வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்’- ஒரு குட்டிக்கதை (Post No.5165)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 30 JUNE 2018

 

Time uploaded in London –  11-59 AM (British Summer Time)

 

Post No. 5165

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

வெற்றி வேற்கை/நறுந்தொகை, அதிவீரராமன் யாத்த நூல்

 

 

மஹாபாரத நூலில் இல்லாதது உலகில் இல்லை என்று ஒரு பாரத ஸ்லோகம் சொல்லும். அது உண்மையே.

 

வேதியர்கள் என்போர் தினமும் ஐம்பெரும் வேள்வி நடத்திவிட்டே உண்ண வேண்டும் என்று மநு ஸ்ம்ருதி தெளிவாகக் கூறுகிறது. அது மட்டுமல்ல விருந்தோம்பல் என்பது சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்றும் சொல்லும். அதற்கும் மேலாக விருந்தினர் சாப்பிட்ட பின்னரே ஒரு இல்லறத்தான் சாப்பிடலாம் என்றும் செப்புகிறார்.

 

ஐம்பெரும் வேள்வியை எல்லா வருண த்தார்க்கும் பொதுவாகப் பாடி வைத்திருக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் (குறள் 43; தென்புலத்தார்….)

 

மஹாபாரதத்தில் ஒரு குட்டிக்கதை

சக்துப் பிரஸ்தர் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவர் மநு நீதி சொன்னபடி விருந்தோம்பும் பண்புடையவர். மேலும்  யாசகம் செய்யாவிடில் தானியங்களைப் பொறுக்கி எடுத்தும் வாழலாம் என்று மநு சொல்லியபடி வாழ்க்கை நடத்தியவர். எங்கும் யாசகம் செய்யாமல் வயல்களிலும் வனங்களிலும் விழும் தானியத்தைச் சேகரித்து வாழ்க்கை நடத்தினார். தினமும் விருந்தினர்களையும் உபசரித்தார். ஒரு நாள் சாப்பிடப் போகும் முன் ஒரு விருந்தினர் வந்தார்.

 

அவருக்கு வழக்கமான உணவைப் போட்டும் பசியாறவில்லை. உடனே தனது உணவையும், பின்னர் மகனின் உணவையும் அளித்தார். அப்பொழுதும் விருந்தாளி மேலும் உணவை எதிர்பார்த்து உட்கார்ந்து  இருந்தார். உடனே மனைவி, மருமகள் உணவையும் அளித்தார். அப்பொழுதுதான் அந்த புண்யாத்மா வயிற்றைத் தடவிக்கொண்டு ஒரு ஏப்பம் விட்டு எழுந்தார். ‘அன்னதாதா சுகீ பவ’ என்று வாழ்த்தினார்.

 

இதை எல்லாம் பார்த்த இந்திரன் அவருக்கு எல்லா செல்வத்தையும் அளித்து அனுக்கிரஹித்தார்.

 

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்– குறள் 85

பொருள்:

வந்த விருந்தினரை முதலில் சாப்பிட வைத்துப் பின்னர் மீதி உவை சாப்பிடுவோனுடைய விளை நிலத்தில் விதையே விதைக்க வேண்டாம்; தானாக பயிர்கள் வளரும்

 

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்தவர்க்கு -குறள் 86

பொருள்:-

வந்த விருந்தாளிக்குச் சாப்பாடு போட்டுவிட்டு, அடுத்த விருந்தாளி எப்போது வருவான் என்று காத்திருப்பவனுக்கு தேவ லோகத்தில் உள்ளவர்கள் அருமையான விருந்து அளிப்பர்.

 

மநு சொன்னது எல்லாவற்றையும் வள்ளுவன் சொல்லுவது சிறப்புடைத்து!

அது மட்டுமல்ல; விருந்தோம்பும் பண்பு உலகின் எந்த நூலிலும் ஒரு புண்ணிய காரியமாகவோ, கட்டாயம் செய்யவேண்டிய கடமையாகவோ சொல்லப்படவில்லை. இது இமயம் முதல் குமரி வரை மட்டுமே காணக்கூடியது. ஆரிய- திராவிட வாதம் பேசுவோருக்கு வள்ளுவரும் மநுவும் கொடுக்கும் செமை அடி இது!

–சுபம்–