மாக்ஸ்முல்லர், கால்டுவெல், ஜி.யு.போப் மீது இலங்கை அறிஞர் கடும் தாக்கு

 718_Max_Mueller

Article No.1975

Date: 5  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 12-55

இலங்கையிலுள்ள மட்டக்களப்பு, புளியநகர் ச.பூபால பிள்ளையவர்கள் 1920 ஆம் ஆண்டில் எழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில் காணப்படும் தகவல்:

தமிழ் நலப்பேறு

தமிழிலே பிறந்து தமிழிலே வளர்ந்து தமிழையே பயின்று பாண்டித்தியமடைந்த தமிழர்க்கே தமிழ் நூல்கள் பலவும் இருப்புக் கடலை யொக்குமெனில் பிறசாதியார்க் கவை யென்னொக்குமெனப் பேசவும் வேண்டுமா?

தமிழ் உழைப்பிலே தன் வாழ்நாளைச் செலவிட்டு முப்பகுதியாய் இயற்றமிழிலக்கண மியற்றியும் பல தமிழ் நூலKஅலி அங்கிளத்தில் மொழிபெயர்த்தும் புகழ் நிறுவிய “போப்” ஐயர் தமது திருவாசக மொழிபெயர்ப்பில் “இருகை யானையை யொத்திருந்தென்னுள்ளக் கருவையான் கண்டிலேன் – என்பதனை “Like elephant two handed I saw not my mind’s germ” என்று மொழிபெயர்த்து, இரண்டு கரங்களையுடைய யானையே இரு கை யானை எனப்பட்டதாகத் தாங்கொண்ட விபரீத கருத்தை விளக்கிவிட்டனர். இவர் மயக்கத்தை எடுத்துக்காட்டி விளக்கப்புகுந்த மற்றோர் இந்திய தமிழ் பண்டிதர் யானையினது துதிக்கை கரம் போலப் பரிசித்தலும், நாசிபோல முகத்தலுமாகிய இரு தொழிற்குரிய ஒரு கருவியாகலின் “இருகை யானை” எனப்பட்டதென்றனர். இவ்விருவரோ சிறந்த மகா பண்டிதராயிருந்தும் ஒரு அற்ப சொல் விளக்கத்தில் தன் வலி தானறியா யானைபோல் மயக்கமுற் றிருநிலத் தியானை கண்ட குருடரை யொத்தனர். “தென்மொழி” நாளடைவிற் கறைப்பட்டுத் “தமிழ்” என வந்ததாகச் சாதிப்பவருள் இப் “போப்” ஐயரும் ஒருவரே. திருவாசக மொழிபெயர்ப்பில் விபரீதார்த்தங்கள் இன்னும் பல காணலாம்.

G__U__Pope_Tamil_Poet

வீரமாமுனிவர் (ரெவரெண்ட் பெஸ்கி) எனப்பெயர் கொண்ட மற்றொருவர் தொன்னூல் விளக்கம், தேம்பாவணி முதலிய நூல்களியற்றிய பெருந்திறர் கவிஞரென்றாலும் அவரிடமும் தமிழ்நலம் வாய்க்கவில்லை யென்பதற்குச் சான்று தேம்பாவணியிற் செறிந்துள்ள வழூவுக்களேயாம்.

இயல்பிலே சிறந்த நாடகமயிலினாட்டத்துக்கும் கற்று நடிக்கும் வான்கோழியினாட்டத்துக்குமுள்ள தாரதம்மியம்  எத்தூரமோ அத்தூரமே நாநலம் வாய்ந்த செந்தமிழ்ப் புலவர் கவிக்கும் அஃதமையாக் கற்றுச் சொல்லியோர்க் கவிக்குமிடையிலு மென்றுணர்க. இயல்பில் ஐரோப்பியரின் தேச நிலையும் மனக் கிளர்ச்சியும் பழக்கவழக்கங்களும் கீழ்திசையினர்க்கு முற்றாய் மாறுபடலின் இரு கவிதைகளுமொக்கு மாறில்லை.

வடமொழிக் கடலி னெடுநாட் டிளைத்துப் பல நூல்களை அங்கிளத்தில் மொழிபெயர்த்தருளிய “மாக்ஸ்முல்லர்” ஏமாந்த விதத்துக்கோருதாரணம் வேண்டின் மெய்மையாகியாகிய இருக்குவேத சுத்தப் பிரதியொன்றையும் அவர் செய்த ருக்வேத மொழிபெயர்ப்பையும்  பொருந்த ஒட்டிப்பார்த்துத் தெளிக. தமிழ் ஆராய்விற் புக்க மற்றும் ஐரோப்பிய பண்டிதர்களான “கால்டுவெல்”, “உவில்சன் ஆசிரியர்” அதியோர்தாமும் என் கண்டனர்? என் உணர்ந்தனர்? தமிழ் நூல்களை உண்மை தெளிய உணர்ந்தாராயின் தமிழர்க்குரிய சமய உண்மையையுஞ் சிறிதாயினும் கண்டுணர்ந்திருப்பர். அங்ஙன முணர்ந்தஞான்றே தங்கள் மதாசாரங்களை யெல்லாம் கைவிட்டிருப்பரன்றோ?

தமிழ் ஞான குரவர்கள் எவ்வாற்றானும் பக்குவமுள்ள சீடர்க்கேயன்றி மற்றெவர்க்கும் வேத மெய்ப்பொருள்களையும் ஞானோபதேசங்களையும் எளிதில்  வெளிவிடார்.

பிராஞ்சி தேசத்தவரும் தமிழிலே மிக்க பண்டிதரெனக் கவனிக்கபடுபவருமான யூலியன் வின்சன் என்பவர் தமிழிலே ஆதி நூல்களாயுள்ளன கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவைகளன்றி முன்னெழுதப்பட்டவைகள் இல்லை என்றும் தென் இந்தியாவில் தமிழ் எழுத்துக்கள் வழக்கத்தில் வந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் மத்தியென்றும் ஆறாம் நூற்றாண்டுக்கு முன் எழுதியதான கல்வெட்டு முதலிய குறிப்புகள் யாதும் காணப்பட்டதாகத் தாமறியவில்லை யென்றும் சென்னையிற் பிரசுரமாகுஞ் சித்தாந்த தீபிகையில் 1901 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 31ந் திகதி எழுதிவிட்டனர். அம்மம்ம! இவர் எழுத்து யாருக்குத்தான் நகையை விளைவிக்காது?

இன்னோரன்ன பண்டிதர் பலரும் தாந்தாஞ் சென்ற துறைதொறும் அனுமான அளவையால் கண்டுபெற்ற யொன்றை மாத்திரமே நிசமெனக் கொண்டு பிற அளவைகலால் சாதித்துப் பெறக்கூடியவற்றைப் பேணாதகன்றனர்”.

மேற்கண்டது ச.பூபால பிள்ளியவர்கள் எழுதியது.

YANAI ASI

எனது கருத்து

இரு கை யானை என்றால் என்ன?

திருவாசகத்துக்கு விளக்கவுரை எழுதிய சுவாமி சித்பவானந்தர் போன்றோரும் இரு கை யானைக்கு இரண்டு கைகளையுடைய யானை என்றே எழுதியுள்ளனர். அதாவது ஜி.யு.போப் போலவே எழுதியுள்ளனர். திருவவடுதுறை ஆதீன வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் எழுதிய உரையில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.

இரு கை யானை = இரண்டு கைகளையுடைய யானை போல; அதாவது ஒரு கையால் உண்டால் போதாது என்று இரண்டு கைகள் இருந்தால் எப்படி உண்ணுமோ அப்படி இரண்டு கைகளால் உண்பது போல நான் இருக்கிறேன்

இரு கை யானை = யானை ஒரே துதிக் கையால் சுவாசிக்கிறது. அதே கையால் உணவையும் உண்ணுகிறது. அதாவது மூக்கும், கையும்.

இரு கை யானை= யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும். அதே போல உன்னுடைய அருளைப் பெற்றும் பரகதி என்பதை மறந்தேன். நீ வா என்று அழைத்தும் யானை நன்றி மறப்பது போல உன்னை மறந்தேன்.

இரு கை யானை = இது இரண்டு கைகளையுடைய ஆசானைக் குறிக்கும். யானை தன்னுடலை அறியாதது போல என்னுள்ளக் கருவை நான் அறியேன்.

இன்னும் சிலர் யானையை பிரணவத்துடன் ஒப்பிடுவர்.

இராமாயணத்தில் கம்பனும் “இருகையின் கரிநிகர் எண்ணிறந்தவர்” என்று ஒரு பாடலிலும், “இருகை வேழத்திராகவன்” என்று இன்னொரு பாடலிலும் சொல்லுவார். இரு கை ராகவன் என்பது இராமனையும் மந்திரிமார்களையும் குறிப்பிடும் என்பர்.

சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இரு என்பது இருங்கடல், இருங்கண், இருங்கதிர்கள், இருங்கதுப்பு, இருங்கரை, இருங்கயம் என்று பல இடங்களில் வரும். அங்கு எல்லாம் ‘இரு’ என்பது ‘பெரிய’, ‘நீண்ட’, ‘கரிய’ என்ற பொருளிலேயே வருகிறது. இதை அப்படியே யானைக்கும் ஒப்பிட்டால் மிகவும் சரியாக இருக்கும்:

இருங்கை யானை = பெரிய யானை, கரிய யானை, நீண்ட கையுடைய யானை. ஆகவே இரண்டு (2) என்று எண்ணுப் பொருள் கொடுப்பது தவறே. பூபாலபிள்ளையவர்கள் கூறுவது சரியே என்பது என் கருத்து.