
Written by London Swaminathan
Date: 9 June 2017
Time uploaded in London- 15-45
Post No. 3986
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

ஹனீமூன் — தேன் நிலவு — பற்றிய உண்மைச் சம்பவங்கள்; எட்டுக்கட்டியதல்ல– மொழி பெயர்த்தவர் சுவாமி நாதன்.
காரி க்ராண்ட் (Cary Grant) என்பவர் பார்பரா ஹுட்டன் (Barbara Hutton) என்ற பெண்மணியை மணந்துகொண்டார். தேன் நிலவுக்குப் போக முடியவில்லை. காரணம்–
முன் ஒரு காலத்தில் தேன் நிலவு (Once upon a Honeymoon) – என்ற படத்துக்காக அவர் அதே இடத்தில் இருக்க வேண்டியதாயிற்று; என்ன விந்தை? ஹனீமூனே ஹனீமூனை கெடுத்துவிட்டது!
xxxx
ஸ்நேக் சார்மர்! Snake Charmer
திடீர்க் காதல் — இருவரிடையே! நீண்ட நாள் கல்யாணம் தாமதமாகியது; பிறகு ஓடிப்போய்தான் திருமணம் செய்ய நேரிட்டது. இதெல்லாம் முடிந்து ஹனீமூனுக்குப் போனபோது தனது காதலி ஒர் பாம்பாட்டி (Snake Charmer) என்பது தெரிய வந்தது.
அடிக் கள்ளீ! இவ்வளவு காலமாகக் காதலித்தோம்; ஒரு நாளும் நீ பாம்புப் பிடாரி என்பதைச் சொல்லவில்லையே என்று கோபமும் கொஞ்சலும் கலந்த தொனியில் கணவன் கேட்டான்.
அட, நீங்க ஒண்ணு; நீங்களாவது நான் பாம்பாட்டியா என்று கேட்டிருக்கக் கூடாதா? என்றாள் அந்த மேதாவி!
XXX

ஹனீ, ஓ, ஹனீ! கதவைத் திற;
புது மணத் தம்பதியர் புதிய நாட்டில் புதிய நகரத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு ஹோட்டலில் தங்கினர். சில நாட்களில் நல்ல பழகிப் போனவுடம் அந்த இளம் பெண் மதிய வேளையில் சாமான்கள் வாங்க கடைத் தெருவுக்குப் போனாள்; கணவன், அவள் எப்படித் திரும்பி வரவேண்டும், எப்படி லிப்டி(Lift)லிருந்து இறங்கி எந்தப் பக்கம் திரும்பி எத்தனையாவது அறைக்கு வரவேண்டும் என்றெல்லாம் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தான்.
அப்பெண்ணும் “அத்தான்! கவலையை விடுங்கள் அரை மணி நேரத்தில் அறைக்குத் திரும்புவேன்” என்று பகர்ந்து வெளியே போனாள்.
ஹோட்டலுக்கு அரை மணி நேரத்தில் சாமான்களுடன் திரும்பியும் வந்தாள். லிப்டில் பலர், பல மாடிகளில் இறங்க வெவ்வேறு பட்டன்களை அமுக்கினர். இந்தப் பெண தவறான மாடியில் தனது மாடி என்று நினைத்து வெளியே வந்து விட்டாள். கணவன் சொன்ன கட்டளைகளை அப்படியே பின்பற்றி தனது அறை என்று அவள் தப்புக் கணக்குப் போட்ட அறையின் கதவுக்கு வந்தாள்.
புது மணப் பெண் அல்லவா?
குனிந்த தலை நிமிரவில்லை!
கொஞ்சும் குரலில், “அத்தான்! அத்தான்!! கதவைத் திறங்கள்; நான் தான்!”– என்றாள். கதவு திறக்கவில்லை!
சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு மீண்டும் “அத்தான்! அத்தான்!! கதவைத் திறங்கள்; நான் தான்!”– என்று உரத்த குரலில் கூவினாள்.
உள்ளே இருந்து கோப த்வனியில் கர்ண கடூரமாக ஒரு குரல் ஒலித்தது:
“அத்தானும் இல்லை; குழம்புத் தானும் இல்லை! இது சமையல் அறையும் இல்லை; இது பாத் ரூம் (குளியல் அறை)”.
அந்தப் பெண் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிப் போய் தனது சரியான அறையைக் கண்டுபிடித்தாள்
XXX

டிக்கெட்டை எடுத்துக்கிட்டீங்களா?
கல்யாணம் என்றாலே மப்பிள்ளைகளுக்குப் பெண்களை விடக் கொஞ்சம் கூடுதல் உதறல்தான்; ஏனெனில் பெண்ணுக்குத் தோழிகளும், அம்மா மார்களும் மற்ற உறவுப் பெண்களும் எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிடுவர்.
அப்பாவி ஆண்மகனுக்கோ எவரும் உதவவும் மாட்டார்; அந்தப் பிள்ளையாண்டானுக்கு சகோதரனிடம் கேட்கக்கூட வெட்கம். இந்த சூழ் நிலையில் ஒரு இளம் தம்பதியினரின் கல்யாணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மறு நாள், காரில் ஏற்றி ஸ்டேஷனில் இறக்கிவிட எல்லோரும் வந்தனர். ஸ்டேஷனில் ரயில் வரப்போகும் அறிவிப்பும் வந்தது.
புதுமணப் பெண் வெட்கத்தோடு, என்னங்க, என்னங்க, அத்தான்; உங்களைத்தான், டிக்கெட்டெல்லாம் எடுத்து வச்சீங்களா பைக்குள்ள?
மாப்பிள்ளைக்கு ‘பகீர்’ என்றது. வேக மாக கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்; ஒரு டிக்கெட் (Only one Ticket) மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது.
அதை “அவளும் நோக்கினாள்; அண்ணலும் நோக்கினான் ”
என்ன பதில்சொல்ல என்று திணறிப் போனான் மாப்பிள்ளைப் பையன்.
நல்ல வேளை! நிறைய தமிழ் சினிமா பார்த்து இருந்ததால் தக்க வசனம் வாயில் வந்தது!
“தேனே! மானே! கண்ணே! கற்கண்டே!
உன்னைப் பார்த்த நாள் முதல், நான் என்னையே மறந்து விட்டேன்; இதோ உன் டிக்கெட்” என்று கையில் கொடுத்தான்”.
சினிமா வசனம் பேசினாலும் முகத்தில் அசடு வழிந்தது!
“போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று வீட்டுக்குத் திரும்பி வந்தனர்!
–சுபம்–