெலஸ்கோப்களை வைத்து இவற்றை ஆராயும் போது இன்னும் என்னவெல்லாம் அதிசயக்கத்தக்க செய்திகள் கிடைக்குமோ, யார் அறிவார்? என்று வியந்து கூறுகிறார்!

விஞ்ஞானிகள் எப்படி காலக்ஸிகளின் எண்ணிக்கையைக்  கணக்கிடுகின்றனர்? ஹப்பிள் டெலஸ்கோப் எடுக்கும் படங்களை நுணுக்கமாக ஆராய்கின்றனர். ஹப்பிள் டீப் ஃபீல்ட் என்று அழைக்கப்படும் போட்டோக்களை வைத்து முதலில் நூறு பில்லியன் காலக்ஸிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டன. ஆனால் இப்போதோ அல்ட்ரா டீப் ஃபீல்ட் போட்டோக்களை பார்க்கும் போது ஒரு சிறிய புள்ளியை நன்கு ஆராய்ந்து பார்க்கையில்  அதில் பல கோடி காலக்ஸிகள் உள்ளதை அவர்கள் கண்டு வியக்கின்றனர்.

 

 

ஹப்பிள் டெலஸ்கோப் நிறுவி 26 ஆண்டுகள் ஆகிறது. அது தன் ஆயுளின் முடிவை அடையவிருக்கிறது. இதை அடுத்து ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட இருக்கிறது. அதில் பொருத்தப்படும் பெரிய கண்ணாடியும அதி நவீன சென்ஸரும் இன்னும் என்னென்ன விந்தைகளைச் சுட்டிக் காட்டப் போகிறதோ, விஞ்ஞானிகள் பெருத்த கிளர்ச்சியுடன் காத்திருக்கின்றனர்!

 

இந்த பன்னிரெண்டு பூஜ்யங்கள் போதாது, இன்னும் எத்தனை பூஜ்யங்கள் கூடப் போகிறதோ என்று விஞ்ஞானிகள் வட்டாரத்தில் பரபரப்பான விவாதம் நடைபெற ஆரம்பித்து விட்டது.

 

‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பெரிய ..  பெரிய ..  பெரிய்ய்ய பிரபஞ்சத்தில் அற்ப சண்டைகள் ஏதுக்கு? இதைச் சுலபமாகப் போக்க ஒரே வழி: ஆகாயத்தைப் பாருங்கள். இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் எவ்வளவு அற்பமாக இருக்கிறீர்கள்? இந்த எல்லையற்ற முடிவே இல்லாத பிரபஞ்ச வயதில் நூறு ஆண்டுகள் கூட வாழ முடியாத நீங்கள் எதற்காகவும் தான் இருக்கட்டுமே, சண்டை போடலாமா? கூடாது. இந்த உணர்வைப் பெற ஆகாயத்தில் மின்னும் கோடி கோடித் தாரகைகளைப் பாருங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

இந்தப் புதிய கண்டுபிடிப்பு காட்டும் தத்துவம் உலகை சமாதானத்திற்கு அழைத்துச் செல்வதோடு உள் குடும்ப, பிராந்திய, மொழிச் சண்டைகளுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்து விடும்.

அறிவியலின் வளர்ச்சியில் நாம் அடையப் போகும் மிகப் பெரிய ஆதாயம் நிரந்தர சமாதானம் தானோ! பரஸ்பர ஒற்றுமை, அன்பு,நேசம், ஒத்துழைப்பு, மரியாதை என்று மதங்கள் வலியுறுத்த அதை பௌதிகமாக விஞ்ஞானம் காண்பிக்கையில் மதமும் விஞ்ஞானமும் இணணயப் போகிறதோ!

 

விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவிப்பைக் கேட்கும் இந்தத் தருணத்தில்,

 

மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில்  பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

என்று பிரபஞ்ச மர்மத்தை விடுவிப்பதையும்,

மகாகவி பாரதியார்,

“நக்க பிரானருளால் – இங்கு

    நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்!

தொக்கன அண்டங்கள் – வளர்

    தொகைபல கோடிபல் கோடிகளாம்!

இக்கணக்கெவர் அறிவார்? – புவி

 

   எத்தனை உளதென்பது யாரறிவார் “ (நக்க பிரான் – சிவபிரான்)

என்று அன்றே பற்பல கோடி அண்டங்கள் உள்ளது என்று பாடிய பாடலையும் நினைவு கூர்ந்து தமிழனின் தலை நிமிர வைக்கும் பிரபஞ்ச அறிவை எண்ணி எண்ணி பிரமிக்கலாம்!

உலகின் மிகச் சிறப்பான தினங்களை நோக்கி விஞ்ஞானம் நடைபோடுவது நம்மைப் புல்லரிக்க வைக்கிறது!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. …

இயற்பியலுக்கான நோபல் பரிசை பிரபல விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் (Richard Feynman) 1965ஆம் ஆண்டு பெற்றார். பரிசைப் பெற்றவுடன் அவர் நியூயார்க்கிற்குத் திரும்பினார். திரும்பும் போது, கூட வந்திருந்த இரண்டு விஞ்ஞானிகளுடன் தான் படித்த பழைய பள்ளிக்கூடத்திற்குள் சென்றார். உற்சாகமான வரவேற்பு இருந்தது.  தனது பழைய பள்ளி ரிகார்டுகளை அவர் ஆர்வத்துடன் பார்த்தார். அவரது ஐக்யூ (நுண்ணறிவு  கோஷண்ட்) பற்றி என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பார்த்த போது மிகவும் குறைவான ஐக்யூவே அவருக்குத் தரப்பட்டிருந்தது.

 

உடனே அவர், “நோபல் பரிசு பெறுவது என்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமான விஷயம் இல்லை. ஆனால் இவ்வளவு குறைந்த ஐக்யூ கொண்ட ஒருவன் நோபல் பரிசு பெறுவது என்பது அபூர்வமான விஷயம் தான் என்று கூறினார். அனைவரும் சிரித்தனர்.

 

பள்ளிக் குறிப்பேடுகளில் ‘டல் எனக் குறிப்பிடப்பட்ட பலர் பின்னால் பெரும் மேதைகளாக ஆகி உலகை அசத்தி இருக்கின்றனர். ரிச்சர்ட் ஃபெய்ன்மேனும் அவர்களில் ஒருவர்!

***********