
WRITTEN BY S NAGARAJAN, BANGALORE
Date: 5 January 2016
Post No. 2460
Time uploaded in London :– 5-40 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
வில்லி பாரதம்
உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!
ச.நாகராஜன்
வில்லியின் பாணி
கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. தங்களின் சிற்ப்புத் தன்மைகளை அவர்கள் காட்டிக் கொண்டே போவர்.அதைக் கண்டுபிடிப்பதில் தான் ரஸிகனுக்கு உற்சாகம்.
நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) அப்போது தானே சித்திக்கும்!
வில்லிப்புத்தூராரின் பாணியை ரஸிகனாக உற்சாகத்துடன் பார்க்க ஆரம்பித்தால் ஏராளமான சிறப்பியல்புகளைக் கண்டு பிடித்து அநுபவிக்கலாம்.
ஒரு உவமையைச் சொல்லவே சில கவிஞர்கள் தவிப்பர். ஆனால் இரு அடிகளில் மூன்று உவமைகளை அடுக்கி நம்மை பிரமிக்க வைப்பார் வில்லிப்புத்தூரார்.
இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

மின்னல், வேல், பொன் உவமைகள்
“மின்போல் நுடங்க விடைவேல் விழி நீர் ததும்பப் பொன் போலுருவங் கருகும்படி பூமி போர்ப்ப அன்போடு அவுணர் மடமாதர் அரற்றும் ஓதை என்போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும்”
(நிவாதகவசர் காலகேயர் வதை சருக்கம் பாடல் எண் 102)
அர்ஜுனன் ராட்சஸர்களை வதம் செய்து குவிக்கிறான்.
இறந்து போன ராட்சஸர்களின் மனைவிமார்கள் அழுது புலம்புகின்றனர்.
மின் போல் நுடங்க இடை: அவர்களின் இடைக்கு மின்னலை உவமையாக்குகிறார் கவிஞர். ஒளியும் மெல்லியதாக இருத்தலும் பற்றி இடை மின்னலாக கூறப்படுகிறது.
விழிக்கு வேல் உவமை :- கூர்மை கொண்டது. காம நோயை உண்டாக்கி ஆடவரை வருத்துதலால் விழிக்கு வேல் உவமை.
உருவத்துக்குப் பொன் உவமை: நிறம் பொன் போல ஜொலிக்கிறது. பொன் கிடைத்தற்கு அருமையானது. ஆகவே அருமை மற்றும் நிறத்திற்குப் பொன் உவமை ஆனது.
மட மாதர் என்பதால் அழகும் பேதைமையும் கொண்ட பெண்டிர் என்பது உணர்த்தப்பட்டது.
அவர்கள் அழும் ஒசை எது போல் இருந்தது என்றால் இடி இடிக்கும் ஓசையைப் போல இருந்தது.
உவமைகளின் குவியல் எப்படி அமைகிறது!
இன்னொரு பாடல்!
மின் தாரை, வெண்ணிலா, மேகம் உவமைகள்
“மின் தாரை பட வெண்ணிலா வீசு மேகம் கொல் என வந்து முன் நின்றானை முகநோக்கி நீதிக்கொர் வடிவாம் மன் இவை கூறுவான்
உன் தாதை தமியனோடு உயவாமல் ஒரு வாசமலர் கொண்டிடச் சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான்”
புட்பயாத்திரைச் சருக்கத்தில் 130வது பாடல் இது.
வீமனுக்கு இடிம்பியிடம் பிறந்த புதல்வன் கடோத்கஜன். வீமன் தன்னைக் கலந்து ஆலோசியாது ஒரு புஷ்பத்தைக் கொண்டுவரச் சென்றதை கடோத்கஜனிடம் தர்மர் கூறுவதாக அமைந்த பாடல் இது.
மின் தாரை பட என்பதால் கடோத்கஜனின் செம்பட்ட மயிர் மின் தாரை போல இருந்தது என்பது பெறப்படுகிறது.
வெள் நிலா வீசும் என்பதால் வெண்மையான கோர தந்தங்களை உடையவன் அவன் என்பது பெறப்பட்டது.
மேகம் கொல் என்பதால் கரிய பெரிய வடிவமான காளமேகமோ என்று கூறத் தகும் பெரிய வடிவை உடையவன் அவன் என்பது பெறப்பட்டது.
கடோத்கஜனின் தோற்றம் ஒரு கணத்தில் நம் முன்னர் நிறுத்தப்படுகிறது, அடுக்கு உவமைகளால்!
அவனை நோக்கி, தர்மர், “உன் தந்தை என்னோடு ஆராயாமல் நறுமணம் கொண்ட மலர் ஒன்றைக் கொண்டு வருவதற்காகப் போய் விட்டான் என்று மனம் வருந்தி அன்புடன் கூறி விட்டு மீண்டும் கூறத் தொடங்குகிறான்” என்பதே பாடலின் பொருள்.

கவிதை தரும் இன்பம்
ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம்.
கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம்.
சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.
வில்லி பாரதத்தில் பல பாடல்களில் இப்படி உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதைக் கற்பதால் வரும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை!
வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு!
*******
You must be logged in to post a comment.