
Written by London Swaminathan
Date: 18 June 2017
Time uploaded in London- 8-19
Post No. 4012
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
தமிழில் பழமறையைப் பாடுவோம்- பாரதி
வெற்றி எட்டு திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே-பாரதி
என்றெல்லாம் பாரதி ஏன் பாடினான்?
தமிழில் தெய்வீகப் பாடல்களைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாங்கள் வேதத்தைத் தமிழில் தருகிறோம் என்று ஏன் சொன்னார்கள்?
திருக்குறளைப் பாடிய பல புலவர்கள் வடமொழியில் வேதம் இருந்தது தமிழ் மொழியில் அது இல்லாத குறையைத் திருக்குறள் போக்கிவிட்டது என்று பாடி திருக்குறளைத் தமிழ் வேதம், தமிழ் மறை என்று ஏன் அழைத்தார்கள்?
இதற்கெல்லாம் ஒரே விடை— வேதத்தில் உலகமே போற்றும் அடிப்படை உண்மைகள் இருப்பதே.
அது என்ன அடிப்படை உண்மைகள்?
சத்யம் வத = உண்மையே பேசு
தர்மம் சர = அறப்பணிகளை செய்
மாதா பிதா குரு தெய்வம் = அம்மா, அப்பா, ஆசிரியர் கடவுள்
அதிதி தேவோ பவ = விருந்தினரைக் கடவுளாகப் போற்று.
சர்வேஷாம் சாந்திர் பவது= எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும்.
சர்வேஷாம் மங்களம் பவது = பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
— இப்படி ஏராளமான அடிப்படை உண்மைகள் வேதத்தில் பொதிந்துள்ளன.
இதை எல்லாம் ஏழு வயதில் ஆசிரியர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கற்பித்தனர். இது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும்.

இது உலகிலுள்ள எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடியதே.
உண்மை என்பது அடிப்படையாக இல்லாவிடில் குடும்பத்தில் அமைதி நிலவாது; ஒருவரை ஒருவர் சந்தேகிப்பர்; ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவர்.
உலகில் பல்லாயிரக் கணக்காண ஆண்டுகளாக வாய்மொழி மூலம் மட்டுமே பாதுகாக்கப்பட்டுவரும் பிரமாண்ட நூல் வேதம் ஒன்றுதான். இன்றுள்ள வேதம் பழங்காலத்தில் இருந்ததில் ஒரு சிறு பகுதிதான். ஆயினும் வேதத்தில் உள்ள முக்கியக் கருத்துகள் திருக்குறள், கீதை முதலான நூல்களில் அப்படியே இருப்பதால் நாம் வேதம் கரைந்து விட்டதே என்று கவலைப் பட வேண்டியதில்லை.
இப்போதுள்ள வேதங்களே பிரம்மாண்ட அளவுடையவை; பழங்கால உலகில் இப்படி ஒரு புத்தகம் வேறு எந்த மொழியிலும், வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லை; வேதங்கள், சம்ஸ்கிருத மொழியில் உள்ளன.
ரிக்வேதம்
இது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 1028 துதிகள் உள்ளன. அவைகளில் 10,552 மந்திரங்கள் இருக்கின்றன.
யஜூர் வேதம்
இது வாஜசநேயி சம்ஹிதை, மத்யந்தின என்று பிரிக்கப்பட்டுள்ளது; இதில் 40 அத்தி யாயங்கள் இருக்கின்றன 1975 சிறு பிரிவுகளும் உரைநடைப் பகுதிகளும் காணப்படுகின்றன.
சாம வேதம்
இரண்டு பிரிவுகளாக உள்ளது; ஆயினும் பெரும்பாலும் ரிக் வேத மந்திரங்களே இடம்பெற்றூள்ளன. மொத்தம் 1875 சிறு பிரிவுகள்.
அதர்வ(ண) வேதம்
இது 20 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது ; 730 துதிகள் 5987 மந்திரங்களாகவும் இன்னும் சில உரைநடைப் பகுதியாகவும் இருக்கின்றன.

வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களிடம் கொடுத்து அதைப் பரவச் செய்தார்.
ரிக் வேதத்தில் உள்ள பல துதிகளை, மற்ற மூன்று வேதங்களும் திருப்பிச் சொல்கின்றன (சில மாறுதல்களுடன்); அவைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும் மொத்தம் 16,000 மந்திரங்கள் கிடைக்கின்றன. இது அரும் பொக்கிஷம். மனித இனத்தின் முதல் புத்தகம். அழியாத உண்மைகள் அடங்கிய நூல்.
பல விஷயங்களையும் ரகசிய மொழியில் கூறுவதால் தமிழர்கள் இவைகளை நான் மறை என்றும் அவற்றை ஓதுவோரை நான் மறையாளர் என்றும் சொல்கின்றன. சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வேதமும் வேள்வியும் திரும்பத் திரும்ப வருவதால் குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இவை தமிழகத்தில் வழங்கிய அறிய செய்தி கிடைக்கிறது.
வேதத்தை 3 ஸ்வரங்களில் உயர்த்தியும் தாழ்த்தியும், இழுத்தும் சொல்லுவர்.
உதாத்த- ஏற்றி
ஸ்வரித-
அனுதாத்த- இறக்கி
வேதத்தில் ஒரே சொல் , இந்த ஏற்ற இறக்கத்தினால் பொருள் மாறுபடும்.
வெளிநாட்டினர், வேதங்களை இந்துக்களின் ஆதிகால வரலாறாகப் பார்ப்பர். ஆனால் இந்துக்களுக்கு அது மந்திரங்கள். அதன் பொருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. ஏனெனில் அவைகள் ரஹசிய பொருளுடையவை ஆகையால் சப்தம்தான் முக்கியம் என்பர்.
வேதங்கள் என்றுமுள்ளவை ; ரேடியோ அலைகளை நாம் ரேடியோப் பெட்டி மூலம் கேட்பது போல ரிஷி முனிவர்கள் கேட்டு நமக்குச் சொன்னார்கள்; மனிதர்கள் இயற்றவில்லை என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ஆனால் வெளிநாட்டினரோ இது கவிஞர்களால் இயற்றப்பட்டவை என்பர். எப்படியாகிலும் 400- க்கும் மேலான கவிஞர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடியதும் அதை வாய் மொழியாகவே இது வரை எழுத்து பிசகாமல் ஸ்வரம் தப்பாமல் பாதுகாத்ததும் உலகில் வேறெங்கும் இல்லாத அதிசயம் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர்.
இன்றுளா உலக சமாதானம், மனிதர்கள் எல்லோரும் வளமாக, நலமாக 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது வேதத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொ ல்லப்பட்டதோ அதைவிட மிகப் பெரிய அதிசயம். உலகில் வேறெந்த பழங்கால நாகரீகத்திலும் காணக்கிடக்காத அபூர்வ விஷயம்.
தனித் தனி கட்டுரைகளின் வாயிலாக வேத அதிசயங்களை விளக்குகிறேன்.
–சுபம்-