
Written by S NAGARAJAN
Date: 16 June 2017
Time uploaded in London:- 5-46 am
Post No.4005
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
contact: swami_48@yahoo.com

விடமின் டி பற்றாக்குறை உள்ளவர்களா நீங்கள்? (Post No.4005)
ச.நாகராஜன்
திருநெல்வேலியிலிருந்து வெளி வரும் ஹெல்த்கேர் மாத இதழில் மே 2017 இதழில்வெளியாகியுள்ள கட்டுரை
விடமின் டி ஆரோக்கியமான எலும்பைக் கொள்ளவும் உறுதியான பற்கள் மற்றும் தசைகளைக் கொள்ளவும் இன்றியமையாதது.
குளிர்காலத்திலும் இலையுதிர் காலத்திலும் தினமும் இதை துணை உணவாக எடுத்துக் கொள்ளுதல் நலம் என்று முன்னர் ஆரோக்கியத்திற்கான வழியாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போதோ பல ஆய்வுகளின் மூலமாக இதை தினமுமே எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் விடமின் டி அபரிமிதமாகக் கிடைக்கும் ஒரு ஆதாரம் சூரிய ஒளியே.
சூரிய ஒளி செலவில்லாதது. எப்பபொழுதும் கிடைப்பது. பக்க விளைவு இல்லாதது. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சூரிய ஒளிக்குப் பஞ்சமே இல்லை. இதைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் அதைப் போன்ற பிரமாண்டமான தவறு வேறெதுவும் இல்லை.
,மீன் வகைகள், செறிவூட்டப்பட்ட ப்ரெட் ஆகியவற்றிலும் விடமின் டி உள்ளது.
சுவாசக் குழாய் சம்பந்தமான கோளாறுகளை விடமின் டி உள்ள துணை உணவுகள் நீக்கி விடும்.
இதன் மூலம் ஏராளமான அகால மரணங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

சுவாசக் கோளாறு என்பதில் வறண்ட தொண்டை, தொண்டைப் புண், ஜுரம், தும்மல் உள்ளிட்டவையும் அடங்கும்,நிமோனியா போன்ற அதி தீவிர நோய்களும் அடங்கும்.
டாக்டர் ஜகி ஹாஸன் ஸ்மித் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். அவர் தனது ஆய்வு பேப்பரில் விடமின் டி தசைகளின் வலிமையைக் கூட்டுகிறது என்பதைத் தெரிவிக்கிறார். எலும்புகளில் கால்சியம் படிந்து விடுவதையும் விடமின் டி தடுத்து நிறுத்துகிறது. எலும்புகளில் கால்சியம் படிவதனாலேயே ரிக்கட் வியாதி (எலும்புகள் வளைவது) தடுத்து நிறுத்தப்படுகிறது. அத்துடன் Ostomalacia எனப்படும் எலும்புகள் மிருதுவாகும் தன்மையும் தடுத்து நிறுத்தப்படுகிறது.
ஆனால் விடமின் டி வெகுவாக பற்றாக்குறையாக இருந்த்தெனில் துணைஉணவுகள் தேவைப்படும்.
நீஙகள் அபாயகரமான பிரிவில் சேர்ந்தவராக இருப்பின் அதாவது தடித்த தோலைக் கொண்டவராகவோ, அல்லது கர்ப்பிணியாக்வோ அல்லது நான்கு வயதிற்கும் கீழான குழந்தையாகவோ இருப்பின் ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைப் படி நடத்தலே நலம்.
மற்றவர்கள் 10 மைக்ரோகிராம் அளவு விடமின் டி துணை உணவை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் துணை உணவு என்பது கடைசிபட்சமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் துணை உணவால் முதலில் பயன் அடைவது அதைத் தயாரிக்கும் கம்பெனிகளே. அவைகளுக்கு கொழுத்த லாபம் கிடைக்குமளவுக்கு உங்களுக்கு ஆதாயம் உண்டா என்றால் இல்லை என்ற பதிலே வரும்.
ஆகவே இயற்கை தரும் இன் மருந்தான சூரிய ஒளியை அதிகம் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.
ஓளி மயமான வாழ்க்கைக்கு உதவுவது சூரியஒளியே!
**************************