இசைபட வாழ வைக்கும் வைடூரியம்! (Post No.7369)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 22 December 2019

Time in London – 6-33 am

Post No. 7369

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

21-12-2019 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ச.நாகராஜன்

இசைபட வாழ வைக்கும் வைடூரியம்

நீங்கள் ஒரு இசைக் கலைஞரா, பேச்சாளரா, கல்லூரியிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்ப்பவரா, உங்கள் சொல்லை மற்றவர் மதித்து நடக்க வேண்டிய தலைமை இடத்தில் இருப்பவரா, உங்களுக்கெனவே இருக்கிறது வைடூரியம் என்னும் அபூர்வ ரத்தினம். நவ ரத்தினங்களுள் ஒன்றான இதை ஆங்கிலத்தில் கேட்ஸ் ஐ – (Cat’s Eye) என அழைக்கின்றனர். தோன்றில் புகழொடு தோன்றுக என்று ஆணையிட்ட வள்ளுவர் ஈதல் இசைபட வாழ்தல் -அதாவது புகழுடன் வாழ்தல் – உயிருக்கு ஊதியம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

குரல் வளம் சிறக்கவும் இசைபட – புகழுடன் – வாழவும் பெரிதும் உதவுவது வைடூரியம்!

இலக்கியம் புகழும் வைடூரியம்

பழைய காலத்திலிருந்தே அனைத்து நாகரிக மக்களும் கொண்டாடிய கல் வைடூரியம்.

செய்வினை, மந்திர சக்தி, மரணம் ஆகியவற்றிலிருந்து இது ஒருவரை காப்பாற்ற வல்லது என்று பழைய நாகரிகத்தினர் பெரிதும் நம்பினர். அராபியர்களோ பெரும் யுத்த களத்தில் இதை அணிந்தால் மறைந்து இருந்து மாயாவியாகப் போர் புரிய முடியும் என்று நம்பினர்.

சிலப்பதிகாரத்தில், ஊர் காண் காதையில் “தீதறுக் கதிரொளி தெள் மட்டு உருவவும்” என்று குறிப்பிடப்படும் வரியினால் (வரி 189) ‘குற்றமற்ற கதிரவனின் ஒளி போலவும் தெளிந்த தேன் துளி எனச் சொல்வதற்கு ஒத்த உருவமும் உடையது வைடூரியம்’ என்பது தெரிய வருகிறது.

இராமாயணத்தில் அயோத்தி நகரமும் இலங்கையும் வைடூரியக் கற்களினால் ஜொலிப்பது பல இடங்களில் அழகுற வர்ணிக்கப்பட்டுள்ளது.

ரஸ ஜல நிதி தரும் சுவையான செய்திகள்

வைடூரியம் பற்றி மிகப் பெரும் பண்டைய நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை : –

இந்தக் கல் காம-பூதி நாட்டின் எல்லையில் உள்ள மிக உயரமுடைய மலையான விதுர மலையில் தோண்டி எடுக்கப்படுகிறது. (காம-பூதி என்பதைக் கம்போடியா என அறிஞர்கள் ஆய்வு செய்து சொல்கின்றனர்). இந்தக் கல்லின் உள்ளே பார்த்தால் ஊஞ்சலாடும், கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற குறி தெரியும்!

வைடூரியத்தின் வகைகள்

இந்தக் கல் மூன்று வகையாக இருக்கிறது. 1) மஞ்சளுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது 2) சிவப்புடன் நீல வண்ணம் கலந்திருப்பது 3) வெள்ளையுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது

வைடூரியம் மூன்று விதங்களில் கிடைக்கும் 1) பச்சை மூங்கில் இலை வண்ணத்துடன் இருப்பது 2) மயிலின் கழுத்தில் ஜொலிக்கும் வண்ணத்துடன் இருப்பது 3) பூனையின் கண்ணில் இருக்கும் கபில வண்ணம் போல இருப்பது.

இந்த அனைத்து வகைகளிலும் சிறந்த வைடூரியம் என்று கூறப்படுவதன் குணாதிசயங்கள் இவை :- கனமாக இருப்பது, வழ்வழுப்புடன் இருப்பது, பொதுவான குறைகளான கோடு, கீறல், பள்ளம். புள்ளி போன்றவை இல்லாமல் இருப்பது (முந்தைய பல ரத்தினங்களுக்காக சொல்லப்பட்ட குறைகள் இருக்கக் கூடாது),ஒளி ஊடுருவிப் பிரகாசிப்பது ஆகியவை கொண்ட கற்களை அணியலாம்.

கறுப்பு வண்ணத்துடன் இருப்பது, நீர் வண்ணம் கொண்டது, தொப்பி வடிவம் கொண்டது, இலேசானது, கரடுமுரடாக இருப்பது, சிவப்பு வண்ணத்துடன் கூடிய, ஊஞ்சலாடும் கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற தோற்றத்துடன் இருப்பது ஆகியவை விலக்கப்பட வேண்டியவையாகும்.

நல்ல ஒரு வைடூரியத்தை அணிந்தால்,

ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு நீங்கும்,

அறிவு மேம்படும்,

ஆயுள் நீடிக்கும்,

வலிமை கூடும்,

பித்தத்தினால் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நீங்கும்,

ஜீரண சக்தி கூடும்,

மலம் இளகி நீங்கும்.

ஒரு நல்ல வைடூரியத்தை எப்படிக் காண்பது எனில் அதை உரைகல்லில் வைத்து உரசிப்பார்த்தால் அது ஒளி விட்டுப் பிரகாசிக்கும்.

இப்படிப்பட்ட அரிய செய்திகளை ரஸ ஜல நிதி மூலமாக அறிகிறோம்!

கேட்ஸ் ஐ என்ற வார்த்தை எப்படி வந்தது?

க்ரைசோபெரில் (Chrysoberyl) என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்தக் கல்லின் நடுவே ஒளியைப் பாய்ச்சினால் உள்ளே பூனையின் கண்ணைப் போல இருக்கும் வடிவைக் காணலாம். அதனால் தான் இது கேட்ஸ் ஐ என்ற பெயரைப் பெற்றது.  கேட்டோயர் (chatoyer) என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது கேட்ஸ் ஐ என்ற வார்த்தை.

ஜோதிட சாத்திரம் கூறும் உண்மைகள்

ஒரு ஜாதகத்தில் கேது தசை நடந்தாலோ அல்லது கேது புக்தி நடந்தாலோ இதை அணிவது நலம் பயக்கும். கேது வைடூரிய ஆபரணத்தை அணிந்தவன் – வைடூர்ய விபுஷண தாரணாயாம் – என்று கேது தியான ஸ்லோகம் கூறுகிறது.

 சாயா கிரகம் எனப்படும் நிழல் கிரகமான இந்தக் கேதுவினால் ஏற்படும் சில தோஷ பலன்களை நீக்க வைடூரியம் அணியலாம்; உடனே தீய பலன்கள் நீங்கி விடும். குறிப்பாக சர்ப்ப கிரக தோஷம் என்ற தோஷத்தால் புத்திர பாக்கியம் தாமதப் படுவோர் இதை அணிந்தால் சீக்கிரமே புத்திர பாக்கியம் கை கூடும்.

வைடூரியத்தில் அதன் நடுவில் இருக்கும் கோடு தான் அதற்கு அழகூட்டுகிறது. இதை ரத்தின சாஸ்திரம் சூத்ரம் என்று அழைக்கிறது. இந்த சூத்ரம் இருபுறமும் முழுவதும் ஓடுவதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி அணிந்தால் தைரியம் கூடும்; தெய்வ பலமும் சேரும்.

எண் கணிதத்தில் 7 என்ற எண்ணுக்குரியது வைடூரியம். ஆகவே 7 எண் (7,16,25 ஆகிய தேதிகள்) பிறந்த தேதியாக இருந்தாலோ அல்லது கூட்டு எண் ஏழாக அமைந்தாலோ வைடூரியம் நல்ல பலன்களை அளிக்கும்.

வைடூரியத்திற்கு கேது ரத்னம், சூத்ர மணி என்று வேறு பெயர்களும் உண்டு.

பிரபலங்களின் ஸ்பெஷல்!

இதை மோதிரமாகவோ பதக்கமாகவோ அணியாத பிரபலங்களே இல்லை எனலாம். குறிப்பாக வாக்கு சக்தியை இது கூட்டும், குரல் வளம் ஓங்கும் என்பதால் இசைக் கலைஞர்களும், பேச்சாற்றல் உள்ளவர்களும் இதை அணிகின்றனர்.

ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர் இதை அணிவது வழக்கம். அத்துடன் அபாயகரமான விளையாட்டுக்கள் மற்றும் மலையேறுவது, சூதாடுவது போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு ஆபத்துக்களை விலக்கிப் பாதுகாப்பளிப்பதும் வைடூரியமே. சில அபூர்வமான வைடூரியக் கற்கள் இரு வண்ணங்களைச் சரி பாதியாகக் கொண்டிருக்கும். ஒரு பக்கம் இலேசான வண்ணம் மற்றொரு பக்கம் அடர்த்தியான வண்ணம் கொண்டிருக்கும் இந்த வகைக் கற்களை பால்-தேன் விளைவைக் (Milk and Honey effect) கொண்டிருப்பது என்று கூறுவர்.

அறிவியல் தரும் தகவல்கள்

இதன் ரசாயன சமன்பாடு : BeAl2O4                                   மோ அலகின் படி இதன் கடினத் தன்மை : 8.5                  இதன் ஒப்படர்த்தி (Specific Gravity ) :  3.5 – 3.84

அறிவியல் வளர்ச்சியால் வைடூரியம் செயற்கை முறையிலும் தயாரிக்கப்பட ஆரம்பித்து விட்டது. இது இயற்கையான வைடூரியம் போலவே தோற்றம் அளிக்கும். இயற்கை வைடூரியத்தையும் செயற்கையினாலான சிந்தடிக் வைடூரியத்தையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் எது இயற்கை, எது செயற்கை என்று இனம் காண்பது மிகவும் கடினம். வெவ்வேறு வண்ணங்களில் கூட செயற்கை வைடூரியம் கிடைக்கிறது. ஆனால் நமக்கு வேண்டிய நல்ல பலன்களுக்காக நாம் நாட வேண்டியது இயற்கையில் கிடைக்கும் வைடூரியக் கற்களை மட்டுமே தான்!

பலனை எதிர்பாராமல் ஃபேஷனுக்காக அணிபவர்கள் சிந்தடிக்கை நாடலாம்.

19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கன்னாட் டியூக் (Duke of Connaught) வைடூரியம் பதித்த மோதிரத்தை நிச்சயதார்த்த மோதிரமாக கொடுத்த போது இது மிகவும் பிரபலமானது.

வைடூரியத்தைப் பற்றிய சுவையான ரோமானியக் கதை ஒன்று உண்டு. வ்ரிணா என்ற ஒரு இளவரசி ரோம் நகரத்தை ஆண்டு வந்தாள். அவளிடம் வைடூரியப் பதக்கம் பதித்த மாலை ஒன்று இருந்தது. 

ஒரு பெரிய யோகி அவளிடம், ஒரு போதும் அந்தப் பதக்கத்தை அவள் அணியாமல் இருக்கக் கூடாது என்றும் மிகவும் மோசமான கால கட்டத்தில அந்தப் பதக்கம் அவளை அந்த நிலையிலிருந்து மீட்கும் என்றும் மிருகங்களுடன் பேசும் சக்தி அப்போது அவளுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு சமயம் மழை பொய்க்கவே நாடெங்கும் பஞ்சம் தலை விரித்தாடியது. இளவரசி ஏழ்மை நிலை அடைந்து வருந்தினாள். அனைத்து செல்வமும் இழந்த நிலையில் செய்வதறியாது அவள் திகைத்த போது  ஓவென அவள் அழ ஆரம்பித்தாள். அப்போது பூனையின் கண் போல கண்கள் கொண்ட ஒரு பல்லி அவள் அருகில் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தது. “இளவரசியே, அழாதே!  நதியின் வறண்ட கரைப் பகுதிக்கு செல். உனக்குத் தேவையானது அங்கு கிடைக்கும். இழந்த நிலையை நீ மீண்டும் பெறுவாய்” என்றது அது. உடனே வ்ரிணா தன் படை வீரர்களுடன் நதிக் கரையை அடைந்து அங்கு தோண்ட ஆரம்பித்தாள். என்ன ஆச்சரியம்! வைடூரியச் சுரங்கம் ஒன்றை அவள் கண்டாள். ஏராளமான வைடூரியக் கற்களை அவளால் வெட்டி எடுக்க முடிந்தது. அந்தக் கற்கள் மூலமாக இழந்த செல்வம் மீண்டும் வர பெரும் ராணியானாள் அவள். இந்தக் கதை ரோமானிய நாகரிகத்தில் மிகவும் பிரபலமாக சொல்லப்பட்ட கதை.

இதிலிருந்தே இழந்த செல்வத்தை மீண்டும் தரும் வைடூரியத்திற்கு ரோமானியர்கள் எவ்வளவு மதிப்புக் கொடுத்தனர் என்பதை அறியலாம்!

கிடைக்கும் இடங்கள்

இலங்கையின் பல பகுதிகளில் அருமையான வைடூரியம் கிடைக்கிறது.

பிரேஜில், சீனா, தாய்லாந்து, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்போது வைடூரியம் கிடைக்கிறது.

இந்தியாவில் திருவனந்தபுரம் மற்றும் மலபார் பகுதிகளிலும், ஒரிஸாவின் சில பகுதிகளிலும் வைடூரியம் கிடைக்கப் பெறுகிறது.

தேவி இருக்குமிடத்தில் வைடூரிய பிரகாரம்

தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தம் பதினொன்றாம் அத்தியாயம் மணித்வீபத்தைப் பற்றி வர்ணிக்கிறது.

மணித்வீபம் என்பது பிரம்ம லோகத்திற்கு மேல் உள்ள உலகம். இதில் தேவி வசிக்கிறாள். அவள் வசிக்குமிடத்தில் உள்ள பிரகாரங்கள் வர்ணிக்கப்படுகையில் வஜ்ர பிரகாரத்திற்கு மேலுள்ள பிரகாரமாக அமைவது வைடூரிய பிரகாரம். இங்குள்ள ராஜ மார்க்கம், வாபி, தடாகம், கால்வாய், மணல் எல்லாமே வைடூரியம் தான்! பிராம்ஹி, மாஹேஸ்வரி,கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்களும் வசிக்கும் இடம் இது. இவர்களோடு மஹாலக்ஷ்மியும் இங்கு வாசம் செய்கிறாள். பிரகாரத்தின் துவாரங்களில் திரிமூர்த்திகளுடைய வாகனங்களான அன்னம், கருடன், ரிஷபம் ஆகியவை வெகு ஜாக்கிரதையுடன் (எக்கணத்திலும் புறப்படச்) சித்தமாயிருக்கும்.

இன்னும் பல செய்திகளைத் தரும் இந்த வர்ணனை பிரமிப்பூட்டும் ஒன்று. லக்ஷ்மி வாசம் செய்யும் இடம் வைடூரிய பிரகாரம் என்பதை அறியும் போது செல்வ வளத்தை வைடூரியம் கொடுக்கும் என்ற இரகசியம் பெறப்படுகிறது.

செல்வ வளத்துடன் இசைபட வாழ அனைவரும் வைடூரியத்தை வணங்கி வரவேற்று அணிவோம்!

****

அடுத்த கட்டுரையுடன் இந்த நவரத்தினத் தொடர் நிறைவுறும்.