Research article written by S Nagarajan
Research Article No. 1626: dated 6th February 2015
by ச.நாகராஜன்
பாரதத்தின் தேசீய வீரனாகவும் தெய்வமாகவும் திகழ்பவர் ஸ்ரீ ராமர்.
தமிழ் திரைப்படங்கள் பாரதப் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் தமிழ் திரையுலகில் ராமர் சித்தரிக்கப்பட்டிருப்பதை ஏராளமான படங்களும் பாடல்களும் சுட்டிக் காட்டுகின்றன.
வால்மீகி முனிவர் ராமரின் சரித்திரத்தை 24000 ஸ்லோகங்களில் விவரித்து ராமாயணமாகப் படைத்தார். அதை பாரதம் தேசீய நூலாக ஏற்றுக் கொண்டுள்ளது. ராமரின் வரலாறை அன்றாடம் கேட்பதே ஒரு பாக்கியம் என்பது தான் ஒரு சாதாரண இந்தியனின் மனோபாவமாக இருந்து வருகிறது.
‘ஏகைகம் அக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்’ – அதில் ஒரு எழுத்தைச் சொன்னாலும் கூட அது மஹா பாதகத்தையும் போக்கி விடும் என்பதே வால்மீகி முநிவரின் வாக்கு. அதுவே நம் அனைவரது நம்பிக்கையும் கூட.
ஒரு ஸ்லோகம் என்பது நான்கு பாதங்களைக் கொண்டிருக்கும். இப்படி அமைக்கப்பட்டுள்ள 24000 ஸ்லோகங்களில் ஒரு பாதத்தையும் கூட மாற்ற முடியாது, இடைச் செருகல் செய்ய முடியாது என்பதை அதில் ஊறி அனுபவித்த மஹாகவி கம்பன் கூறுகிறான் இப்படி:
“வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்”
மாற்ற முடியாதபடி சொற்கள் உள்ள வால்மீகியின் பாதங்கள் அமைந்த ராமாயணத்தை அவன் இனிய கவிதைகளால் தேவரும் பருகும்படி செய்தான். அப்படிப்பட்ட மஹாமுனி புகழ்ந்த கோசல நாட்டை அன்பெனும் கள்ளைக் குடித்து விட்டு ஊமை உளறுவது போல மொழிய ஆரம்பித்து விட்டேன் என்பது இதன் திரண்ட பொருள்.
எப்படிப்பட்ட உலகின் தலையாய மஹாகவி கம்பன்! அவனது அவையடக்கச் செய்யுள் இது! அவனே வியக்கும் அரும் கவி வால்மீகி.
பாரத மக்கள் அனைவருடைய லட்சிய புருஷராக ஒருவரை வால்மீகி மையப்படுத்திக் காட்டுவது சாதாரண விஷயமல்ல. அந்த ராம சரித்திரம் இன்று வரை மங்காமல் நாளுக்கு நாள் மெருகேறிப் புகழோங்கி வழங்கப்பட்டு வருகிறது.
அதைத் தமிழ் திரையுலகம் தமிழ் மக்களின் மேன்மைக்காகவும் ரசிப்பிற்காகவும் அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது.
சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
1968ஆம் ஆண்டு மலர்ந்த படம் லக்ஷ்மி கல்யாணம். ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெற்றது. சிவாஜி கணேசன். எஸ்.வி.ரெங்காராவ், பாலாஜி, சோ, சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா என ஏராளமான நட்சத்திரங்கள். எம்.எஸ். விசுவநாதன் இசை அமைத்த இந்தப் படத்தில் பெண் பார்க்கும் படலம் ஒன்றில் அழகிய வீணையை மீட்டி வெண்ணிற ஆடை நிர்மலா பாட அதை பெண் பார்க்க வந்த பாலாஜி மெய்மறந்து கேட்க அருகில் சிவாஜி கணேசன்,வி.எஸ்.ராகவன். வி.கே.ராமசாமி, பழம் பெரும் காமடி நடிகர் கருணாநிதி, சோ உள்ளிட்ட அனைவரும் ரசிக்க பாடல் மலர்கிறது.
பாடலை எழுதியவர் ராம பக்தியில் தோய்ந்த ஒருவர் – கண்ணதாசன். பாடலின் கடைசி வரிகளில் லட்சோப லட்சம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தார். முதல் வரிகளிலோ அற்புத பட்டியல் ஒன்றை சித்தரித்து விட்டார். பாடல் இதோ:
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)
கல்யாண கோலம் கொண்ட – கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த – சீதாராமன்
அரசாள வந்த மன்னன் – ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த – சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)
தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)
வம்சத்திற்கொருவன் – ரகுராமன்
மதங்களை இணைப்பவன் – சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் – ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் – அனந்தராமன்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
அற்புதமான இந்தப் பாடலின் ஏற்றத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன், சுந்தரராமன், கோசலராமன்,தசரதராமன்,கோதண்டராமன்,
ஸ்ரீஜெயராமன்,ரகுராமன்,சிவராமன் என்று அடுக்கிக் கொண்டே போன கவிஞர் எண்ணிக்கையற்ற தன்மையை நினைத்து அனந்தராமன் என ராமன் அனந்தம் என்று முத்தாய்ப்பாகக் கூறுவது நூல்களின் முடிந்த முடிபல்லவா! ராமஜெயத்தை நம்பியோர்க்கு ஏது பயம் என்றும் கூறி அனைவரும் அவரது அபய்மாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் கவிஞர். பி.சுசீலா தனக்கே உரித்த மென்மைக் குரலில் உருகிப் பாடும் இந்தப் பாட்டில் 18 முறை ராமர் வருகிறார்!
ஏராளமானோர் பங்கு பெறும் இந்தக் காட்சியில் பெண்பார்க்கும் படலத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தை சிருஷ்டித்து விட்டனர் கலைக் குடும்பத்தினர்.
இப்படிப்பட்ட ராமர் பாடல்களைப் பாடுவது நமது வாழ்க்கை முறை என்பதைப் படம் சித்தரிக்கிறது!
இந்த ராமனை மனதில் ஏற்றிக் கொண்டு தமிழ் திரைப்படங்களில் ராமரைத் தேடி யாத்திரயைத் தொடங்குவோம்.
-தொடரும்




You must be logged in to post a comment.