மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ – (Post No.5361)

Direct Disciples of Sri Ramakrishna Paramahamsa. Swami Vievekananda, Swami Abhedanadda and others are in the picture.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 8-13 AM (British Summer Time)

 

Post No. 5361

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நான் ஏன் இந்து? அபேதாநந்தா- PART 2

மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ –  (Post No.5361)

 

ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகரான சுவாமி அபேதாநந்தா, எப்படி ராமக்ருஷ்ண பரமஹம்ஸரால் ஈர்க்கப்பட்டார் என்பதை நேற்று முதல் பகுதியில் கண்டோம். இதோ இரண்டாவது பகுதி:-

 

“பின்னர் நான் அக்காலத்திய பிரபலங்கள் எழுதிய வானவியல், உளவியல், இயற்பியல் புஸ்தகங்களைப் படித்தேன். சுவாமி விவேகாநந்தருடன் சேர்ந்து புத்த மத நூல்களையும் அத்வைத வேதாந்தத்தையும் கற்றேன். ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமிருந்து த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் அறிந்தேன்.

 

1886-ல் ராமகிருஷ்ணர் சமாதி அடைந்தவுடன் நான் சந்யாசம் எடுத்தேன். அப்போதுதான் அபேதாநந்தா என்ற பெயரைப் பெற்றேன். இந்து மதத்தின் ஆறு பிரிவுகள், உபநிஷத்துகள், பாணினியின் ஸம்ஸ்க்ருத இலக்கணம், வல்லபர், நிம்பகர் எழுதியவற்றையும் படிக்க நேரம் கிடைத்தது.

காலில் செருப்பு இல்லாமல் ஊர் ஊராகச் சுற்றினேன். மக்கள் இட்ட பிச்சை உணவை மட்டுமே சாப்பிட்டேன். வாழ்க்கையின் நிலையாமை, ஆத்மாவின் நிலைத்த தன்மை ஆகியன மனதில் நின்றதால் நிறைய கஷ்டங்களை வலிய ஏற்றேன். பல விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்தேன். கங்கை, யமுனை நதிகள் தோன்றுமிடம் வரை சென்று இமய மலைக் குகைகளில் மூன்று மாதம் வசித்தேன். கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இருந்த அந்த இடத்தில் இருந்துகொண்டு தியானம் செய்தேன். இப்போதைய வாழ்வு ஒரு கனவு போன்றது என்று உணர்ந்து பத்து ஆண்டுகளுக்கு  பாரத நாட்டை வலம் வந்தேன்.

 

கேதார்நாத், பத்ரிநாத், த்வாரகா, புரி, ராமேஸ்வரம் முதலிய புண்ய ஸ்தலங்களுக்குச் சென்றேன். பெரிய மஹான்களான த்ரைலிங்க ஸ்வாமி, பாஸ்கராநந்தா ஆகியோரை வாரணாசியில் தரிசித்தேன். காஜிபூரில் பவஹரி பாபா தரிசனம் கிடைத்தது. பிருந்தாவனத்தில் வைஷ்ணவப் பெரியோர்களையும், ரிஷிகேஷில் வேதாந்த விற்பன்னர்களையும் பார்த்தேன். அந்தக் காலத்தில் வேதாந்த விஷயத்தில் கீர்த்திவாய்ந்த தனராஜ் கிரியிடம் ரிஷிகேஷில் வேதாந்தம் படித்தேன்.

 

1893-ல் சுவாமி விவேகாநந்தர் சிகாகோ சர்வமத பார்லிமெண்டில் பேசிய பின்னர் மூன்றாண்டுகளுக்கு மேலை நாடுகளில் புகழ்பெற்ற பிரசங்கங்களை நிகழ்த்தினார். லண்டனில் ராஜ யோகம், ஞான யோகம் பற்றி உரைகள் ஆற்றினார். 1896-ல் என்னையும் உதவிக்கு அழைத்தார். 1896-ஆகஸ்டில் கப்பலில் கலகத்தாவிலிருந்து லண்டனுக்குப் பயணமானேன். என்னுடைய முதல் லண்டன் சொற்பொழிவு கிறிஸ்தவ-பிரம்மஞான சபையில் நிகழ்ந்தது. என்னை லண்டனில் ஞான யோக, ராஜ யோக வகுப்புகளை எடுக்கச் சொல்லிவிட்டு சுவாமி விவேகாநந்தா 1897- இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

 

லண்டனில் நான் இருந்தபோது மாக்ஸ்முல்லரையும் 60 உபநிஷத்துகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்த பால் டாஸன் (MAX MULLER AND PAUL DEUSSEN) என்பவரையும் பார்க்க, விவேகாநந்தர் அழைத்துச் சென்றார். மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் பேசவும் தெரியாது; பேசினால் புரிந்து கொள்ளவும் முடியாது. ‘எனது நாக்கும் காதுகளும் ஸம்ஸ்க்ருத உச்சரிப்புகளுக்குப் பழக்கப்படவில்லை’ என்று அவரே ஒப்புக்கொண்டார். ஆகையால் அவரிடம் ஆங்கிலத்தில் பேசினேன்.  ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விஷயத்தில் அவர் மிகவும் அக்கறை காட்டினார். மாக்ஸ்முல்லர் சொன்னார், ” ராமகிருஷ்ணர் சுயமாக சிந்திப்பவர். ஏனெனில் அவர் பல்கலைக்கழகங்களில் வேதாந்தம் கற்கவில்லை; இதனால் அவரது உபதேசங்களும் புதுமையாகவும் பூர்வீக உண்மைகளாகவும் உள.” அவர் இப்படிச் சொன்னது என் மனதில் அவர் பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கியது. இதற்குப் பின்னர் மாக்ஸ்முல்லர் ராமகிருஷ்ணரின் வாழ்வும் உபதேசங்களும்  (LIFE AND SAYINGS OF RAMAKRISHNA) என்ற ஆங்கில நூலை வெளியிட்டார்.

1897-ல், சுவாமி விவேகாநந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கப்பலில் அட்லாண்டிக் கடலைக் கடந்து நியூயார்க் சென்றேன். அங்கு அவர் துவக்கி இருந்த வேதாந்தக் கழகத்தில் (VEDANTA SOCIETY) ஆறே மாதங்களில் வேதாந்தம் பற்றியும் பதஞ்சலியின் யோக சாஸ்திரம் பற்றியும் 90 சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். நல்ல கூட்டம் வந்தது. வேதாந்தக் கழகத்தின் தலைவர் என்ற அந்தஸ்தில் நாள்தோறும் கடோபநிஷத், பகவத் கீதை வகுப்புகளையும் எடுத்தேன்.

 

1898ல் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ், (PROFESSOR WILLIAM JAMES) அவரது இல்லத்தில் பரப்பிரம்ம ஐக்கியம் பற்றி (UNITY OF THE ULTIMATE REALITY) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நான்கு மணி நேரத்துக்கு விவாதம் நடந்தது. பேராசிரியர்கள் ராய்ஸ், லான்மேன், ஷேலர், கேம்பிரிட்க் டாக்டர் ஜேம்ஸ் (PROFESSORS ROYCE, LANMAN, SHALER AND DR JAMES OF CAMBRIDGE) ஆகியோர் எனது வாதத்தை (UNITY) ஆதரித்துப் பேசினர்.

 

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில் விரிவான சுற்றுப் பயணம் செய்து,  ஜொராஸ்தர், டாவோ, ஷின்தோயிஸம், புத்தர், கிறிஸ்து, முகமதுநபி ஆகியோரின் போதனைகள் பற்றிப் பேசினேன். திபெத்தில் வழங்கும் லாமாயிஸம்  முதலிய எல்லாம் ‘உலகத்தை உய்விக்க வந்த மஹான்கள்’ (GREAT SAVIOURS OF THE WORLD LECTURES) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

 

1921ம் ஆண்டில் பஸிபிக் மஹா சமுத்திரத்தைக் கடந்து ஹவாய், ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மலேயா முதலிய நாடுகளில் சொற்பொழிவாற்றிவிட்டு கல்கத்தாவுக்குத் திரும்பினேன்.

1922ம் ஆண்டில் கால்நடையாக இமயமலையில் நடந்தேன்; காஷ்மீரிலிருந்து திபெத்துக்குச் சென்று லாமாயிஸம் (திபெத்திய பௌத்தம்) பற்றி அறிந்தேன். எனது இலக்கு லடக்கிலுள்ள லே என்னும் இடத்திலிருந்து 25 மைல் தொலைவில் இருந்த ஹெமிஸ் பௌத்த மடாலயம் (HEMIS MONASTERY, 25 MILES FROM LEH) ஆகும்.

 

1923ம் ஆண்டில் கல்கத்தவுக்குத் திரும்பினேன். ராமகிருஷ்ண வேதாந்த கழகத்தைத் துவங்கி இன்று வரை அதன் தலைவராக இருக்கிறேன் . டார்ஜிலிங் நகரில் வேதாந்த ஆஸ்ரமத்தைத் துவக்கினேன்.

 

என்னுடைய இந்த வாழ்க்கைச் சரிதம் எனது மதத்தில் நான் ஏன் ஆழ்ந்த பற்றுக் கொண்டேன் என்பதையும் அதற்குக் காரணமாக இருந்த   அம்சங்களையும் சக்திகளையும் விளங்கிக் கொள்ள வாசகர்களுக்கு உதவும்”.

 

1936 ஆம் ஆண்டில் வெளியான புஸ்தகத்தில் உள்ள கட்டுரை இது.

சுவாமி அபேதாநந்தா-

தோற்றம் -2-10-1866;

மறைவு- 8-9-1939

 

–சுபம்-