
WRITTEN BY S NAGARAJAN
Date: 4 November 2016
Time uploaded in London: 5-51 AM
Post No.3317
Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend ; thanks.
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 15
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 71.
அரசாங்கம் மடாலயங்களின் சொத்துக்களுக்கு எந்த வரியையும் விதிக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்ததிலிருந்து யுனான் மாகாணத்தில் மிக்க அமைதி நிலவியது.
யுனானின் வைசிராய் லி ம்டாலயத்திற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி ஸு யுன்னின் நலம் பற்றி விசாரித்தார்.
ஏராளமான பரிசுகளையும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.
மடாலயங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிகளை ஸு யுன் வகுத்ததோடு அதை அணுவளவும் பிசகாது பின்பற்றும்படியும் செய்தார்.
கோடைகாலத்தில் திடீரென்று ஒருநாள் ஸு யுன்னின் வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. ஸு யுன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து இன்று வரை நடந்ததை எண்ணிப் பார்த்தார்.
மளமளவென்று கவிதைகளாக வர ஆரம்பித்தன.
அவற்றைப் படித்துப் பார்த்த மத்திய அரசின் தலைமைச் செயலர் உபாசகர் சென் யுங் சாங் அவற்றை கல்வெட்டுக்களாக கல்லில் பொறித்தார்.
ஸு யுன்னுக்கு இப்போது வயது 72. வருடத்தில் வ்சந்த காலத்திலும் கோடை காலத்திலும் தியான வகுப்புகள் நன்கு நடைபெற்றன. ஒன்பதாவது மாதத்தில் வூசாங் மாகாணத்தில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டது, பின்சுவான் நகர் முற்றுகையிடப்படுவது நிச்சயம் என்ற நிலை உருவானது. உடனே ஸு யுன் களத்தில் இறங்கி மத்யஸ்த பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினார். ஒரு சின்னத் தவறினால் தவறுதலாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொணட கமாண்டர் லி ஜென் யுயான் தன் படைகளோடு காக் ஃபுட் மவுண்டனைச் சுற்றி வளைத்து விட்டார்.
ஆனால் ஸு யுன்னின் சரியான விளக்கத்தைக் கேட்ட பின்னர் மிக்க திருப்தியுற்றுத் தன படைகளை அவர் விலக்கிக் கொண்டார்.
குளிர் காலம் தொடங்கியது. ஸு யுன்னுக்கு சீன புத்த சங்கத்திலிருந்து ஒரு தந்தி வந்தது. சீன புத்த் சங்கத்திற்கும் ஷாங்காயில் உள்ள யுனிவர்ஸல் புத்திஸ்ட் சொஸைடிக்கும் ஏற்பட்டுள்ள தகராறைச் சரி செய்ய உடனே வாருங்கள் என்ற அழைப்பு தந்தியில் இருந்தது. உடனே நான் ஜியாங் நகர் சென்ற ஸு யுன் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் புத்த சங்கத்தின் தலைமையகம் ஜிங்-ஆன் ஆலயத்தில் அமைக்கப்படுவதென்று ஒரு மனதாக முடிவானது.
இதையடுத்து மாஸ்டர் ஜி-சானுடன் ஸு யுன் பீகிங் சென்றார். அங்கு ஃபா யுவான் மடாலயத்தில் இருவரும் தங்கி இருந்தனர். ஒரு நாள் தியான நிலையில் அமர்ந்திருக்கும் போதே மாஸ்டர் ஜி சான் நிர்வாணம் எய்தினார்.
அவரது இறுதிச் சடங்கை நடத்திய ஸு யுன் அவரது சவப்பெட்டியை ஷாங்காய் எடுத்துச் சேன்றார். புத்த சங்கத்தின் த்லைமையகம் அங்கு துவங்கப்பட்டது. மாஸ்டர் ஜி-சானுக்கும் ஒரு நினைவு விழா நடத்தப்பட்டது. அனைவரும் மகிழ்ந்தனர்.
யுனானுக்கு ஸு யுன் திரும்பும் தருணத்தில் உபாசகர் லி ஜென் யுவான் கவர்னர் கெய்-ஓ விற்கு ஒரு அறிமுகக் கடித்ததைக் கொடுத்தார். அவர் மூலம் புத்த தர்மம் செழிக்க வேண்டும் என்ற அவா அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கடித்தத்துடன் ஸு யுன் யுனானுக்குத் திரும்பினார். புத்த தர்மம் செழிப்பதற்கு அவர் செய்ய வேண்டிய ப்ணிகள் நிறைய இருந்தன!
-தொடரும்